Monday, May 13, 2019

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே..! 

நாங்கள் மறுமை நாளில் எங்கள் இறைவனைக் காண்போமா..?" என்று கேட்டார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 
"மேக மூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா..?" 
என்று கேட்டார்கள்.
மக்கள், "இல்லை" என்றார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 
"மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா..?" என்று கேட்டார்கள். 
மக்கள் "இல்லை" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக..!  இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே,  உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.
இறைவன் அடியானைச் சந்தித்து, "இன்ன மனிதனே..!  உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா...? 
குதிரைகளையும், ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா..?
உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்க வில்லையா..?" என்று கேட்பான்.
அதற்கு அந்த அடியான், "ஆம்" என்பான். 
இறைவன்,  "நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா..?" என்று கேட்பான். 
அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். 
இறைவன், "அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்" என்பான். பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், "இன்ன மனிதனே..! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த்தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா..? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா..? 
உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா..?" என்று கேட்பான்.
அதற்கு அந்த அடியான், 
"ஆம், 
என் இறைவா..!" என்பான். 
இறைவன், "நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா..?"என்று கேட்பான். 
அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். 
இறைவன், 
"அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்" என்பான்.
பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். 
அதற்கு அந்த அடியான், "என் இறைவா..! நான் உன்னையும், உன் வேதத்தையும்  உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தானதர்மம் செய்தேன்" என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.

அப்போது இறைவன், "நீ இங்கேயே நில்"  என்று கூறுவான். பிறகு அவனிடம், "இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப்போகிறோம்" என்று கூறுவான். 
அந்த மனிதன், தனக்கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். 
அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும்.அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து "பேசுங்கள்" என்று சொல்லப்படும். அப்போது அவனுடைய  தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன் மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.

📒நூல் : முஸ்லிம் 5678
ۙ

🔮 நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; 
அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.

📖அல்குர்ஆன் : 4:145
மீள்பதிவு : 

No comments:

Post a Comment