கருணை உள்ளம் படைத்த பெருந்தலைவர் காமராஜரிடம் கலையுள்ளம் நிரம்பி வழிந்தது. காந்தத்தை நோக்கி இரும்பு பாய்ந்து செல்வது போல் கலைஞர்கள் அனைவருமே பெருந்தலைவரை நாடிச் சென்றனர். கட்சிக் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துக் கலைஞர்களிடமும் அன்புடன் பழகிய பெருந்தலைவர் காமராஜர் அனைத்துக் கலைஞர்களையும் சமமாகப் போற்றினார்.
கலைஞர்கள் ஆர்வமுடன் அழைக்கும் எந்த ஒரு விழாவுக்கும் தட்டிக் கழிக்காமல் சென்று கலந்து கொள்வார். கலைஞர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பது தான் காமராஜரின் ஒரே நோக்கம். அவரது இந்தப் பெருந்தன்மை தான் அனைத்துத் தரப்புக் கலைஞர்களையும் அவர் மீது பாசம் கொள்ளச் செய்தது என்பது உண்மை.
கலைஞர்களில் குறிப்பாக சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், கவிஞர் கண்ணதாசன், நடிகை சாவித்திரி ஆகியோர் காமராஜரின் தன்னலமற்ற சேவையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் நடைபோட்டவர்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காமராஜரின் சுட்டுவிரல் அசைவுக்குக் கட்டுப்பட்டு தீவிரக் கட்சிப் பணியாற்றினார்.
ஜெமினி கணேசன் - சாவித்திரி தம்பதியினர் பெருந்தலைவர் காமராஜர் மீது பக்தியும், ஈடுபாடும் கொண்டு விளங்கி வந்தார்கள். சீன யுத்தத்தின் போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காமராஜர் கேட்காமலேயே யுத்த நிதியாக வழங்கியவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி.
கவிஞர் கண்ணதாசன், காமராஜரைப் பற்றி காலத்தால் அழிக்க முடியாத பல காவியங்களை படைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment