தயிருக்கு நல்ல குணமும் உண்டு, கெட்ட குணமும் உண்டு. எந்த ஒரு பொருளையும் முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடாது, முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதைப் பயன்படுத்துகிற ஒருவர், அவருடைய அக்னி பலம், தேசம், காலம், ரோகம் ஆகியவற்றைப் பொறுத்தே பத்தியம் சொல்ல முடியும்.
தயிர் செரிப்பதற்குச் சற்றே கடினமானது, இனிப்பும் புளிப்பும் கலந்தது. வாதத்தைத் தணிப்பது, உடலுக்குப் பலம் தருவது. நீர்ச்சத்தை இழக்க வைக்காமல் இருக்கும். விஷ ஜுரம் போன்ற நோய்களுக்கும், நாள்பட்ட ஜலதோஷ நோய்களுக்கும் இது நல்லது.
இரவு வேளைகளில் தயிர் சாப்பிடுவது தவறு என்று பாப பிரகாசம் என்ற நூல் சொல்கிறது. தயிரை இந்துப்புடனோ, மிளகுடனோ, நெய்யுடனோ, சர்க்கரையுடனோ, பச்சை பயறுடனோ, நெல்லிக்காய், தேன் போன்றவற்றுடனோ சேர்த்தே சாப்பிட வேண்டும்.
இலையுதிர் காலத்திலும், வசந்த காலத்திலும், வெயில் காலத்திலும் தயிரை அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாக்கிச் சாப்பிடக் கூடாது. பித்த நோய்கள், கப நோய்களுக்குச் சாப்பிடக் கூடாது.
வாத-கப நோய்களுக்குச் சாப்பிட்டாக வேண்டும் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்தோ அல்லது கடுகுப் பொடி சேர்த்தோ சாப்பிட வேண்டும். குளிர் காலங்களுக்கு தயிர் சிறந்தது. உடலுக்கு வலுவைத் தருவது. மழைக் காலங்களில் இதைச் சாப்பிட வேண்டும் என்று பாப பிரகாசர் சொல்கிறார்.
எத்தனையோ நிகண்டுகள் இருந்தாலும் ஸ்ரீ நரஹரி பண்டிதரின் ராஜ நிகண்டில் தயிர் பற்றி கூறப்படும் விளக்கங்கள் ஏற்புடையதாக உள்ளன.
தயிர் மனச்சோர்வை மாற்றுவது, சீரணத்தை அதிகரிப்பது. ஆனால் தோல் நோய்கள், குஷ்ட நோய்கள், பிரமேக நோய்கள் மற்றும் சில நோய்களுக்குச் சாப்பிடக் கூடாது.
நன்றி ; டாக்டர் எல்.மகாதேவன் / தி இந்து
No comments:
Post a Comment