ரோஜா வளர்ப்பு! சில யோசனைகள்...
செடியின் உயரத்திற்கு ஒன்றரை பங்கு ஆழமும், அதன் அகலத்தை விட இரண்டு பங்கு அகலமும் கொண்ட குழியை வெட்டிக்கொள்ளவும். அடியில் ரோஜா உரத்தை இட்டு அதன் மேல் இயற்கை எரு மற்றும் செம்மண் கலவையை ஒரு அடுக்குக்கு நிரப்பவும். சிறிதளவு உரத்தை மண்ணின் மேற்பகுதியிலும் தெளிக்க வேண்டும். இப்போது ரோஜாச்செடியை அதன் பை அல்லது தொட்டியிலிருந்து மென்மையாக எடுத்து குழியில் வைக்கவும். செடியின் மண் விளிம்பு புதிதான குழியின் விளிம்பை ஒட்டியிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
செடியில் வேர்களை ஜாக்கிரதையாக சுத்தம் செய்து விடவும். இதனால் வேர் புதிய மண்ணை ஏற்றுக்கொள்வதற்கும், வேர் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். அடுத்து குழியை மண், இயற்கை எரு, சிறிது உரத்தெளிப்பு என்று மாற்றி மாற்றி நிரப்பி மூடவும். நன்கு நீர் ஊற்றி திரும்பவும் ஒரு அடுக்கு மண்எரு உரத்தெளிப்பு என்று நிரப்பவும். நீர் நன்கு உறிஞ்சப்பட்டபிறகு திரும்பவும் மண் இயற்கை எருக்கலவையால் நிரப்பவும். கடைசியாக ஈரம் காயாமல் இருக்க சிறிது செத்தைகளை லேசாக புதிய மண்பரப்பின் மீது பரப்பி விடவும்.
பூச்சிகள் மற்றும் இலைப்புழுக்கள் ரோஜா செடியை தாக்காமல் இருக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய பூச்சிக்கொல்லி கலவையாக அரை ஸ்பூன் விம் வாஷிங் திரவத்தை (அல்லது வேறு பிராண்ட் சோப்புத்தண்ணீர்)கால் லிட்டர் தண்ணீரில் கலந்து ரோஜாச்செடியில் நன்கு தெளிக்கவும். இது இலைப்புழுக்கள் மற்றும் கம்பளிப் பூச்சிகள் போன்றவற்றை அழித்து விடும்.
பழுத்த இலைகள் தானே விழும் என்று காத்திருக்க வேண்டாம். அழுகும் நிலையில் இலைகள் தெரிந்தால் உடனே அவற்றை அகற்றிவிடவும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இலைகள் காட்சியளித்தால், இரும்புச்சத்து அல்லது நைட்ரஜன் சத்துக்குறைபாடு என்று அர்த்தம். செடியை சீக்கிரம் வளர்க்கிறேன் என்ற ஆர்வக்கோளாறில் அதிகம் நீர்வார்த்துக்கொண்டே இருக்க கூடாது. தொட்டியில் அல்லது செடிக்குழியின் மேல்பாகத்தில் 3 அல்லது 4 அங்குல ஆழ மண் வறட்சியடையும்போது நீர் ஊற்றினால் போதும். கொஞ்சம் செடியின் மீதும் நீரை தெளிக்கலாம். தினமும் ரோஜாச்செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ரோஜா செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மிக அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் 6 மணி நேரமாவது செடியில் வெயில் விழுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதே சமயம் ஈரப்பதம் அதிகம் இல்லாத இடத்தை பார்த்து வைப்பதும் முக்கியம். ரோஜா செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் எவ்வளவு பெரிதாக வருமோ அந்த அளவுக்கு இடைவெளி விட்டு நட வேண்டும். ரோஜா செடிகளை மண்ணில் நடுவதற்கு முன்பு மண் அமிலப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மண் அமிலத்தன்மை எனப்படும் ஜீபி விகிதாச்சாரம் 5.5 முதல் 6.6 வரை இருப்பது ரோஜாச்செடிகள் செழிப்புடன் வளர மிகவும் அவசியம்.
கோடைக்காலத்தின் போது ரோஜாச்செடிகளுக்கு காலையிலேயே நீர் ஊற்றுவது சிறந்தது. அப்போதுதான் இரவு வருவதற்குள் மண் உலர்ந்த நிலைக்கு வர வசதியாக இருக்கும். குளிர்காலம் அல்லது வெப்பநிலை குறைவாக இருக்கும் காலங்களில் 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றினாலே போதுமானது. இதுபோன்று, ரோஜா செடிகளை முறையாக பராமரித்தால், செடியின் வளர்ச்சியும் பூக்களின் மலர்வும் செழிப்பாக இருக்கும்.
“செடியை சீக்கிரம் வளர்க்கிறேன் என்ற ஆர்வக்கோளாறில் அதிகம் நீர்வார்த்துக்கொண்டே இருக்க கூடாது. தொட்டியில் அல்லது செடிக்குழியின் மேல்பாகத்தில் 3 அல்லது 4 அங்குல ஆழ மண் வறட்சியடையும்போது நீர் ஊற்றினால் போதும்.
No comments:
Post a Comment