Friday, August 22, 2014

இந்த வருடத்தின் (2014) முதல் ஹஜ் விமானம் ஆகஸ்ட் 27ல் இந்தியாவிலிருந்து பயணிக்கிறது!

வருகிற ஆகஸ்ட் 27 அன்று இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்ரீகர்கள் சவுதி அரபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புனித ஹஜ் யாத்ரீகளுடன் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு மதீனா சென்றடைகின்றனர்.
அதுபோல் ஏர் இந்திய மூலம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்திலிருந்து ஹஜ் யாத்ரீகள் ஜித்தா சென்றடைகின்றனர்.
இந்த வருடம் 360 விமானங்களில் மொத்தம் 136,020 ஹஜ் யாத்ரீகள் இந்தியாவில் உள்ள 21 விமான நிலையங்கள் இருந்து தனது புனித கடைமைக்காக சவூதி வருகின்றனர். இதில் 100,020 பேர் இந்திய ஹஜ் கமிட்டி மூலமும் 36,000 பேர் தனியார் ஹஜ் சர்வீஸ் மூலமும் செல்கிறார்கள்.
இதில் 55,000 க்கு அதிகமான ஹஜ் யாத்ரீகள் மதீனாவிலும், 44,810 யாத்ரீகள் ஜித்தா ஹஜ் முனையத்தில் வந்திறங்குகின்றனர்.
இதுபற்றி ஜித்தாவில் உள்ள இந்திய துணைத்தூதர் பி.எஸ். முபாரக் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
“இந்த வருடம் சவூதி அரேபியாவில் முதல் முறையாக கூகுள் மேப்பிங் அடிப்படையில், குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) தொழில்நுட்பத்தில் “Indian Haji Accommodation Locator” என்ற மென்பொருளை இந்திய ஹஜ் கமிஷன் சார்பில்அறிமுகம் செய்துள்ளோம். இந்த மென்பொருளை பயனாளர்கள் தங்களது கைபேசியில் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் தொலைபேசி மென்பொருளை தரவிறக்கம் செய்ய:https://play.google.com/store/apps/details?id=com.cgijeddah&hl=en
ஆப்பிள் தொலைபேசி மென்பொருளை தரவிறக்கம் செய்ய: https://itunes.apple.com/us/app/indian-haji-accommodation/id906644462?ls=1&mt=8
என்ற சுட்டியை கிளிக் செய்யவும்.
இந்த மென்பொருளை வைத்துக்கொண்டு ஹஜ் யாத்ரீகளின் கவர் நம்பர் அல்லது பாஸ்போர்ட் நம்பர்-ஐ வைத்துக்கொண்டு மக்கா, மினா மற்றும் மதினா -வில் அவர்கள் தங்கும் விடுதிகளின் விபரங்களை தெரிந்துக்கொள்வதோடு, கூகுள் மேப் மூலியமாகவும் வழியை தெரிந்துக்கொள்ளலாம்.
ஹஜ் யாத்ரீகள் தங்களது அடையாள அட்டையை மறந்துவிட்டாலும், தங்களது கைகளில் இருக்கும் அடையாள வளையத்தை வைத்து ஹஜ் மிஷனில் உள்ள ஊழியர்கள், தன்னார்வலர்கள் இந்த மென்பொருள் மூலமாக உடனே இவர்கள் தங்கும் இடத்தை கண்டுபிடுத்து விடலாம்.
ஹஜ் பயணிகள் குறித்த விபரங்களை துணைதூதரகத்தின் ‘ஹஜ் மிஷன்’ முகநூல்(https://www.facebook.com/pages/Haj-Mission-Indian-Consulate-Jeddah/244886735720937)பக்கத்திலும் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறோம்.
