அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்: அண்ணல் நபிகளார் (ஸல்) கூறினார்கள்:
‘அல்லாஹ்விடம் இருக்கிற வேதனையை இறைநம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அவர்களில் எவராலும் சுவனத்தைக் குறித்து ஆசைப்பட இயலாது. அல்லாஹ்விடம் இருக்கிற கருணையைப் பற்றி இறைமறுப்பாளர்களுக்குத் தெரிந்து விடுமேயானால் அவர்களில் எவருமே சுவனத்தைக் குறித்து நிராசை அடைய மாட்டார்கள்’.நூல் : முஸ்லிம் (5316)
அடியானின் மனத்தில் எந்நேரமும் இறைவனைப் பற்றிய பயம் இருக்க வேண்டும். அதே சமயம் அவன் எந்த வேளையிலும் இறைவனின் கருணை குறித்து விரக்தியடைந்து விடக்கூடாது. எல்லா வேளைகளிலும் அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேரக் கொண்டிருக்கின்ற இந்த வழிமுறைதான் இந்த உலகில் ஓர் அடியான் மேற்கொள்ள வேண்டிய சரியான, பொருத்தமான வழிமுறை ஆகும்.
வாழ்வைச் சீராக வைத்திருப்பதற்கும் செயல்களை நெறிப்படுத்திக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் அச்சம், எதிர்பார்ப்பு ஆகிய இரண்டுமே தேவை. இறைவனைப் பற்றிய அச்சம் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கின்ற அரணாக நிற்கும். இறைவனின் கருணை பற்றிய எதிர்பார்ப்போ நல்லறங்களில் அதிகமதிகமாக ஈடுபடத் தூண்டிவிடும்.
அதே சமயம் அச்சமும் சரி, எதிர்பார்ப்பும் சரி தவறான அடிப்படைகளைக் கொண்டவையாகவோ, மூட நம்பிக்கைகளை அடிப்படைகளாய்க் கொண்டவையாகவோ இருத்தலாகாது என்பதையும் இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
இறைவன் தனக்கு மாறு செய்பவர்களுக்காக எந்த அளவுக்குக் கடுமையான வேதனையை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கின்றான் எனில் சரியான முறையில் அதன் சீற்றத்தையும் பயங்கரத்தையும் வீச்சையும் இறைவன் மீது நம்பிக்கையுள்ள அடியான் ஒருவன் சரியாக உணர்ந்துகொண்டாலே போதும். சுவனச் சிட்டுகளாய் வலம் வருவோம் என அவன் தனது மனத்துக்குள் தேக்கி வைத்திருக்கின்ற ஆசைகளும் கனவுகளும் முற்றாகக் கரைந்து போகும்.
‘இறைவனின் வேதனையிலிருந்தும் கோபத்திலிருந்தும் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்வது எவராலும் இயலாதே. எந்த அடியானை அது சுற்றி வளைத்துக் கொள்ளும் என்பதும் எவருக்கும் தெரியாதே. இந்நிலையில் நாம் கொண்டிருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நம்முடைய நல்லறங்களுக்கும் அந்த வேதனையின் சீற்றத்தையும் கடுமையையும் குறைக்கின்ற வல்லமை எங்கிருந்து வந்துவிடும்? அவை எந்த மூலைக்கு?’ போன்ற எண்ணங்கள் அவனுடைய மனத்தை நிறைக்க அது வரை அவனுடைய மனத்துக்குள் நிறைந்திருந்த சுவனத்து ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் ஒட்டுமொத்தமாகப் பொலபொலவென உதிர்ந்து போகும்.
இதே போன்று எந்த நிலையிலும் இறைவனின் கருணைக்கும் கிருபைக்கும் சற்றும் தகுதியில்லாதவனாக இருக்கிற இறைமறுப்பாளன் ஒருவன் இறைவனின் கருணை, கிருபை ஆகியவற்றைப் பற்றிச் சரியாக அறிந்துகொள்வானேயானால் அவனும் இறைவனின் கருணையை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவான். இறைவனின் கருணை இந்த அளவுக்கு எல்லையில்லாததாக இருக்கின்றது எனில், அது இந்த அளவுக்குப் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றது எனில், எந்தவொரு மனிதருக்கும் அது கிடைக்காமல் போகாது என்றெல்லாம் அவன் நினைக்கத் தொடங்கிவிடுவான்.
இறைவனின் கோபத்தையும் அவனுடைய கருணையையும் இதனைவிடச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்ட முடியாது என்றே தோன்றுகின்றது.
No comments:
Post a Comment