அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
“ஓ! மூஸா! உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை பிர் அவுன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே உங்கள் தாயை நோக்கி, ‘உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடுங்கள். அக்கடல் அதனை கரையில் சேர்த்து விடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக் கொள்வான்’ என்று உங்கள் தாய்க்கு அறிவித்தோம்”. (திருக்குர்ஆன் 20:39)
எகிப்து நாட்டில் பனிஇஸ்ரவேலர்கள் செல்வாக்கு அதிகமாக இருந்த காலம் அது. அப்போது, எகிப்தின் பூர்வீக குடிகளான கிப்திகள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் கிப்திகள் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். மேலும் அவர்களை பழிவாங்கும் வகையில் கொத்தடிமைகளாக நடத்தினார்கள்.
‘பிரவுன்’ என்ற பரம்பரை பெயரில் கிப்தி இனத்தினர் ஆட்சி செய்தார்கள். அந்த வரிசையில் 11-வது அரசனாக வந்தவன் தான் பிர் அவுன். ‘நானே கடவுள், மக்களை என்னையே வணங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டான். வேறுவழியின்றி மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.
ஒரு நாள் அவன் ஒரு கனவு கண்டான். பாலஸ்தீனிலிருந்து ஒரு நெருப்புத் துண்டு பறந்து வந்து கிப்திகளைக் கொன்று பனி இஸ்ரவேலர்களை காப்பாற்றுவது போல அந்த கனவு அமைந் திருந்தது.
இந்த கனவு பிர் அவுன் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ஜோதிடரிடம் அந்த கனவிற்கு விளக்கம் கேட்டபோது, ‘பனி இஸ்ரவேலர்கள் குலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அது ஒட்டுமொத்த கிப்திகள் வம்சத்தையே அழித்து ஆட்சி அதி காரத்தை கைப்பற்றும்’ என்று கூறினார்.
மேலும், இனிமேல் பிறக்கின்ற அத்தனை ஆண் குழந்தை களையும் கொன்று விட்டால் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.
பிர் அவுன் சொன்னான், ‘இப்போது நம்மிடம் இருக்கும் கொத்தடிமைகள் பலர் ஐம்பது வயதை தாண்டியவர்கள். அப்படி நாம் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கொல்வதாய் இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு வேலை செய்வதற்கே ஆள் இல்லாமல் போய்விடுமே, என்ன செய்வது’ என்றான்.
அப்படியானால் ஓராண்டு விட்டு மறு ஆண்டு என்று கணக்கில் ஆண் பிள்ளை களைக் கொல்லலாம் என்று முடிவு செய்தார்கள். அரசாங்க அதிகாரம் கொண்ட பெண்களால் ஒவ்வொரு வீடும் கண்காணிக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால் உடனே கொல்லப்படும். பெண் பிள்ளைகளுக்கு உயிர்பிச்சை வழங்கப்படும். ஆனால் மூஸாவின் தாயார் அவர்களை கருவுற்றிருந்த போது மற்ற பெண்கள் போல் அவர்களுக்கு வயிறு பெரிதாய் தெரியவில்லை. அதனால் தன் கர்ப்பத்தை அரசாங்க பெண்களிடம் இருந்து மறைத்துக் கொண்டார்கள். பிள்ளையையும் பெற்றெடுத் தார்கள்.
அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்த போது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு மூலம் வழி சொன்னான். “அந்த பிள்ளையை ஒரு பேழையில் வைத்து நைல் நதியில் மிதக்க விட்டு விடு. அதனை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் அல்லாஹ்.
பெற்ற பிள்ளையை நதியில் எறிவதா? எப்படி மனம் வரும். ஆனால் மூஸாவின் தாயார் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக உடனே அதனைச் செய்தார்கள். எந்த இக்கட்டான சூழ் நிலையிலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவன் நல்ல வழியைக் காட்டுவான் என்ற படிப்பினை இதில் புதைந்துள்ளது.
யார் எதிரியோ அந்த பிர் அவுனின் மனைவி ஆயிஷா அம்மையார் அரசியின் கைகளில் பேழை மிதந்து வந்து சேர்ந்தது. திறந்து பார்த்த அரசிக்கு ஆனந்தம். அதுவரை அவர்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை.
