அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூஸா நபியின் மரணத்தின் பின் இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் சென்றனர். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினர். பாவச் செயல்களை பகிரங்கமாகவே செய்தனர். பலர் சிலைகளைக் கூட வழிப்பட்டனர்.எனவே, அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். இஸ்ரவேலரின் எதிரிகள் பலம் பெற்றனர். இவர்களின் அனேகரை அம்லாக்கியர் எனும் எதிரிகள் கொன்றொழித்தனர். பலரைக் கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர்.
இவர்களின் பல ஊர்களும் எதிரிகளின் வசமாயின. அத்தோடு அவர்களிடம் ‘தாபூத்’ என்றொரு பெட்டி இருந்தது. அதில் மூஸா(அலை) அவர்களின் அஸா எனும் தடி இருந்தது. இந்தத் தடியால் அல்லாஹ்வின் ஆணைப்படி மூஸா(அலை) அவர்கள் கடலுக்குள் அடித்தபோது கடல் பிழந்து வழிவிட்டது. பாறாங்கல்லில் அடித்தபோது கல்லில் இருந்து நீரூற்று பீறிட்டு வந்தது. கீழே போட்டபோது அது பாம்பானது. கையில் எடுத்ததும் தடியானது. அப்பெட்டியில் மூஸா(அலை), ஹாரூன் நபிமார்களின் ஆடைகள், அல்லாஹ்வால் அருளப்பட்ட ‘தவ்ராத்’ எனும் வேதத்தின் பிரதிகள் என்பன இருந்தன.
இஸ்ரவேலர்கள் அந்தப் பெட்டியை பரகத்தாகக் கருதினர். அந்தப் பெட்டியும் எதிரிகளால் அபகரிக்கப்பட்டது. இப்படி வாழ்வில் சோதனை மேல் சோதனைகளை அனுபவித்து வந்தனர். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் நீண்டகாலமாக நபிமார்களின் வருகை தடைப்பட்டிருந்த இஸ்ரவேலர்களில் லேவி வம்சத்தில் ‘ஸம்ஊன்’ என்றொரு குழந்தை பிறந்து நல்ல விதத்தில் வளர்ந்தது. பின்னர் அக்குழந்தை வாலிபத்தை அடைந்து அல்லாஹ்வின் வஹியைப் பெற்று நபியாகவும் ஆனது.
இறைத்தூதர் ஸம்ஊன்:
ஸம்ஊன் எனும் நபி அம்மக்களை சத்தியத்தின்பால் அழைத்து வந்தார். எனினும் இஸ்ரவேலர்களுக்கென அதிகாரம் பெற்ற ஒரு தலைவர் இருக்கவில்லை. சமூகம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்திவரும் சந்தர்ப்பத்தில் எமக்கென ஒரு அரசன் இருந்தால் அவனது தலைமையில் அணிதிரண்டு எதிரிகளுடன் போராடலாம். இழந்த எமது நகரங்களைக் கைப்பற்றலாம். எம்மைக் கொன்று இழிவுபடுத்தியவர்களைப் பழிவாங்கலாம் என எண்ணினர்.
எனவே, ஒரு கூட்டத்தினர் தமது நபியிடம் வந்து “எமக்கென ஒரு அரசன் இருந்தால் அவரின் பின்னால் நாம் அல்லாஹ்வின் பாதையில் போரிடலாம். எனவே, எமக்கென ஒரு அரசரை நியமியுங்கள்” என்றனர். பனூ இஸ்ரவேலர்கள் வாக்கு மாறுபவர்களாகவும் இறைவழியில் போராட்டம் புரியும் விஷயத்தில் கோழைகளாகவும் இருந்தனர். எனவே நபி ஸம்ஊன் அம்மக்களைப் பார்த்து, “நீங்கள் கோழைகள். எதிரிகளைக் கண்டால் பின்னங்கால் பிடரியில்பட ஓடுபவர்கள். உங்களுக்கு அல்லாஹ் ஒரு அரசனை ஏற்படுத்தி அவரும் உங்களைப் போர் புரிய அழைத்தால் நீங்கள் மாறு செய்வீர்கள். போர் புரிய முன்வர மாட்டடீர்கள். எனவே, அல்லாஹ்விடம் இதற்காகப் பிரார்த்திக்க முடியாது” என்றார்.
