Saturday, September 13, 2014

உயிர் கொடுக்கும் முதலுதவி!

உயிர் கொடுக்கும் முதலுதவி!
- இரா.வீரமணி
தவ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. எப்படி உதவ வேண்டும் என்ற வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அதைவிட முக்கியம். சாலை விபத்து ஏற்பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்? இதோ சில வழிமுறைகள்...
 எப்படித் தூக்க வேண்டும்?
விபத்தில் முதுகெலும்புகளும், கழுத்தெலும்புகளும் சேதமடைந்திருக்கலாம். பாதிக்கப்பட்டவரை அசைத்து வளைத்து தூக்கினால், எலும்புகள் மேலும் சேதமடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அதனால், அடிபட்டவரை நான்கு பேர் சேர்ந்து தூக்க வேண்டும்.
முதலாமவர் காதுகளையும் தலையையும் அணைத்தாற்போல் பிடித்துக்கொள்ள வேண்டும். இரண்டாமவர், தோள்பட்டை, மார்புக்கு அடியில் இரு கைகளையும் சொருகிப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், வயிறு இடுப்புக்கு அடியில் கைகளைக் கொடுத்து தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். நான்காம் நபர் தொடைக்கு அடியில் ஒரு கையையும், கெண்டைக்காலுக்கு அடியில் ஒரு கையையும் கொடுத்து, நால்வரும் ஒரே சமயத்தில் தூக்கி ஒரு ஜமுக்காளத்திலோ, அல்லது அதைப் போன்ற துணியிலோ படுக்கவைக்க வேண்டும்.

பின் அந்த ஜமுக்காளத்தை உடலின் மீது போர்த்தியது மாதிரி சுற்றி, துணி நழுவாமல் இருக்க ஆங்காங்கே சிறு கட்டுகள் போட வேண்டும். பின் பாதிக்கப்பட்டவரின் இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் ஒருவரும் வந்து படத்தில் காட்டியுள்ளது போல் தலையையும் கழுத்தையும் ஆதரவாகத் தாங்கிப்பிடித்து, கட்டை போல அசையாமல் நேராகத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவ ஊர்தி, மீட்புபணி, (தீ விபத்து இருந்தால்) தீயணைப்பு படை போன்றவர்களை உதவிக்கு அழைக்கவும். (அவசர உதவி தொலைபேசி எண் 103 மற்றும் 1063)

வாகனம் ஓடிக்கொண்டு இருந்தால், இன்ஜினை நிறுத்தவும். முடிந்தால் பேட்டரிகளின் இணைப்புகளைத் துண்டிக்கவும். பெட்ரோல் - டீசல் பாதையை மூடவும்.
வாகனத்துக்கு அடியில் மனிதர்கள் சிக்கியிருந்தால் சக்கரங்களின் அடியில் கட்டைகளை வைத்து, வாகனத்தை நகராமல் பார்த்துக்கொள்ளவும்.
பெட்ரோல் கசிந்து சிந்தியிருக்கும் இடங்களில் எளிதில் தீப்பிடித்துவிடும். பெட்ரோல் டாங்க் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு. அதனால் யாரும் சிகரெட் பிடிக்காமலும், எண்ணை, விளக்கு போன்ற எரியும் பொருட்களை அருகில் எடுத்துச் செல்லாமலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஹெல்மெட்டைக் கழற்றும்போது...
தாடையையும் ஹெல்மெட்டையும் இணைத்துள்ள ஒட்டு நாடாவை பிரிக்க முடியாவிட்டால் வெட்டி எடுக்க வேண்டும். ஒருவர் கைவிரல்களை ஹெல்மெட்டுக்குள் நுழைத்து ஒருகையால் கழுத்துப் பகுதியையும், மற்ற கையால் கீழ்த்தாடையையும் தாங்கி உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இன்னொருவர் ஹெல்மெட்டை சற்றே முன்னோக்கிச் சாய்த்து பின்பக்கமாக மெள்ள மெள்ள தூக்கி வெளியே எடுக்க வேண்டும். தாடையையும் கழுத்தையும் பிடித்துக்கொண்டு இருப்பவர் ஹெல்மெட் முழுவதுமாக எடுக்கும் வரை விடக்கூடாது.
தலையுடன் சேர்ந்து ஹெல்மெட் நசுங்கி இருக்கும் சமயங்களில், ஹெல்மெட்டை மட்டும் தனியே கழற்ற முயற்சித்தால்... தோலும் ஹெல்மெட்டோடு சேர்ந்து கழன்று வந்து விடும். அதனால், நேரடியாக மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள். மீறி ஹெல்மெட்டைக் கழற்றினால், தலையிலிருக்கும் தோலும் சேர்ந்து பிய்ந்துவிடும், கவனமாக செயல்படுங்கள்!
அனைத்து வகையான விபத்துகளுக்கும் எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்னும் முறைகளை 'செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அசோசியேஷன்’ அமைப்பினர் கற்றுத் தருகிறார்கள். முதலுதவி சிகிச்சை பயிற்சி தருவதற்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு இதுதான்!
படங்கள்: ப.பிரவீன்

No comments:

Post a Comment