Tuesday, July 22, 2014

மூலிகைகளின் தளபதி வல்லாரை

நினைவாற்றலை பெருக்கும் கிழட்டு தன்மையை தடுக்கும்
நினைவாற்றலை பெருக்க வேண்டும் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது ‘வல்லாரை’ தான். ஆனால் வல்லாரைக்கு இதை தவிர வேறு சில  நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. வல்லாரைக்கு ‘சரஸ்வதி’ என்ற பெயரும் உண்டு. ஒருவரை புத்திமானாக்கும் அற்புத சக்தி  இருப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் வல்லாரையை கீரையாகவோ, துவையலாகவோ சமைத்து சாப்பிடுகிறார்கள். இது மிக  நல்லது. வல்லாரையை அப்படியே உலர்த்தி பொடி செய்து மாத்திரையாகவும் தருகிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Centelle asiatia (linn) Urban.  மண்டூகபரணி, ஆரை, சிங்கி, சண்டகி, குடகம், விக்கிராத்தா, குளக்குறத்தி, குணச்சாலி குணத்தி என்ற பெயர்களும் உண்டு.  

மலை வல்லாரை, கருவல்லாரை என்ற இருவகைகள் உள்ளன. இது கணுக்களில் வேர்விட்டு தரையோடு படரும் சிறு செடி இனம். இதன் இலைகள்  கரும்பச்சை நிறமாக இருக்கும். வட்ட, அரைவட்ட வெட்டு பற்களுடன் கூடிய கை வடிவ நரம்பு அமைப்புகளுடன் நீண்ட காம்புடைய ஆழமான இதய  வடிவ இலைகளை கொண்டது. இதன் பூ ரோஸ் நிறத்திலும், பழங்கள் சிறிய முட்டை வடிவிலும் இருக்கும். கசப்புடன் கூடிய துவர்ப்பு சுவை  உடையது. இதன் மகத்துவம் மிகப்பெரியது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர  நடராஜன். 

இந்த மூலிகையில் asiaticoside, resins  போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இது நினைவாற்றல், அறிவு, மனதை ஒருமுகப்படுத்துவது,  துடிப்போடு இருக்க செய்வது ஆகிய செயல்களை தூண்டி, மூளையின் திசுக்களை புதுப்பிக்கவும் செய்கிறது. வல்லாரையில் இருக்கும் antiascorbic  acid  தோலில் ஏற்படும் பலவித நோய்களையும் குணப்படுத்தும். இது தொழுநோயை கூட குணப்படுத்தும் சக்தி படைத்தது. இதில் இருக்கும்  ஹைட்ரோகாட்டிலின் நம் மூளையின் செயல்களை முடுக்கி விடுகின்றன. வல்லாரையில் இருக்கும் வல்லாரின் என்கிற அல்கலாய்டு நரம்புகளுக்கு  மிகப்பெரிய சக்தியை தருகிறது. 

நோயை நீக்கவும், உடலை பலப்படுத்தவும், வியர்வையை அதிகப்படுத்தவும், தாதுபலத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

மூலாதார நரம்புகள் புதுப்பிக்கப்பட்டு கபால நரம்புகள் செயல்பட்டு நல்ல நினைவாற்றலை தருகிறது.

வல்லாரையுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி, சிறு பருப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் கடைந்து தக்காளி, சிறிது கடுகு சேர்த்து தாளித்து  வைத்துக்கொண்டு வெயில் நேரத்தில் உண்டு வந்தால் நரம்புகள் நல்ல வலுப்பெற்று சுருக்கத்தை போக்கி சீராக வைத்துக்கொள்கிறது.

வல்லாரை இலையை உலர்த்தி பொடி செய்து சிறிது நெய் சேர்த்து உணவில் பிசைந்து ஒரு பிடி அளவு சாப்பிட்டால் வாதம், வாயு, அண்டவீக்கம்,  யானைக் கால், குஷ்டம், நெறிகட்டி, கண்ட மாலை, மேகரணம் குணமாகும்.

வல்லாரை சூரணத்தை ஒரு சிட்டிகை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் வீக்கம், தோல் வியாதிகள், மூளை நரம்பு சம்பந்தமான  நோய்கள், இளநரை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் குணமாகும். உடல் கிழட்டுதன்மை அடைவதை தடுக்கும். தோலுக்கு நிறத்தையும் மினு மினுப்பையும்  தரும்.

வல்லாரை இலையுடன் தூதுவளை இலையை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து 20 துளியை மட்டும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து  2 வேளை குடித்து வர தொண்டை கரகரப்பு, சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் குணமாகும்.

பல மருத்துவ குணங்கள் வல்லாரைக்கு உண்டு. மூலிகைகள் பல இருந்தாலும் அவற்றில் வல்லாரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 108  காயகல்ப மூலிகைகளில் வல்லாரை ஒரு தளபதி நிலையில் உள்ளது.

உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்குவதில் வல்லாரைக்கு முக்கிய பங்கு உண்டு. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும்  வல்லாரை தனி இடம் வகிக்கிறது.

சிலருக்கு வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே என்ற தவிப்பான மனநிலை (anxiety) இருக்கும். இதை செய்யலாமா, அதை செய்தால்  சரியாகிவிடுமா என்ற மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்களது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கும்  வல்லாரையில் தீர்வு இருக்கிறது.

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த Scleroderma     (ஸ்கிளீரோடெர்மா) என்ற இணைப்பு திசுக்கள் கடினமாதல் மற்றும் தண்டுவட பிரச்னைக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது. வல்லாரை குளம், குட்டை  போன்ற சிறிய நீர் நிலைகளில் அமோகமாக வளரும். இது குறிப்பாக மலைபாங்கான இடங்களில் தானாகவே வளர்கிறது. 


விஷத்தை நீக்க வேண்டும்


வல்லாரையை பச்சையாக உபயோகிக்க கூடாது. இதில் ஒருவித விஷத்தன்மை உள்ளது. எனவே சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும். புதிய மண்  சட்டியில் பசும்பால் முழுவதும் ஊற்றி ஒரு வெள்ளை துணியை கட்டி அதில் வல்லாரை இலைகளை போட்டு மூடி வைத்து சிறு தீயில் எரிக்க  வேண்டும். பால் ஆவியாகி வல்லாரையிலுள்ள விஷத்தன்மையை முறித்து கீழே தள்ளிவிடும். பின்னர் இலையை உலர்த்தி இடித்து பொடியாக்கி  பயன்படுத்தவேண்டும்.

வல்லாரை கேப்சூல் ஆபத்து

வல்லாரையின் மொத்த செடியும் மருந்துதான். ஆனால் சிலர் வல்லாரையிலுள்ள அல்கலாய்டுகளை சிந்தெடிக் முறையில் பிரித்து கேப்சூல்களாக  விற்கிறார்கள். இது தவறு. காரணம் இயற்கை எப்போதும் தன் படைப்புகளில் ஒரு சமநிலையை வைத்திருக்கிறது. அதை பிரிப்பதால் நிச்சயம் பக்க  விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை கேப்சூல்களை தவிர்த்து நேரடியாக தயாரிக்கப்பட்ட மாத்திரை அல்லது சமைத்து சாப்பிடலாம்.

நல்லாரை காண்பதும் நன்றே!  வல்லாரை உண்பதும் நன்றே!

No comments:

Post a Comment