ஒவ்வொரு ஹஜ் யாத்ரிகளுக்கும் சவூதி சிம் கார்ட் கொடுப்பதுடன் மக்கா மற்றும் மதினா பேருந்துக்கான டிக்கெட்டுகளையும் அவரவர்கள் ஹஜ் பயணம் புறப்படும்போது இந்திய விமான நிலையங்களில் கொடுத்து வருகிறோம். ஹஜ் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் அவ்வப்போது குறுந்தகவல் மூலம் யாத்ரீகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதுபோல் ஹஜ் யாத்ரீகள் மக்கா, மதினா மற்றும் ஜித்தா விமான நிலையத்தில் பெறும் சேவை தொடர்பாக குறைப்பாடுகள் இருந்தால் ஆன்லைனில் புகார் தெரிவிப்பதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் மொத்தம் 45,772 பெண்கள் ஹஜ் செய்கிறார்கள், அதில் 70 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 13,127 ஆகும். முதியவர்களுக்கு ஹரம் ஷரீபிற்கு அருகில் தங்குவதற்கான விடுதிகள் வழங்கப்படும்.
இந்த வருடம் மொத்தம் 360,000 பேர் ஹஜ் செய்வதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அதில் 136,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். தற்போது மக்காவில் விரிவாக்கப்பணி நடைப்பெறுவதால் சென்ற வருடம் முதல் 20 சதவிகித ஒதுக்கீடை அனைத்து நாடுகளுக்கும் சவூதி அரசாங்கம் குறைத்து விட்டது. அதனால் ஐந்தில் ஒருவருக்கு தான் இந்திய அரசாங்கத்தால் வாய்ப்பளிக்க முடிந்தது. இந்த பிரச்சனை பெரும்பாலும் 2016-ல் சரியாகும் என்று நினைக்கிறேன்.
முதன் முதலாக இந்த வருடம் மதினாவில் ஹஜ் யாத்ரீகளுக்கு கேட்டரிங் கம்பெனி மூலமாக மதிய உணவும், இரவு உணவும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு ஹஜ் யாத்ரீகளும் தனியாக 120 சவூதி ரியால் கொடுக்கவேண்டும். இது சென்ற ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து வந்த ஹஜ் கமிட்டி உயர் மட்ட குழு ஏற்பாட்டால் கையெழுத்தானது.
அனைத்து ஹஜ் யாத்ரீகளும் மதினா, ஹரம் ஷரீபிலிருந்து 850 மீட்டர் சுற்றளவில் தங்கும் விடுதி கொடுக்கப்படும், அதில் 65 சதவிகித யாத்ரீகளுக்கு மத்திய ஹரம் பகுதியில் தங்கும் விடுதி கொடுக்கப்படும்.
பச்சை கேட்டகிரியில் வந்துள்ள சுமார் 35,000 ஹஜ் யாத்ரீகளுக்கு ஹரம் ஷரீபிலிருந்து 1500 மீட்டருக்குள் தங்கும் விடுதி ஏற்பாடு செய்துள்ளோம், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு யாத்ரீகள் அசீசியாவில் தங்க வைக்கப்படுவார்கள்.
இவ்வருடம் உத்தரபிரதேசம் மாநிலத்திலிருந்து அதிகப்படியாக 24,323 ஹஜ் யாத்ரீகள் வருகிறார்கள், அதுபோல் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியிலிருந்து குறைந்த பட்சமான 26 ஹஜ் யாத்ரீகள் வருகிறார்கள்.
நாங்கள் செய்து வரும் சேவையால் நிச்சயம் ஹஜ் யாத்ரீகள் பயனடைவார்கள். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் யாத்ரீகளுக்கு ஹஜ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த படம் திரையிடப்படுகின்றன. அதுபோல் ஹஜ் சம்பந்தமாக யூ-டியூபிலும் இதன் விபரங்கள் உள்ளன.
முதன் முதலாக இந்த முறை 300 ஹஜ் தன்னார்வலர்களுக்கு முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பேட்டியின் போது உதவி தூதரக அதிகாரியும், ஹஜ் கன்சலுமான முஹம்மது நூர் ரஹ்மான் ஷேக் மற்றும் பிரஸ் கன்சல் இர்ஷாத் அஹமது உடனிருந்தனர்.
இந்திய துணைத்தூதர் பி.எஸ். முபாரக் கடந்த 2008 முதல் 2011 வரை ஜித்தாவில் நான்கு வருடம் ஹஜ் கன்சலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த IFS அதிகாரியாகும்.

No comments:

Post a Comment