Saturday, August 2, 2014

படேலுக்கே பாடம் புகட்டிய காமராஜர்

படேலுக்கே பாடம் புகட்டிய காமராஜர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் வல்லவாய் படேல். அவரை கண்டாலே எல்லா தலைவர்களும் நடுங்கினார்கள். அத்தகைய படேலுக்கே ஒருதடவை பெருந்தலைவர் காமராஜர் பாடம் புகட்டினார்.
1948-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் டாக்டர் பட்டாபி சீதாராமய்யாவும், புருஷோத்தமதாஸ் தாண்டனும் போட்டியிட்டார்கள்.
அச்சமயம் நேரு மந்திரிசபையின் கொள்கைகளை குறை கூறுவதே தாண்டனுடைய தொழிலாக இருந்தது. இதனால் தாண்டன் வெற்றியை காமராஜர் விரும்பவில்லை.
தாண்டன் வெற்றி பெற்றால் அவர் அமைக்கும் காரியக் கமிட்டிக்கும், நேருவுக்கும் இடையே ஒற்றுமை இருக்காது. தகராறுகள் வளரும். இதனால் நேரு பிரதமர் பதவியில் இருந்தே விலகக்கூடும்.
இது தேசத்துக்கு நல்லதல்ல. ஆகையால் நேரு மந்திரி சபைக்கும், அதன் கொள்கைகளுக்கும் ஒத்துப் போகக்கூடிய, ஆதரவு தேடித் தரக்கூடிய வகையில் கமிட்டி அமைய வேண்டும். அதற்கு பட்டாபி சீதாராமய்யாவின் வெற்றிதான் முக்கியம் என்று எண்ணினார் காமராஜர்.
அதனால் பட்டாபிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் அவர் வேலை செய்தார். அதன் பயனாக பட்டாபிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது.
கடைசியாக தலைவர் தேர்தலில் ஓட்டுக்களை எண்ணிப்பார்க்கும்போது பட்டாபிக்கே வெற்றி கிடைத்தது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க பாடுபட்டவர் காமராஜர்தான் என்பதை நேரு புரிந்து கொண்டார்.
இந்த தேர்தலில் தாண்டன் வெற்றி பெற வேண்டுமென்று சர்தார் படேல் விரும்பினார். ஆனால் அவர் விருப்பத்துக்கு மாறாக காமராஜர் வேலை செய்து பட்டாபியை வெற்றி பெறச் செய்தது படேலுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
அச்சமயம் படேல் காமராஜரை பார்த்து "உங்களுக்கு என் மீது என்ன கோபம்?'' என்று கேட்டார்.
"உங்கள் மீது எனக்கு என்ன கோபம் இருக்க முடியும்?'' என்றார் காமராஜர். "பின் ஏன் பட்டாபி வெற்றி பெறப் பாடுபட்டீர்கள்?'' என்றார்.
அதற்கு காமராஜர் "தமிழ்நாட்டில் பட்டாபிக்குஆதரவு இருந்தது. அவர் வெற்றி பெற்றார். அவ்வளவுதான்!'' என்றார்.வல்லபாய் படேலால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. தலை குனிந்தபடி சென்று விட்டார்.

No comments:

Post a Comment