Friday, August 15, 2014

இஞ்சி, ஓர் மருத்துவ மூலிகை

சுவைக்காக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் இஞ்சி, ஓர் மருத்துவ மூலிகையாகும்.
உடலுக்கு தேவையான ரசாயனங்கள், தாதுக்கள் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது, 100 கிராம் இஞ்சி 80 கலோரி ஆற்றலை தருகிறது.
சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது.
அதனால் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.
பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுவலி போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு.
இது `ஆன்டி ஆக்சிடென்ட்’ ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இஞ்சியில் இருக்கிறது.
இஞ்சி டீ
ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சி சாறு, துளசியை சேர்க்கவும். உடனே ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி கறுப்பு உப்பு ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.
பால் இல்லாத இந்த டீ மிகமிக சுவையாக இருக்கும். சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.
ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கக்கூடிய ஆஸ்பிரின் போன்ற மாத்திரை, மருந்துகளை சாப்பிடக்கூடியவர்களும், உடல் உஷ்ணத்தன்மை கொண்டவர்களும் குறைந்த அளவிலே இஞ்சி சாறு பருகவேண்டும்.
இஞ்சி குழம்பு
தேவையானவை
இஞ்சி- 50 கிராம்
பூண்டு- 50 கிராம்
வெங்காயம்- ஒன்று
தக்காளி- ஒன்று
பச்சை மிளகாய்- 2
புளி- எலுமிச்சை அளவு
மிளகாய் – தூள்- அரை தேக்கரண்டி
மிளகு- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க
நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி வெட்டிய இஞ்சியை பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.
பின் ஆறவைத்து பேஸ்ட் ஆக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்த பின், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் இஞ்சி மற்றும் மிளகு கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கியவற்றுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
மிளகாய் தூள் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி விடலாம்.
இஞ்சி துவையல்
தேவையானவை
இஞ்சி துண்டு- 6
உளுத்தம் பருப்பு- ஒரு கப்(சிறியது)
புளி- ஒரு கொட்டை பாக்கு அளவு
காய்ந்த மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
எண்ணெய்- வதக்குவதற்கு
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை லேசாக சிவக்கும் படி வறுக்கவும்.
பிறகு காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக், அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
சூடு ஆறிய பிறகு வறுத்த பொருட்களுடன் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் நற நற வென்று அரைக்கவும். சுவையான இ‌ஞ்‌சி துவையல் தயா‌ர்.

No comments:

Post a Comment