Tuesday, December 2, 2014

பிரார்த்தனையின் ஒழுங்குகள்.



இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும், பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம்.

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்
எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்ற உத்தரவாதத்தை இந்த நபிமொழி வழங்குகின்றது.
அப்படியானால் சிலரது பிரார்த்தனைகள் மறுக்கப்பட காரணங்கள் என்ன?
ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)                                                                நூல்: முஸ்லிம் 1686
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. தங்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று விரும்பக் கூடியவர்கள் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அவசரப்படக் கூடாது.
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு நான் கேட்டேன்; கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அல்லாஹ் நமது வேலையாள் அல்ல! அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.
நான் பிரார்த்தனை செய்தேன்; அங்கீகரிக்கப்படவில்லைஎன்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)                                                                         நூல்: புகாரி 6340
பாவமானதைக் கேட்கக் கூடாது.
பிரார்த்திக்கும் போது இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது. இறைவா! லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு! என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை.
பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும், பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)                                                                 நூல்: முஸ்லிம் 4918
மரணத்தைக் கேட்கக் கூடாது.
முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு!என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.
எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)                                                    நூல்: புகாரி 5671, 6351

No comments:

Post a Comment