கான் அப்துல் கபார்கான் எனப்படும் பாத்ஷா கான் 1890-ல் சிந்து , காபூல், ஸ்வாட் நதிகள் பாய்ந்தஉத்மான்ஜாய் கிராமத்தில் பிறந்தார். பக்தூன்கள் எனப்படும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர் அவர். அமைதி என்பதே என்னவென்று தெரியாத அளவுக்குப் போர்களால் நிரம்பியிருந்தது கபார்கான் வாழ்ந்த பகுதி. ஆங்கிலேயர்கள் அப்பகுதியை வெல்ல பலகாலம் பிடித்தது. கடுமையான சட்டங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றால் அம்மக்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். கர்சன் காலத்தில் பல்வேறு பக்தூன்கள் வாழ்ந்த பகுதிகளை ஒரே பிரிவாகச் சேர்த்து வடமேற்கு எல்லை மாகாணங்கள் (NWFP) உருவாக்கப்பட்டது.
கபார்கானின் தந்தை உத்மான்ஜாய் கிராமத்தின் தலைவர். அவரின் மகன்களை விக்ராம் எங்கும் கிறிஸ்துவப் பாதிரியார் நடத்திய பெஷாவர் முனிசிபல் பள்ளியில் இணைத்து படிக்க வைத்தார். அவரின் சேவை மனப்பான்மை கபார்கானை பெரிதும் கவர்ந்தது. நான்கைந்து ஏழைப்பிள்ளைகளை அவர் இலவசமாகப் படிக்க வைத்தது பெரிய உத்வேகத்தை இவருக்குள் தந்தது.
மூத்த மகனான கான் சாகிப் இங்கிலாந்து சென்று மருத்துவப் பட்டம் பெற்று திரும்பினார். இளைய மகனான கபார்கான் ஆங்கிலேய ராணுவத்தில் சேர விரும்பினார். ஆனால், அங்கே பணிக்குச் சேர்ந்ததும் பக்தூன் பெரியவர் ஒருவரை வயதில் இளைய ஆங்கிலேய அதிகாரி இழிவாக நடத்துவதைப் பார்த்து அதைவிட்டு வெளியேறினார். வெளிநாட்டுக்கு இவரைப் படிக்க அனுப்ப தந்தை முடிவு செய்திருந்த சூழலில் மூத்தவர் கான் சாகிப் 'மே' என்கிற ஆங்கிலப் பெண்ணை விரும்புவது தெரிய வந்தது. அம்மா கபார்கானும் அப்படியே வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வார் என்று பிள்ளை ஊருக்குப் போவதற்குத் தடை போட்டுவிட்டார். அலிகார் பல்கலையில் படிக்கப் போய் அங்கும் மனம் ஒட்டாமல் ஊர் திரும்பி தன் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பள்ளிக்கூடங்கள் நடத்த ஆரம்பித்தார் கபார்கான். நடுவில் ஆங்கிலேய அரசை எதிர்த்து பஜவுரி பகுதியில் தங்கி ஆயுதக்கிளர்ச்சி செய்யவும் அவர் முயன்றார். உலகப் போர் வந்ததால் கிளர்ச்சி திட்டங்கள் கைவிடப்பட்டன.
