Saturday, August 9, 2014

ஹதீஸ்-சூனியம்

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:
பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அல்அஃஸம் எனப்படும் யூதன் ஒருவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சூனியம் செய்துவிட்டான். 
இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள்.
பிறகு கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர்.
என் தலைமாட்டில் இருந்தவர் என் கால்மாட்டில் இருந்தவரிடம், அல்லது கால்மாட்டில் இருந்தவர் என் தலைமாட்டில் இருந்தவரிடம் "இந்த மனிதருக்கு என்ன நோய்?" என்று கேட்டார். மற்றவர், "சூனியம் செய்யப்பட்டுள்ளார்" என்று சொன்னார். அதற்கு அவர், "யார் அவருக்குச் சூனியம் வைத்தார்?" என்று கேட்டார். மற்றவர், "லபீத் பின் அல்அஃஸம்" என்று பதிலளித்தார். அவர், "எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?" என்று கேட்க, மற்றவர், "சீப்பிலும் சிக்கு முடியிலும்" என்று பதிலளித்தார். மேலும், ஆண் பேரீச்சம்பாளையின் உறையில் என்றும் கூறினார்.
அவர், "எங்கே அ(ந்தச் சூனியம் வைக்கப்பட்டுள்ள)து?" என்று கேட்க, மற்றவர், "தூ அர்வான்" குலத்தாரின் கிணற்றி(லுள்ள கல் ஒன்றின் அடியி)ல் என்று பதிலளித்தார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அங்கு சென்றார்கள்.
பிறகு (என்னிடம்), "ஆயிஷா! அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தன" என்று சொன்னார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே? அதைத் தாங்கள் (வெளியில் எடுத்துக்காட்டி) எரித்திருக்கக் கூடாதா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "இல்லை; அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். மக்களிடையே தீமையைப் பரப்ப நான் விரும்பவில்லை. எனவே, அதை நான் புதைத்துவிடும் படி கட்டளையிட்டுவிட்டேன். அவ்வாறே புதைக்கப்பட்டுவிட்டது" என்று பதிலளித்தார்கள்.
                                                                                                                                    (நூல் புகாரி 
4406)

No comments:

Post a Comment