Wednesday, August 20, 2014

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்...

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்...
1. நெருப்புக்கும், அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்குமுள்ள தொடர்பு.
2. தசைத் தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை, பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.
3. இறைவனது சன்னிதானத்தில் தர்க்க புத்தி, படிப்பு இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும். குருடு காணும். செவிடு கேட்கும்.
4. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும் போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான். இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.
5. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.
6. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.
7. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.
8. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை. அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.
9. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர் காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம் செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால் பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க முடிகிறது.

No comments:

Post a Comment