Tuesday, December 2, 2014

தீன்குலப் பெண்ணின் குணங்கள்.

தொழுகை விஷயத்தில் பேணுதலுடையவளாக இருப்பாள்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.                                                                                  அல்குர்ஆன் 23:1,2

மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். 
அல்குர்ஆன் 23:9,10,11

மனிதன் பதறக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான். தொழுகையாளிகளைத் தவிர. அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள் 
அல்குர்ஆன் 70:19,20,21,22,23

அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள்.                                            அல்குர்ஆன் 70:34
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.                                                                                          அல்குர்ஆன் 33:33
(முஹம்மதே!) உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு செல்வத்தை அளிக்கிறோம். (இறை)அச் சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு. 
அல்குர்ஆன் 20:132

என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். "யார் இவர்?'' என்று கேட்டார்கள். நான் "இவர் இன்னவர்?' என்று கூறிவிட்டு அவரது தொழுகை பற்றி ("அவர் அதிகம் வணங்குபவர்' என்று புகழ்ந்து) கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "போதும் நிறுத்து! (வணக்கவழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)                                                                                     நூல் ; புகாரீ 43
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது. இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி)                   நூல் : முஸ்லிம் 1319

No comments:

Post a Comment