காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.