ஆயிஷா அம்மையார் ஓடோடி வந்து பிர் அவுனிடம் பேழையில் கண்டெடுத்த பிள்ளையை காட்டினார். ஆண் குழந்தையான இதை உடனே கொல்ல வேண்டும் என்றான் பிர் அவுன். ஆயிஷா அம்மையார் கெஞ்சினார். “நமக்கோ பிள்ளையில்லை. இது நமக்கு கண் குளிர்ச்சியாக இருக்கும். வெளியில் வளர்ந்தால் தானே எதிரியாய் மாறுவான். நம்மிடம் நம் அன்பின் அரவணைப்பில் நமக்கு நன்மை செய்யக் கூடிய பிள்ளையாக அல்லவா மாறி விடும். நமக்கும் ஒரு வாரிசு கிடைக்குமே?” என்றார்்.
அந்த வார்த்தைகள் பிர் அவுன் மனதில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ‘சரி வளர்த்துக் கொள்’ என்று அனுமதி அளித்தான்.
மூஸா அவர்கள் அரண்மனையில் வளர்ந்து வாலிபர் ஆனார்கள். ஒரு நாள் சண்டையை விலக்க முற்பட்டபோது எதிரி ஒருவன் முகத்தில் குத்தினார்கள். இதில் அவன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். அந்தக்காலத்தில் இதுபோன்ற கொலைக் குற்றம் செய்தவரை கல்லால் எறிந்து கொல்வது தண்டனையாக இருந்தது. எனவே அந்த தண்டனைக்குப் பயந்த மூஸா நபிகள் அந்த ஊரைவிட்டே ஓடி விட்டார்கள்.
மனம் போன போக்கில் நடந்தவர் பல நாட்கள் கடந்த பின்னர் மத்யன் என்ற ஊரை அடைந்தார். ஊரின் கடைக்கோடியில் கிணற்றில் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்பட்டுக் கொண்டிருந்த இரு பெண்களைக் கண்டார். அவர்களுக்கு தண்ணீர் இறைத்துக்கொடுத்து உதவினார். வீட்டிற்கு சென்ற பெண்கள் தன் வயோதிக தந்தையிடம் நடந்த விவரத்தை கூறினார்கள். தந்தையும் அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். அவர்தான் மத்யன் நகரில் வாழ்ந்து வந்த சுஐப் நபியவர்கள்.
மூஸா நபியிடம் விவரங்களை கேட்டறிந்த சுஐப் நபிகள், “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இங்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்றார். அதோடு ஒரு நிபந்தனையும் விதித்தார்.
அதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீங்கள் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையில் இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதனை பத்து வருடங்களாக முழுமை செய்தால் அது நீங்கள் எனக்கு செய்யும் நன்றி தான்”. (திருக்குர்ஆன் 28:27)
மூஸா நபிகள் அந்த நிபந்தனையை நிறைவேற்றி, சாரா அம்மையாரை மணமுடித்தார்கள்.
இதற்கிடையில் ஏக இறைக்கொள்கையை ஏற்று பலர் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். அவர்களை கடுமையாக துன்புறுத்தினான் பிர் அவுன்.
அங்கிருந்து செல்ல இறை கட்டளை வந்தது. மூஸா நபிகள் தலைமையில் மக்கள் கூட்டமாக சென்றபோது வழியில் இருந்த கடல் இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது. அந்த மக்கள் அனைவரும் பத்திரமாக கரையேறினார்கள். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த பிர் அவுன் மற்றும் அவனது படையினர் அனைவரும் கடலில் மூழ்கி பலியானார்கள்.
மூஸா நபி காலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன் காரூன்.அவனிடம் உன் செல்வங்களை ஏழைகளுக்கு ‘ஜகாத்’ கொடு என்ற போது, “மூஸாவே உம் இறைவனேயே நான் ஏற்கவில்லை. மேலும் இந்த செல்வங்கள் எல்லாம் என் அறிவாலும் திறமையாலும் சம்பாதித்தவை. உன் இறைவனின் பங்கு இதில் எங்கிருக்கிறது தரமுடியாது” என்றான்.
அதுமட்டுமில்லாமல் பணம் கொடுத்து ஒரு பெண்ணை தயார் செய்து அவள் மூலம் மூஸா மீது பாலியல் குற்றம் சுமத்தினான். ஆனால் சாட்சி சொல்ல வந்தபோது அந்தப்பெண் மூஸாவை பார்த்த உடனே மனம் மாறி உண்மையைச் சொன்னாள்.
மூஸா நபியை அழிக்க முயன்ற காரூன் மீது தண்டனை இறங்கியது. அவனையும் அவன் சேர்த்த செல்வங்களையும் பூமி விழுங்கியது.
அல்லாஹ்வை மறுத்தவர்கள், எத்தனை படை, பலம், செல்வம் அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தாலும் அழிவு தான் அவர்கள் முடிவு என்ற படிப்பினைகளை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
நன்றி :
Islamic Duakkalum Hadeesgalum
No comments:
Post a Comment