‘பிஸ்மில்லாஹ்’ கூறுதல்: - மனதால் நிய்யத் செய்த பிறகு ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஒளூ செய்யத் துவங்க வேண்டும்.
இரு மணிக்கட்டுகளை கழுவுதல்: - இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும்.
வாய் கொப்பளித்தல்: - மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.
நாசிக்கு (மூக்கிற்கு) நீர் செலுத்தி சுத்தம் செய்தல்: - மூக்கிற்குள் வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.
முகம் கழுவுதல்: - ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து கீழ் தாடை வரையும் முகத்தை மூன்று முறை கழுவவேண்டும்.
இரு கைகளை முழங்கை வரை கழுவுதல்: - இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட மூன்று முறை கழுவவேண்டும். முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும்.
மஸஹ் செய்தல்: - இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும். பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும்.
தலையில் மஸஹ் ஒரு முறை தான் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவுது, இப்னுமாஜா, அஹ்மது
நம்மில் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
இரு கால்களையும் கழுவுதல்: - இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில் முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.
ஒரு மனிதரின் காலில் நகம் அளவுக்கு தண்ணீர்படாததைக்கண்ட நபியவர்கள் திரும்பிச் சென்று உம் ஒளூவை அழகாகச்செய் என்றார்கள்.
அறிவிப்பவர்:அனஸ் (ரலி) ஆதாரம் : நஸயீ, அபூதாவூது.
குதிகால்களை நன்றாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா, ஆதாரம் : புகாரி.
காலுறை அணிந்தவர் ஒளூ செய்யும் முறை: -
ஒருவர் ஒளூ செய்து விட்டு காலுறை (ஸாக்ஸ்) அணிந்து, பிறகு ஒளூ முறிந்து விட்டால் திரும்ப ஒளூ செய்யும் போது அவர்; காலுறையை கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலை கழுவ வேண்டிய நேரத்தில் காலுறையின் மேல்பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதும். கடமையான குளிப்பிற்கு கட்டாயம் கழற்றவேண்டும்.
காலுறையில் மஸஹ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள்: -
காலுறை அணியும் போது ஒளூவுடன் இருந்திருக்க வேண்டும். அதன் பிறகு ஒளூ முறிந்தால் தான் காலுறையைக் கழற்றாமலேயே அதன் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.
காலுறையின் மேல் பகுதியில் தான் மஸஹ் செய்ய வேண்டும். சிலர் செய்வது போல் கீழ் பகுதியில் அல்ல.
மஸஹ் செய்வதற்கான காலக் கெடு: -
ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் (ஐந்து நேரத் தொழுகைகள்). பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு மூன்று நாட்கள் ஆகும். [Al-Majmoo' (1/487), Al-Musannaf (1/209/807)]
இந்த காலக்கட்டத்திற்கு மேற்படும் போது காலுறையை கழற்றிவிட்டு முறைப்படி ஒளூச் செய்ய வேண்டும்.
ஒளூ செய்யும் முறை:
பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்
பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.
"உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் விடக்கூடாது" என صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான் ஒளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஒளூச் செய்தபின் கூறவேண்டியவை
أَشْهَدُ أَنْ لاَّ إلَهَ إِلَهَ إِلاَّالله وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًاعَبْدُهُ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம்
பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்; அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
No comments:
Post a Comment