சப்போட்டா பழம்:-
வெப்பமண்டல கனிகளில் பரவலாக சாப்பிடப்படும் பழவகை சப்போட்டா. தித்திப்பான சுவை கொண்ட இது அதிக ஆற்றல் தரக்கூடியது. பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை அடக்கியது. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது சப்போட்டா.
மெக்சிகோ, பெலிசி போன்ற பகுதி மழைக்காடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. சப்போட்டா அதிக ஆற்றல் தரக்கூடியது.
100 கிராம் பழத்தில் 83 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. நிறைந்த நார்ச்சத்து கொண்டது சப்போட்டா. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.
மேலும் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை குணமாக்கும் என்பது நல்ல செய்தி. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை உருவாக்கும் விஷப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.
டேனின் எனப்படும் சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் சப்போட்டாவில் உள்ளது. (காயாக இருக்கும்போது வெளிப்படும் கசப்புத்தன்மை கொண்ட பால்போன்ற வேதிப்பொருள் தான் டேனின் ஆகும்) இது வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து உடலுக்கு எதிர்ப்பாற்றல் வழங்கக் கூடியது.
உடல் எரிச்சலில் இருந்து விடுவிக்கும் திறன் கொண்டது. வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு போன்றவை வராமல் காக்கும். மூல வியாதிக்கும் எதிர்ப்பாற்றல் கொண்டது. குடல், இரைப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து காக்கும் திறன் கொண்டது டேனின்.
சிறந்த அளவில் வைட்டமின்-சி சப்போட்டா பழத்தில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவு 'வைட்டமின்-சி' கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் 'வைட்டமின்-சி'யின் பங்கு மகத்தானது.
அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இது சருமம் மற்றும் செல் சவ்வுகள் சிறப்பான வளர்ச்சி பெற உதவும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் வழங்கும்.
புத்துணர்ச்சி மிக்க சப்போட்டாப் பழத்தில் பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும்,போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றச் செயல்களிலும், நொதிகளின் செயல்பாட்டிற்கு துணை புரிவதிலும் பங்கெடுக்கின்றன
No comments:
Post a Comment