அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் வானவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்படும் கூட்டங்களை தேடி உலா வருகிறார்கள். அத்தகைய கூட்டத்தாரைக் கண்டால். அவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கும் முதல் வானத்திற்கும் மத்தியிலுள்ள (இடைவெளியை) நிரப்பும் வகையில் தங்களுடைய இறக்கைகளால் ஒருவர் மற்றவரை சூழ்ந்து கொண்டிருப்பார்கள். (கூட்டத்திலுள்ள மககள்) கலைந்து செல்லும் போது (வானவர்கள்) வானத்தின் பால் ஏறி உயர்ந்து விடுகிறார்கள்.
‘(அங்கு) அல்லாஹ், இவ்விஷயங்களை நன்கு அறிந்திருந்தாலும் கூட அவ்வானவர்களிடம் கேட்கின்றான்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
அதற்கு வானவர்கள் நாங்கள் பூமியிலிருக்கும் உன்னுடைய சில அடியார்களிடமிருந்து வருகிறோம். அவர்கள் உன் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன் மேன்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உன்னைத் தவிர (வேறு) இறைவன் இல்லை என்று சாட்சியம் பகர்ந்து கொண்டிருந்தார்கள். உன்னை புகழ்ந்துக் கொண்டிருந்தார்கள். உன்னுடைய அருளை வேண்டியவர்களாக இருந்தார்கள் என பதில் கூறுவார்கள்.’
அல்லாஹ் : என்னிடம் அவர்கள் எதனை வேண்டினார்கள்?
வானவர்கள் : உன்னுடைய சுவர்க்கத்தை உன்னிடம் அவர்கள் வேண்டுகிறார்கள்.
அல்லாஹ் : அவர்கள் என்னுடைய சுவர்க்கத்தைக் கண்டுள்ளார்களா?
வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய சுவர்கத்தைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்; (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.
அல்லாஹ் : எதிலிருந்து அவர்கள் என்னிடம் பாதுகாப்புத் தேடுகிறார்கள்.
வானவர்கள் : உன்னுடைய நரக நெருப்பிலிருந்து (பாதுகாப்பு தேடுகிறார்கள்)
அல்லாஹ் : அவர்கள் என்னுடைய நரக நெருப்பை கண்டுள்ளார்களா?
வானவர்கள் : இல்லை
அல்லாஹ் : என்னுடைய நரக நெருப்பைக் கண்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் (என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)
வானவர்கள் : மேலும் உன்னிடம் அவர்கள் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர்.
அல்லாஹ் : நான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்கள் வேண்டியதை அருளி, அவர்கள் தேடும் பாதுகாப்பையும் அளித்துவிட்டேன்.
வானவர்கள் : யா அல்லாஹ்! அவர்கள் மத்தியில் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்க கூடிய ஒரு அடியானும் இருந்தான. அவன் அவ்வழியே செல்லும்போது அக்கூட்டத்தாருடன் அமர்ந்து விட்டான்.
அல்லாஹ் : அவனுடைய பாவங்களைக் கூட நான் மன்னித்துவிட்டேன். அத்தகைய மக்களுடன் (கூட்டத்தில்) அமர்பவர்களும் வேதனையடையமாட்டார்கள்.
அறிவிப்பவர் - அபூஹூரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
நூற்கள் - ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்
நூற்கள் - ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்
இதனாலேயே எமது முன்னோர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவுகளில் (அதாவது வியாழன் பின்னேரம்) பள்ளிவாசல்களில், தக்கியாக்களில், ஸாவியாக்களில், வீடுகளில் திக்ர் மஜ்லிஸ்களை ஏற்படுத்தி கூட்டமாக இருந்து அதிகம் அதிகம் திக்ர் செய்தனர்.
ஆனால், இன்று நாம் அவற்றை விட்டுவிட்டு அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் பாவமன்னிப்பையும் இழந்து கைசேதப்படுகிறோம்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் நாம் கைவிட்ட அந்த நல்ல அமல்களை உயிராக்கி பயனடைவோம்.
உங்கள் வீட்டில் திக்ர் மஜ்லிஸ்களை ஏற்படுத்தி குடும்பத்துடன் இருந்து திக்ர் செய்யுங்கள். இன்னும் உங்களுக்கு பக்கத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், ஸாவியாக்களில் நடைப்பெறும் திக்ர் மஜ்லிஸ்களில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
No comments:
Post a Comment