NWFP பகுதியில் பக்தூன்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பழங்குடியின மக்களே இருந்தபடியால் பிரிட்டிஷ் இந்தியாவின் பிற பகுதிகளுக்குத் தரப்பட்ட கொஞ்ச, நஞ்ச உரிமைகள், சலுகைள், தேர்தல் எல்லாமும் இவர்களுக்கு மறுக்கப்பட்டன. ரவுலட் சட்டத்தை இந்தியாவில் ஆங்கிலேய அரசு கொண்டு வந்து கடுமையான அடக்குமுறைகளை முன்னெடுத்த பொழுது காந்தியின் போராட்ட முறைகளைக் கேள்விப்பட்டுக் கபார்கான் ஈர்க்கப்பட்டார். ஆங்கிலேய அரசை எதிர்த்து ஒரு பொதுக்கூட்டத்தைக் ஏப்ரல் 6, 1919 அன்று கூட்டினார். அமைதி வழியில் எதிர்ப்பை பதிவு செய்ய அங்கே கூடியிருந்த மக்களின் எண்ணிக்கை 50,000! இதனால் சிறைக்குள் தள்ளப்பட்டார் கபார்கான். அபராதம் கட்டச்சொன்னார்கள். மறுத்ததால் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு ஆறு மாதம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்து-முஸ்லீம்களை (1919-1924) இணைத்துக் கொண்டு நடந்த கிலாபத் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். காந்தியை நாக்பூரில் தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டுப் பரவசம் பொங்க ஊர் திரும்பினார். கிலாபத் இயக்கம் சர்வதேச சூழலால் முடிவுக்கு வந்த பிறகு ஹிந்து-முஸ்லீம் கலவரங்கள் நாடு முழுக்க நடைபெற்றன. ஆனால், தன்னுடைய மாகாணம் அமைதியாக இருப்பதைக் கபார்கான் உறுதி செய்தார். அஞ்சுமான் என்கிற அமைப்பை உருவாக்கி பக்தூன்களுக்குக் கல்வி கற்பிப்பது, அன்பே இஸ்லாமின் வழி என்பதைப் புரியவைத்தல், திருமணம், இறுதி ஊர்வலம் ஆகியவற்றுக்கு அதிகமாகச் செலவு செய்தல் ஆகியவற்றைத் தடுத்தல் முதலிய பணிகளைத் தீவிரமாகச் செய்தார். பல பள்ளிக்கூடங்களைப் பெண்கள், ஆண்களுக்காகத் திறந்தார். இதை ஆங்கிலேய அரசு கடுப்போடு பார்ப்பதை அவர் தந்தை கண்டு, "உனக்கேன் இந்த வேலை?" என்று கேட்டார். "நீங்கள் நான் நமாஸ் செய்தால் எதிர்ப்பீர்களா? எனக்குப் பள்ளிகள் திறப்பது தொழுவது போலத்தான்!" என்றார் கபார்கான்.
சுயாட்சிக்காகப் பேசி மக்களைக் கிளர்ச்சிப்படுத்துவது செய்த கபார்கான் வன்முறையைக் கைக்கொள்ளக் கூடாது என்பதை உறுதியாக அறிவுறுத்தினார். அவரை மூன்று வருடங்கள் சிறைக்குள் தள்ளியது ஆங்கிலேய அரசு. அங்கே கீதை, கிராந்த் சாகிப், பைபிள் முதலிய நூல்களைப் படித்து அன்பு வழியில் மேலும் உறுதிகொண்டார். உருவ வழிபாட்டில் ஈடுபடும் இந்துக்களோடு இணைந்து செயல்படுவதைக் காந்தி வழியில் அவர் வலியுறுத்தினார். அதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்த பொழுது, "அவர்கள் சிலைகளை வழிபடுகிறார்கள். நாம் நினைவிடங்களை வழிபடுவது இல்லையா? ஒரே இறைவன் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் அவர்களோடு இணைவதில் தவறில்லை." என்று பதிலளித்தார்.
'பக்தூன்' என்கிற பெயரில் தாய்மொழியில் ஒரு இதழை 1928-ல் துவங்கினார். அதில் ஆங்கிலேயரிடம் விடுதலை கோரும் பக்தூன்கள் ஏன் தங்கள் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தியாவில் இருந்த பர்தா முறையை இஸ்லாமியத்தன்மைக்கு எதிரானது என்று விமர்சித்தார். கடவுளின் சேவகர்கள் என்று பொருள்படும் ஹுதாய் கித்மத்கார்கள் என்கிற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூகச் சேவைகள் செய்வதில் பழங்குடியின மக்களை ஈடுபடவைத்தார். அவர்களின் உறுதிமொழி இப்படி அமைந்திருந்தது,
" நான் வன்முறையையில் ஈடுபடுவதையும், பழி வாங்குவதையும் எப்பொழுதும் செய்ய மாட்டேன் என வாக்களிக்கிறேன். என் செல்வம், வாழ்க்கை, சுகங்கள் ஆகியவற்றை இந்தத் தேசம், மக்களுக்காகத் தியாகம் செய்வேன்."
