Tuesday, December 9, 2014

காமராஜரின் எளிமையும் நேர்மையும்

கதர் ஆடை அணிந்திருந்ததால் எளிமையான தோற்றம் அவருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. அவருடைய ஒவ்வொரு செயலிலும் எளிமையைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. உயர் பதவி வகிப்பவர்களுக்கே உரிய நியாயமான குறைந்தபட்ச பந்தாகூட அவரிடம் இல்லாதிருந்தது.
ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போவதற்கு முன், தன்னைப் பார்க்க வந்த எல்லாரும் போய்விட்டார்களா என்று வைரவனிடம் கேட்பார். போய்விட்டார்கள் என்று சொன்ன பிறகும், இன்னொரு ரவுண்டு போய் பார்த்துவிட்டு வரச் சொல்வார். காரணம் கேட்டதற்கு, சில பேர் வெட்கப்பட்டு, பயப்பட்டு ஒதுங்கி நின்றுவிடுவார்கள். கடைசியில் பார்க்க முடியாமலே ஊர் திரும்பிவிடுவார்கள். ஏழைகளாக இருப்பார்கள். மறுபடியும் வரவேண்டுமெனில், செலவு செய்ய வேண்டும். பாவம், அதனால்தான், என்று பதில் சொன்னார்.
ராஜஸ்தான் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க விரும்பியபோது அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
ஒருமுறை அவர் காரின்முன் சைரன் ஒலியுடன் போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தது. சைரன் ஒலியை என்ன என்று கேட்டு விசாரித்துவிட்டு, காரை நிறுத்தச் சொன்னார்.
இனிமேல் செத்துப்போய்விட்டவர்களுக்கு சங்கு ஊதிக்கொண்டு போவது மாதிரி சைரன் ஒலித்துக் கொண்டு முன்னால் செல்ல வேண்டாம் என்றும், அது போன்ற வீண் செலவுகள் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி, அந்த வழக்கத்தையே நிரந்தரமாக நிறுத்தச் சொன்னார்.
ஒருமுறை வெளியூர் போய்விட்டு திரும்பும்போது, காரிலேயே தூங்கிக்கொண்டு வந்தவர் ஏதோ சப்தம் கேட்டு விழித்துக்கொண்டார். கார் சைதாப்பேட்டை மர்மலாங் (மறைமலையடிகள்) பாலம் அருகே நின்றுகொண்டிருந்தது. ட்ராபிக் ஜாம்.
ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும்தான் இருந்தார். வாகனங்களை நெறிப்படுத்தி அனுப்ப தனி ஆளாக நின்று அவர் திணறிக்கொண்டிருந்தார்.
உடனே காமராஜர் கீழே இறங்கி அவரும் அந்த போலீசோடு சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவினார். அதோடு நின்று விடாமல் சைதை போலீஸ் நிலையத்துக்கும் போய், அது போன்ற இடங்களில் இன்னொருவரை கூடுதலாகப் போட்டால் என்னன்னேன் என்று கண்டித்துவிட்டும் வந்தார்.

No comments:

Post a Comment