Tuesday, April 30, 2019

வேளாண்மையும் நிலக் குத்தகையும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். 

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்). 
(ஸஹீஹுல் புகாரி: 2320. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)
முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். 
அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 2321. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இன்னோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 
'கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

'கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 2322. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். 
'அஸ்த் ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) என்னிடம், 'விவசாயப் பண்ணைணையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத்தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டேன்' என்றார்கள். நான், 'இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று வினவினேன். சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி), 'ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்' என்று பதிலளித்தார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 2323. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
'ஒருவர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்து கொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, 'நான் இதற்காக (சுமை சுமந்து செல்வதற்காக) படைக்கப்படவில்லை; நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இதைக் கூறிவிட்டு அண்ணலார், 'நானும், அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம். மேலும், (ஒரு முறை) ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓடலாயிற்று. அந்த ஆட்டை மேய்த்துக் கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, 'மன் லஹா யவ்மஸ் ஸபுஇ - கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்க மாட்டானே' என்று கூறியது. நானும், அபூ பக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்' என்று கூறினார்கள். பிறகு, (இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த) அபூ ஸலமா(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறிய அந்நாளில் அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை' என்று கூறினார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 2324. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
(மதீனாவாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களிடம், 'எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்ச மரங்களைப் பங்கிட்டு விடுங்கள்' என்றனர். அதற்கு அண்ணலார், 'வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள். இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, 'அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்கு பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கிறோம்' என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், 'செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)' என்று கூறினார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 2325. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும் (இன்னும் பல மரங்களை) வெட்டியும்விட்டார்கள். இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத்தான் 'அல் புவைரா' என்று கூறுவர். இதைக் குறிப்பிட்டுத்தான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி), 'புவைராவின் நெருப்பு பரவிக் கொண்டிருக்க, அதை (அணைத்திட) எதுவும் செய்ய முடியாமல் (இயலாமையுடன்) பார்த்துக் கொண்டிருப்பது 'பனூ லுஅய்' குலத்து (குறைஷித்) தலைவர்களுக்கு எளிதாகிவிட்டது' என்று (பரிகாசம் செய்து) கவிதை பாடுகிறார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 2326. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். 
மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) 'நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் நிபந்தனையுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில் அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (பயிர் நோய்களாலும், பயிர்ப் பூச்சிகளின் தாக்குதலாலும்) பாதிக்கப்பட்டு விடும். மீதமுள்ள (எங்கள் வருவாய்க்கான) நிலப்பகுதி (அவற்றின் தாக்குதல்களிலிருந்து) தப்பித்துக் கொள்ளும். இன்னும் சில வேளைகளில் மீதமுள்ள நிலப்பகுதி பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதி தப்பித்துக் கொள்ளும். எனவே, நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) இவ்விதம் குத்தகைக்கு எடுக்க வேண்டாமென்று தடை செய்யப்பட்டோம். அந்நாள்களில் தங்கமும், வெள்ளியும் (குத்தகைத் தொகையாகப் பயன்படுத்தப்படும் வழக்கம்) இருக்கவில்லை. 
(ஸஹீஹுல் புகாரி: 2327. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்தார்கள். 
இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிருந்து, நபி(ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும் இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர். உமர்(ரலி) (கலீஃபாவாக வந்த போது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக் கொள்வது அல்லது முன்பு நடை பெற்று வந்த வழக்கத்தின் படியே, நூறு வஸக்குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக் கொள்வது என்ற இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) வஸக்குகளையே தொடர்ந்து பெற்றனர். அன்னை ஆயிஷா(ரலி) நிலத்தைப் பெற்றார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 2328. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் 'அவற்றில் விளையும் (பழங்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றின்) விளைச்சலில் பாதியை (இஸ்லாமிய அரசுக்குக்) கொடுத்து விட வேண்டும்' என்னும் நிபந்தனையின் பேரில் கைபர் வாழ் மக்களுடன் ஒப்பந்தம் செய்தார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 2329. , அத்தியாயம்: 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்)

மீள்பதிவு : N.M.SAJATH

No comments:

Post a Comment