Monday, December 15, 2014

தொழில் முனைவோருக்கு `டின்’ அவசியமா ?

வரி செலுத்துபவர் அடையாள எண் (Taxpayer Identification Number) என்பதைத்தான் டின் நம்பர் என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் தங்களது தொழிலை மாநில அரசிடம் பதிவு செய்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.
ஏற்கெனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் அதை முறைப்படுத்தப்பட்ட வகையில் செய்வதற்கு டின் நம்பர் அவசியம். உற்பத்தி, சேவை, வர்த்தகம் என எந்த தொழில் வடிவமாக இருந்தாலும் டின் நம்பர் அவசியம். மாநில அரசின் வணிகவரித் துறை மூலமாக இது வழங்கப்படுகிறது. தொழில் நிறுவனம் பதிவு செய்யப்படும் மாநிலத்தில்தான் டின் நம்பர் வாங்க வேண்டும்.
பிற மாநிலங்களிலும் தொழில் செய்ய வேண்டும் என்றால் தனியாக மத்திய விற்பனை வரி எண் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அந்தந்த பகுதி வணிகவரி அலுவலகங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த எண் பதினோரு இலக் கங்களைக் கொண்டது. ஒவ்வொரு இலக்கத்துக்கும் ஒரு குறியீடு உள்ளது. இந்த எண் மதிப்பு கூட்டு வரி விதிப்பு (வாட்) கணக்கோடு தொடர்பு கொண்டது.
ஏன் வேண்டும் டின்?
உற்பத்தியாளர்கள், முகவர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதி செய்பவர்கள் என வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் இந்த அனுமதி வாங்க வேண்டும். அரசுக்கு வணிக வரியை முறையாக செலுத்திவிட்டு இந்த தொழிலை செய்கிறோம் என்பதற்கான அடையாளம் இது. ஒரு தொழில்முனைவர் தனது உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை வரி கொடுத்துத் தான் வாங்குகிறார்.
அதுபோல பயனாளிகளிடம் வரியை வாங்கிக் கொண்டுதான் விற்பனை செய்கிறார். குறிப்பிட்ட டின் எண்ணி லிருந்து இந்த வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை வாடிக்கையாளருக்கும் அரசுக்கும் தெரியப்படுத்த இது உதவுகிறது.
டின் நம்பர் பெறுவதற்கான விண்ணப்பதாரரின் புகைப்படம், குடும்ப அட்டை நகல், PAN கார்டு நகல், சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல், வாடகை ஒப்பந்த பத்திரம் நகல் ஆகியவை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
மேலும் வணிகவரி துறையின் Form F Form A விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். நாம் மேற்கொள்ள உள்ள தொழிலுக்கு ஏற்ப கட்டணங்கள் இருக்கும். இந்த கட்டணத்திற்கு மட்டும் வணிகவரித்துறை பெயரில் வங்கி வரைவோலை கொடுக்க வேண்டும். ஏற்கனவே டின் நம்பர் வைத்திருக்கும் இரண்டு நபர்களின் பரிந்துரைக் கடிதத்தை நமது விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு டின் நம்பர் நமக்கு வழங்கப்படும். ஒரே வாரத்தில் முகவரி தேடி நமக்கு டின் நம்பர் சர்டிபிகேட் வந்துவிடும் ஒரு பான் எண்ணுக்கு ஒரு டின் நம்பர் மட்டுமே வழங்கப்படும்.
இந்த எண்ணை அடிப்படையாக வைத்து ஒருவர் பல தொழில்களையும் செய்யலாம். ஆனால், டின் எண் வாங்கியவரின் பெயரில்தான் இந்த தொழில்கள் தொடங்க வேண்டும். ஒருவரது பெயரில் வாங்கப்பட்ட டின் நம்பரை வைத்து கூட்டாகத் தொழில் செய்ய பயன்படுத்த முடியாது. ஒரே டின் எண்ணின் அடிப்படையில் புதிய தொழில் தொடங்கும்போது வணிக வரித் துறைக்கு கடிதம் மூலமாகத் தெரிவித்துவிட வேண்டும்.
டின் எண் வாங்குவது சிரமமான வேலையல்ல, இதற்கென உள்ள முகவர்கள் மூலமாக எடுத்துக் கொள்ள லாம். மேலும் தொழில் ஆலோசகர்கள், எம்எஸ்எம்இ அலுவலகங்கள், டான்ஸ்டியா அலுவலகங்கள் மூல மாகவும் டின் நம்பர் எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment