‘உணவுக்கும் மருந்துக்கும் அதிக வேற்றுமை இல்லை’ என்கிறது ஒரு சீனப் பழமொழி.
உணவு கட்டுப்பாடு குறையும்போது மருந்தை நாட வேண்டி உள்ளது. மருந்தைக் குறைப்பதற்கு, உணவைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
அதுவும் நீரிழிவு நோயைப் பொறுத்தவரை உணவுதான் அதற்கான சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோய் மருத்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1.உணவும் உடற்பயிற்சியும் மனஉறுதியும்
2.உணவும் உடற்பயிற்சியும் மாத்திரையும் மனஉறுதியும்
3.உணவும் உடற்பயிற்சியும் ஊசியும் மனஉறுதியும்
எப்படிச் சமாளிப்பது?
இந்த மூன்றிலுமே உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது என்று சொன்னால், அதில் தவறில்லை.
உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.
நீரிழிவு நோய் தோன்றலாம் என்ற ஐயம் அல்லது தோன்றிவிடும் என்ற பயம் உள்ள காலத்தில் அல்லது மிகக் குறைவான தாக்கத்தையே நோய் ஏற்படுத்தி இருக்கும். அந்த ஆரம்பக் கட்டத்தில் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியுமே போதும் என்பது மருத்துவர்களின் கருத்து.
அதன்பிறகு நீரிழிவு நோய் கட்டுப்பாடு சற்று அதிகம் தேவைப்பட்டால், மாத்திரை உட்கொண்டு அக்கறையோடு உணவு கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
கட்டுப்பாடில்லாவிட்டால்
சில சமயம் இந்த நிலையிலும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வராது அதிகரித்துவந்தால் அல்லது உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை நோயாளி சரியாகப் பின்பற்ற இயலாதவராக இருந்தால் இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்வது அவசியம். ஏனென்றால், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் கால்கள், சிறுநீரகம், அதைச் சார்ந்த உறுப்புகளையும், இதயம், கண், மூளை, நரம்பு போன்ற உடலுறுப்புகளையும் பாதித்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ரத்த ஓட்டம் பெருமளவில் பாதிக்கப்படும்.
சர்க்கரை நோய் தோன்றுவதற்கு அடிப்படையான காரணங்களை முன்பே பார்த்துவிட்டோம். அதன் கொடுமையைக் குறைக்கக்கூடிய உணவு கட்டுப்பாட்டைப் பற்றி பார்ப்போம்.
உணவு கட்டுப்பாட்டின் அவசியம்
உணவைக் கட்டுப்படுத்துவது என்பது அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. அதன் தரத்தை, வகையைக் கட்டுப்படுத்துவதே ஆகும். பொதுவாக எல்லாருக்கும் சமச்சீரான உணவு (Balanced diet) தேவை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். இதைப் போலவே நீரிழிவு நோயாளிகளுக்கும் எனத் தனியாகச் சமச்சீரான உணவு உண்டு. அதில் சிறிய அளவு மாற்றமே இருக்கும். மாவுச்சத்து மிகுந்த கார்போஹைட்ரேட்டின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டு, அதை ஈடுகட்டும் விதத்தில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த காய்கறிகளும் இனிப்புக் குறைவான பழங்களும் இடம்பெறும்.
எதைக் குறைப்பது, எதைக் கூட்டுவது என்ற கேள்வி எழும்போது:
அரிசி போன்ற தானியங்களைக் குறைத்துப் பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் உணவு திட்டத்தில் மூன்று வகையான உணவுப் பொருள்கள், மூன்று விதமான அட்டவணையில் அடங்கியுள்ளன. அவை அளவோடு எடுத்துக்கொள்ளக் கூடியது, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடியது, அறவே ஒதுக்கக் கூடியது ஆகியவை.
அளவோடு எடுத்துக்கொள்ளக் கூடியவை:
தானியங்கள் - அரிசி, கோதுமை, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு,
பருப்பு - பட்டாணி, பருப்பு வகைகள், எள், குறிப்பிட்ட பழவகைகள்.
அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக் கூடியவை:
கீரை வகைகள், குறிப்பாக முருங்கை, வெந்தயக்கீரை, வல்லாரைக் கீரை, காய்கறிகள் (வாழைக்காய் தவிர), எலுமிச்சம் பழம், வாழைத்தண்டு.
அறவே தவிர்க்க வேண்டியவை:
கிழங்குகள் (நிலத்தின் அடியில் விளையும் இஞ்சி, மஞ்சள், வெங்காயம், பூண்டு, முள்ளங்கி தவிர), உறையும் தன்மையுள்ள எண்ணெய் வகைகள், நெய், வெண்ணெய், பாலாடை கட்டி, பாலேடு, சர்க்கரை, வெல்லம், தேன், முந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகள், தேங்காய், இளநீர், குளிர்பானங்கள், சத்துமாவு, பானங்கள், பூஸ்ட், ராகிமால்ட், ஹார்லிக்ஸ், போர்ன்விடா, ஓவல்டின், உலர்ந்த பழ வகைகள், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், சப்போட்டா, திராட்சை போன்ற இனிப்பு மிகுந்த பழங்கள், ஐஸ்கிரீம், பீட்ஸா போன்ற பேக்கரி தயாரிப்புகள், இனிப்பு சேர்த்த பிஸ்கட், ஜாம், ஜெல்லி, சாஸ், மது வகைகள், சிகரெட், இனிப்பு சேர்த்த காபி, டீ போன்ற பானங்கள் (சர்க்கரை இல்லாமல் காபி, டீ, பால் போன்றவற்றை ஒரு நாளைக்கு 3 வேளையாக மொத்தம் 500 மி.லி. அருந்தலாம்).
சாப்பிடக் கூடாதவற்றை விளக்கமாகச் சொன்னதற்குக் காரணம் அவற்றை ஒதுக்கிவிட்டால், மற்றவை சாப்பிடக் கூடியவை என்பதால்தான்!
ஆதாரம்:
எஸ். புனிதவல்லி எழுதிய
‘நீரிழிவு- நோய்-காரணம்-நிவாரணம்-உணவு முறைகள்-
மருத்துவம்' என்ற நூல்
No comments:
Post a Comment