ஆயுர்வேதத்தில் அஸ்தி தாதுவின் மலமாக முடி சொல்லப்பட்டுள்ளது. தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் எனும் சிரோ அப்யங்கம் நமது கலாசாரத்தின் ஒரு அங்கம். தென் பகுதிகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். வடப் பகுதிகளில் குளித்து முடிந்து நன்றாக உலர்ந்த பிறகு, எண்ணெய் தேய்ப்பார்கள். முடி வளர்வதற்குத் தேங்காய் எண்ணெயில், மற்றப் பொருட்கள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட எண்ணெய்களே சிறந்தவை.
முதலில் முடியை நன்றாகச் சுத்தி செய்வதற்கு ஒரு மருந்தை எடுத்துக்கொண்டு (20 கிராம் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் இரவு எடுத்துவிட்டு), பிறகு சிகிச்சையைத் தொடங்கலாம். வீட்டிலேயே எளிமையாகத் தைலம் காய்ச்சிக் கொள்ளலாம்.
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சலாம். இந்த எண்ணெயை முடிக் கால்களில் படுவதுபோல் தேய்க்க வேண்டும். 20 நிமிடம் வரை விடலாம்.
பொடுகு அதிகம் உள்ளவர்கள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயை புளிக்காத மோருடன் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். இளநரை உள்ளவர்கள் அகஸ்திய ரசாயனம் தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். கடுக்காயும், தசமூலமும் முக்கியப் பொருளாக உள்ளன.
மற்றவர்கள் நரசிம்ம ரசாயனம் எனும் லேகியத்தைச் சாப்பிடலாம். பாலும் எள்ளுருண்டையும் சாப்பிடலாம். இரும்புச் சத்தை அதிகரிக்கக் காந்தச் செந்தூரம் (500 மி.கி.) மாத்திரையில் 2 மாத்திரையை மதியம் சாப்பிடலாம். பித்தத்தின் வேகத்தைத் தணிப்பதற்காக அணு தைலமோ, மதுயஷ்டியாதி தைலமோ மூக்கின் வழியாக 2 துளிகள் விட்டுக் கொள்ளலாம்.
எக்காரணம் கொண்டும் பிறர் பயன்படுத்திய சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும். முடியைக் குறைவாக வெட்ட வேண்டும். ஒரு வருடமாவது பொறுத்திருக்க வேண்டும். இன்று எண்ணெயைத் தேய்த்துவிட்டு நாளை முடி வளரவில்லையே என்று வருத்தப்படக் கூடாது.
முடி வளர 60 மூலிகைகள் உள்ளன. எல்லா மருத்துவர்களும் இந்த மூலிகைகளை மாற்றி மாற்றி போட்டே விளம்பரம் செய்கிறார்கள். பல நேரங்களில் விளம்பரங்கள், எண்ணெய் பாட்டில் அட்டைப் படத்தைப் பார்த்து மக்கள் ஏமாறுகிறார்கள். வீட்டிலேயே எண்ணெய் காய்ச்ச முயற்சிக்க வேண்டும்.
ஒரு சிலருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்தால் ஜலதோஷம் வரும். அவர்கள் ஒரு கரண்டியை லேசாகச் சூடு செய்து, அதில் எண்ணெயை விட்டுப் பிறகு தேய்க்கலாம். அப்படியும் ஜலதோஷம் வந்தால் கடையில் கிடைக்கும் திரிபலாதி கேரம் எனும் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது. எந்தக் கெடுதலும் செய்யாது.
கூந்தல் உதிர்வதைத் தடுக்க
# அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை ஆகியவற்றைத் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டுப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயைத் தனியாகப் பிரித்துச் சேமியுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
# வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பொடி செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
# அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்தல் பிரச்சினை குறையும்.
ed;wp : பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன்
No comments:
Post a Comment