Tuesday, September 2, 2014

வெள்ளரிக்காய்

த்தரி வெயிலைக் கொடுத்து நம்மைக் காய்ச்சி எடுக்கும் இயற்கைதான், அந்த வெயிலுக்கு இதமாய் அதே சீஸனில் வெள்ளரிக்காயையும் தருகிறது. விரல் போல மெலிந்து, இளம் பச்சை நிறத்தில், சடக்கென ஒடியும் பிஞ்சு வெள்ளரியின் சுவையே தனி. உடலில் நீர்ச்சத்தையும், வெப்ப நிலையையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் வெள்ளரிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
 

மலிவான விலையில், மருத்துவப் பயன்கள் நிறைந்துகிடக்கும் வெள்ளரிக்காயின் பயன்களைப் பட்டியலிட்டார் காஞ்சிபுரம் சித்த மருத்துவர் சந்திரபாபு.
'காய்கறிகளில், மிகக் குறைவான கலோரி அளவுகொண்டது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலோரிதான் உள்ளது. 95 சதவீகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் கொழுப்புச் சத்து இல்லை என்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் ஏற்றது. வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து நா வறட்சியைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் இதில் அதிகம். வெள்ளரியில் உள்ள வைட்டமின்கள், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாது உப்புக்களும் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கின்றன. வெள்ளரிச் சாறில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது.
சீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், குடல் புண் ஆகியவற்றைக் குணமாக்கி சீரணத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள சிலிக்கான் மூட்டுத் தசைகளுக்கு வலு அளிப்பதாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதாலும், மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கிறது.
இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் ஹார்மோன் (வளர்ச்சி ஊக்கி) வெள்ளரியில் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிலிக்கானும், கந்தகமும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் வீக்கம், கருவளையங்களைப் போக்கவும், சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை நீக்கவும் பயன்படுகிறது.
பித்தத்தைக் குறைக்கும். சரும நோய்களைப் போக்கும்.  இரைப்பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவதுதான் வழக்கம். வெள்ளரிக்காய்களை அரைத்துச் சாறாக்கியும் அருந்தலாம். இளநீருக்கு ஈடானது வெள்ளரிக்காய்ச் சாறு. வெள்ளரிக்காயை சமைக்காமல் அப்படியே பயன்படுத்துவதுதான் நல்லது' என்றார்.  
எப்படிச் சாப்பிடலாம்?
 வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிக்காய் சாறு அருந்தினால், புண் சட்டெனக் குணமாகும்.
 காலரா நோயாளிகள் வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதில் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தலாம்.
 சர்க்கரை நோயாளிகள் எடை குறைய, விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாறை அருந்த வேண்டும்.
 வெயிலைத் தவிர்க்க தயிரில் வெள்ளரிக்காய், காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி இவற்றைத் துருவிச் சேர்த்து வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிட்டால், குளிர்ச்சியாக இருக்கும்.
 முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், பருக்களை அகற்ற வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்.
 தலைமுடியில் வெள்ளரிச் சாறு, கேரட் சாறு, பசலைக் கீரைச் சாறு, பச்சடிக் கீரைச் சாறு தலா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து தடவி அலசலாம். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
 செரிமானக் கோளாறு, கபம், இருமல், நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதல்ல.
- த.வா. நல்லிசை அமிழ்து

No comments:

Post a Comment