Friday, December 5, 2014

ஜும்மா தொழுகையின் சிறப்புகள்

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.....
ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.
”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881).
இறைவன் தனது அருள்மறையாம் திருக் குரானில் ஜும்ஆவின் அவசியத்தையும் அதன் மேலான பலன்களையும்கீழ்க்கண்ட வசனங்களின் மூலம்நமக்கு தெளிவுபடுத்துகிறான்.
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்-குரான் 62: 9,10,11).
ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது?
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930).

No comments:

Post a Comment