அதற்கு வந்தவர்கள் “நபியே! அமாலிக்குகள் பலஸ்தீன பூமியை ஆக்கிரமித்துள்ளனர். எம்மை எமது வீடுகளை விட்டும் விரட்டியுள்ளனர்.எமது சொத்து செல்வங்களை அபகரித்து, எமது பிள்ளைகளை அடிமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நாம் போராட முன்வராமலிருப்போமா? இழந்தபூமியையும், உரிமைகளையும் மீட்க நாம் நிச்சயம் போராடுவோம்” என வாக்களித்தனர். இதன்பின் நபி ஸம்ஊன் அல்லாஹ்விடம் பனூ இஸ்ராயில்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்துமாறு துஆக் கேட்டார். அல்லாஹ் அந்த துஆவை அங்கீகரித்தான்.
எனவே, பனூ இஸ்ரவேலர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு தாலூத் என்பவரை அரசனாக்கியுள்ளான். அவரை அறிவிலும் உடல்பலத்திலும் மேலும் அல்லாஹ் உயர்வாக்கினான்” என்று கூறச் சொன்னான். தாலூத் என்பவர் வீடுவீடாக தண்ணீர் சுமந்து உழைக்கும் ஒரு ஏழையாவார். குடும்பச் செல்வாக்கும் இல்லாதவர். எனவே, பனூ இஸ்ராயீல்கள் “இவரை அரசனாக எம்மால் ஏற்கமுடியாது. நாங்களே அதற்கு உரிமையாளர்கள். எங்களில் செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரை அரசராக தேர்ந்தெடுங்கள்” என மறுத்துப் பேசினர்.
இது கேட்ட நபி ஸம்ஊன், “இது எனது சுயமுடிவு இல்லை. இது அல்லாஹ்வின் தேர்வு. இதற்கு மாறு செய்யாதீர்கள்.இதில் மாற்றம் செய்யவும் என்னால் முடியாது. அவன் நாடியவர்களுக்கு ஆட்சியைக் கொடுப்பான்” என்று கூறினார். இது அல்லாஹ்வின் முடிவு என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது என மக்கள் மாறிக் கேட்டனர். “உங்களிடமிருந்து பறிபோன பரகத் நிறைந்த ‘தாபூத்’ பெட்டி மீண்டும் உங்கள் கைக்குக் கிடைக்கும். தாலுதை அல்லாஹ் அரசனாகத் தேர்ந்தெடுத்ததற்கு இதுவே அத்தாட்சியாகும்” என்று நபி ஸம்ஊன் கூறினார்.
எண்ணிக்கையில் குறைந்த நாம் எப்படி அதிக எண்ணிக்கையை உடைய ஜாலூத்தின் படையை வெற்றி கொள்வது என்று தாலூத் படையினர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து யுத்தம் செய்ய களம் இறங்கினர். தாலூதின் படை தயாரான போது எதிரிகள் அதிகமாக இருப்பதைக் கண்டனர். எனினும் உறுதியுடன் போராடத் துணிந்தனர். அல்லாஹ்விடம், “இந்தப் பெரும் படையுடன் மோதத் தக்க அளவுக்கு எம்மீது பொறுமையைச் சொரிவாயாக. போரில் இயலாமையையோ, சடைவையோ நாம் சந்திக்கக் கூடாது. புறமுதுகு காட்டி ஓடிவிடவும் கூடாது. எனவே எமது பாதங்களைப் பலப்படுத்துவாயாக. இந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எமக்கு நீ உதவி செய்வாயாக” என்று பிரார்த்தித்தனர்.
