Thursday, June 27, 2019

கடமையான குளிப்பு முறை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: மைமூனா (ரலி)   நூல்கள்: புகாரீ 260, முஸ்லிம் 476
வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று புகாரீ259வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 475
குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபி (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)  நூல்கள்: புகாரீ 249, முஸ்லிம் 476
நபி (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 248, முஸ்லிம் 474 
….பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 273, முஸ்லிம் 474
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை.
மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி)  நூல்கள்: புகாரீ 257, முஸ்லிம் 476
நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.
நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், ‘நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)  நூல்: முஸ்லிம் 493
‘நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று நபி (ஸல்) கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது.
கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.
மீள்பதிவு : யாசர் அரபாத்

No comments:

Post a Comment