Tuesday, October 9, 2018

***** ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா *****

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுமார் 440 ஆண்டுகளுக்கு முன்னர் நாகூர் காதிர் ஒலி ஆண்டகையின் உத்தரவால் திருவதிகை (தற்போதைய பண்ருட்டி நகரின் கிழக்கே 2 கி.மி. தூரத்திலுள்ள சிற்றூர்) நகரை ஹஜ்ரத் செய்யது நுார் முஹம்மது ஷா ஆண்டகை வந்தடைந்தார்கள்.
'ஃபக்கீர்கள்' என்று கூறப்படும் தெய்வீக ஞானிகளுக்கே உரிய குரலொலியில்

'ஹோஷ் பர் தம் நஜர் பர் கதம்' - 'உன்னில் உன் மூச்சை அடக்கு! உன் இரு பார்வையையும் உன் பாதத்தில் பதித்திடு!' என்று உரக்க மொழிந்தவர்களாக ஆண்டகை அவர்களும் அவர்களின் 'பான்வா' ஜமா ஃபக்கீர் திருக்கூட்டத்தினரும் பண்ணுருட்டி கிராமத்தில் (அக்காலத்தில் திருவதிகை நகரமாகவும் பண்ருட்டி கிராமமாகவும் இருந்தது) அருகில் இருந்த தென்னை மரத்தோப்பில் தங்கி மக்களுக்கு நல்லுபதேசம் செய்தார்கள்.

--விஜயநகர மன்னருக்கு 'சிதம்பர இரகசியத்தை' அறிவித்து நாட்டில் நிலவிய பஞ்சத்தை போக்கியது,
--பண்ருட்டி கோவிலில் உள்ள தேவதையை மக்கள் கண்முன்னே அழைத்து பேசி இஸ்லாமிய சன்மார்கத்தின் உண்மையையும் ஞானமார்கத்தின் வலிமையையும் பாமர மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தது.
--உடன்கட்டை ஏறுதுல் என்னும் கொடுமையை எதிர்த்துநின்று, தீயில் கருகி இறக்கவிருந்த ஓர் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றி இறைவனின் திருநாமத்தால் மரித்த அப்பெண்ணின் கணவனையும் உயிர்பெறச்செய்து சத்திய தீன் மார்க்கத்தை மக்கள் தாங்களே மனமுவந்து ஏற்க வழிவகை செய்தார்கள் (அத்தம்பதியினரே ஆண்டகையின் அந்திம காலம் வரை அவர்களுக்கு பணிவிடை செய்து 'செய்யது அலி - பாத்திமா' வாக வாழ்ந்து தர்கா வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்).
--தனது குருநாதர் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது ஆண்டகையைப்போல் திருமணம் புரியாமல் தீன்பணிசெய்தார்கள். காரணக்கடல் நாகூர் ஆண்டகையின் குமிழிலில்லா பாதக்குரட்டினைபோல் தனது பாதத்திலுமிருந்தும் குமிழிலில்லா பாதக்குரட்டுகள் விழும் அற்புதம் கண்டார்கள்.
--இன்னும் பல்வேறு அற்புதங்களையும் அருட்போதனைகளையும் அருளி பல இன மத சாதி மக்களை ஆண்டவனின் குடும்பமாக பாவித்து அனைவருக்கும் இறைவனின் திருக்கருணையினை அடையப்பெறச்செய்த ஆண்டகை அவர்கள் தங்களின் 93ம் வயதில் ஸ்தூல உடலைவிட்டு பிரிந்தார்கள்.
கரையிலா மெய்ஞ்ஞானக்கடலாம் நாகூர் காதிர் ஒலி தந்த குருவாம் ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷா ஆண்டகை அவர்கள் நூரே முஹம்மதின் ஒலியாக பண்ருட்டி நகரமர்ந்து இன்றும் மறைந்து மிளிரும் சுடரைப்போல தன்னை நாடிவருவோரின் நாட்டதேட்டங்களை நிறைவேற்றி உடல்மனப்பிணியகற்றி சூழவிருக்கும் ஆபத்துகளை போக்கி இறைவனின் திருக்கருணை பொங்கும் பேரொளியாய் திகழ்கிறார்கள்.
மக்கள் சூழும் ஆண்டகை அவர்களின் வருடாந்திர கந்துாரி பெருவிழா இன்ஷா அல்லாஹ் இன்று முஹர்ரம் பிறை 27 (08/10/2018) இரவு 12:00 மணியளவில் நாயகத்தின் மஜார் என்னும் திருச்சமாதியில் புனிதமிக்க சந்தனம் பூசும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இன்ஷா அல்லாஹ்! நூர் முஹம்மது ஷா ஆண்டகையின் அருள்நேசம் நமக்கும் கிடைக்கட்டுமாக!

பதிவு : அவ்லியாக்களை அறிவோம் 

Image may contain: one or more people and outdoor

No comments:

Post a Comment