நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் ஒரு பள்ளிவாசலுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கவனித்தார்கள்.
அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் சிறந்த பக்திமான் என்றும், இரவும், பகலும் இறை வணக்கத்திலேயே அவர் என்றும் ஈடுபட்டு இருப்பதாக கேள்விப்பட்டார்கள். அந்த மனிதர் குடும்ப செலவுக்கு என்ன செய்கிறார் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அருகிலிருந்தவர் சொன்னார், அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவர் விறகு வியாபாரம் செய்கிறார். அவர்தான் இவருடைய தேவைகளையும் கவனித்து கொள்கிறார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடனே சொன்னார்கள், ''இரவும் பகலும் இறைவனை வழிபடும் அந்த நண்பரிடம் சொல்லுங்கள். இவரைவிட விறகு வெட்டி பிழைக்கும் இவரது அண்ணன் ஆயிரம் பங்கு மேலானவர். குடும்பத்தின் தேவைக்கு நியாயமான வழியில் சம்பாதிப்பது சிறந்த இறை வணக்கம்தான் என்று அவருக்கு எடுத்து சொல்லுங்கள்.
பெருமானாரின் கூற்றை அறிந்த அந்த மனிதர் அன்று முதல் தமது அண்ணனுக்கு உதவியாக விறகு வெட்ட ஆரம்பித்தார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபடலானார். ஒருவர் தனது கரத்தினால் உழைத்துச் சாப்பிடும் உணவு ஹலாலான உணவுகளில் மிகச் சிறந்த உணவு ஆகும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றிருக்கிறார்கள். அதனால்தான் ரசூல்மார்கள், நபிமார்கள், ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள் போன்றவர்களெல்லாம் தனது கரத்தினால் உழைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள்.
இஸ்லாம் நெற்றி வியர்வை சிந்தி உழைக்க வேண்டும் என்றே விரும்புகிறது. அவ்வாறு உழைத்து உண்பது இறையருளாக இருக்கிறது. அதனால்தான் தொழுகை முடிந்ததும் பூமியில் அல்லாஹ்வின் அருளைத் தேடிச் செல்லுங்கள் என அல்குர்ஆனும் அதற்கு அனுமதிக்கிறது.
No comments:
Post a Comment