போருக்காக இருதரப்பும் ஒன்றையொன்று சந்தித்தது. போர் ஆரம்பமாவதற்கு முன்னர் இருதரப்பிலுமுள்ள சிறந்த வீரர்கள் முன்வந்து தனியாக மோதுவது அன்றைய போர் மரபாக இருந்தது. இதன்படி எதிரிப் படையின் தளபதியான மாவீரன் ஜாலூத் என்பவன் முன்வந்து “என்னுடன் தனித்து மோத எவனாவது முன்வர முடியுமா?” என கர்ச்சித்தான்.
தாலூத்தின் படையில் எவருமே இந்த சவாலை ஏற்றுக்கொள்ளத் துணியவில்லை. இதனால் ஜாலூத்தின் ஆணவம் அதிகரித்தது. பனூஇஸ்ரவேலர்களை இழிவாகப் பேசினான். எள்ளி நகையாடினான்.
அப்போது தாலூத், “இந்த கொடியவனைக் கொல்பவனுக்கு எனது மகளை மணமுடித்துக் கொடுப்பேன்” என அறிவிப்புச் செய்தார். ஈற்றில் ‘தாவூத்’ எனும் ஒரு இளைஞன் ஜாலூதுடன் மோத முன்வந்தார். மன்னர் தாலூத் தனது வாளை அவருக்குக் கொடுத்து, இரும்புக் கவசம் அணிவித்து, வாழ்த்தி சண்டைக்கு அனுப்பினார். தாவூத்தோ, வாளை வைத்து விட்டு, கவசத்தை களைந்துவிட்டு கையில் கவனுடன் களம் சென்றார். ஆடு மேய்க்கும் இளைஞரான தாவூத் தனது ஆடுகளை வேட்டை மிருகங்களிலிருந்து காக்க கவனில் கல்லை வைத்து எறிந்து நன்றாகத் தேர்ச்சிப் பெற்றிருந்தார். எனவே சில கற்களை பொறுக்கிக் கொண்டு கவனுடன் களம் சென்றார்.
தாவூத்தைக் கண்ட ஜாலூத் எக்காளமிட்டுச் சிரித்தான். இந்த பொடிப் பயல் என்னுடன் மோதுவதா? நல்ல வேடிக்கைதான் என்று நகையாடினான். தாவூத் கல்லை எடுத்ததும், “கல்லால் அடித்துக் கொல்ல என்னை நாயென்று நினைத்தாயா” என்று தாவூத்தைப் பிடிக்கச் சென்றான். தாவூத், கவனில் கல்லை வைத்துச் சுற்றி வீசினார். சரியாக கல் அவனது நெற்றியில் பட்டு பொட்டென பூமியில் சரிந்தான். தாவூத் அவனது வாளாலேயே அவனது தலையை வெட்டினார். மிகப்பெரும் வீரன் ஒரு நொடியில் செத்ததைக் கண்ட ஜாலூதின் படையினர் கதிகலங்கினர். தாலூதின் படையினர் உற்சாகம் பெற்றுப் போராடினர். ஜாலூதின் படையைச் சிதறடித்தனர். வெற்றியும் பெற்றனர். போரின் முடிவில் மன்னன் தாலூத் தனது மகளை தாவூத்துக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.
மன்னர் தாலூதின் மரணத்தின் பின்னர் பனூ இஸ்ரவேலர்களின் அரசுப் பொறுப்பு தாவூத் கைக்கு மாறியது. அல்லாஹ் அவருக்கு வஹி அறிவித்து அவரை நபியாகவும் ஆக்கினான். இவர் நபியாகவும் மன்னராகவும் இருந்து இஸ்ரவேலர் மக்களை நீதியாகவும் நேர்மையாகவும் அரசாண்டார். அவர்களை அல்லாஹ்வின் சட்டங்களுக்கேற்ப வாழ வழிகாட்டினார். இஸ்ரவேலர்கள் தமது இன்னல்கள் அனைத்தையும் மறந்து சீரும் சிறப்புடனும் வாழ்ந்தனர்.
(இதுவரை கூறப்பட்ட சம்பவங்களின் சுருக்கத்தை திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 246 தொடக்கம் 251 வரையுள்ள வசனங்களில் காணலாம்).
மீள்பதிவு : அதிரை முஸ்லீம்
No comments:
Post a Comment