காந்தி உப்புச் சத்தியாகிரகத்தை முன்னெடுத்த பொழுது போராட்டங்களை அமைதி வழியில் NWFP பகுதிகளில் கபார்கான் நடத்தினார். முந்நூறு பக்தூன்கள் ஆங்கிலேயரின் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியானார்கள். அப்பொழுதும் வன்முறையின் சுவடே அங்கே இல்லை. பல்லாயிரக்கணக்கான பக்தூன்கள் சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். எந்தளவுக்கு அவர்கள் தீர்க்கமாக இருந்தார்கள் என்பதைப் பேகன் என்கிற அப்பகுதியில் நீதிபதியாக இருந்தவருக்கும், கபார்கான் அமைப்பின் உறுப்பினருக்குமான உரையாடல் விளக்கும் :
"நீ ஹூதாய் கித்மகத்கர் அமைப்பைச் சேர்ந்தவரா?"
"ஆம்!"
"நீ போராட்டத்தில் ஈடுபட்டாயா? உனக்கு விடுதலையின் மீது தாகமா?"
"ஆமாம்."
"மீண்டும் போராட்டத்தில் ஈடுபடமாட்டாய் என்றால் விடுதலை தருகிறேன்"
"முடியாது. அமைதி வழியில் போராடுவோம்."
"உன்னை எழுந்து வந்து கட்டித்தழுவிக்கொள்ள நான் ஆசைப்படுகிறேன். ஆனால், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கிறேன்."
1934 ஆகஸ்டில் காந்தி உண்ணாவிரதம் இருந்த பொழுது கபார்கானும் சிறையில் இருந்தே உண்ணாவிரதம் இருந்தார். தன் அமைப்பை காங்கிரசோடு அவர் இணைத்திருந்தார். அடுத்தக் காங்கிரஸ் கூட்டத்தில் அவருக்குத் தலைவர் பதவியைத் தர மூத்த தலைவர்கள் முன்வந்த பொழுது, "நான் எப்பொழுதும் மக்களின் சேவகன். எனக்குத் தலைவர் பதவி வேண்டாம்!" என்று மறுத்தார். வறுமையில் வாடிக்கொண்டிருந்த அவருக்கு ஆயிரம் ரூபாய் நிதி திரட்ட உதவ ஜவகர்லால் நேரு முன்வந்த பொழுது, "என்னை இப்படிக் காயப்படுத்தாதீர்கள் நேருஜி. அந்தப் பணத்தில் எங்கள் பகுதியில் பெண்கள் பள்ளி ஒன்றோ அல்லது பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றையோ கட்டித்தாருங்கள்."
காங்கிரஸ் அமைப்பை விட்டு வெளியேறினால் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்குத் தரப்பட்டிருக்கும் உரிமைகளைத் தங்களுக்கும் தருகிறோம் என்று ஆங்கிலேய அரசு ஆசைகாட்டிய பொழுது அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டார்.முப்பத்தி ஆறில் ஆங்கிலேய அரசு நடத்திய தேர்தல் சமயத்தில் அப்பகுதிக்குள் நுழையவே கபார்கானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஜின்னா சுழன்று பிரச்சாரம் செய்தார். அப்படியும் மக்கள் காங்கிரசுக்கே ஓட்டளித்து இருந்தார்கள். உபயம் எல்லை காந்தி கபார்கான்! கபார்கானின் அண்ணன் கான் சாகிப் மாகாண முதல்வர் ஆனார். பதவிகளுக்கு நேர்மையான தேர்வுமுறை, கடுமையான சட்டங்கள் நீக்கம், பள்ளிகள் திறப்பு என்று அரசு செயல்பட்டது.
உலகப்போரால் ஆட்சியை விட்டுக் காங்கிரஸ் விலகிய பொழுது NWFP-ல் கான் சாகிபும் விலகினார். தனி நபர் சத்தியாகிரகத்தில் தன்னைக் கபார்கான் இணைத்துக்கொண்டார். உலகப்போரில் ஈடுபட்ட ஆங்கிலேயருக்கு ஆதரவு தருவதை நோக்கி காங்கிரஸ் போன சமயத்தில் அதனோடு பிணக்குக் கொண்டார். பின்னர் அதைத் திரும்பப் பெற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்த பொழுது கட்டுகோப்பாகத் தன் மாகாணத்தில் நடத்தினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகள் வன்முறைக்கோலம் பூண்ட பொழுதும் கபார்கானின் பக்தூன்கள் வன்முறையை அறவே ஒழித்து ஆச்சரியம் காட்டினார்கள்.
1946-ம் வருடத்தேர்தலை பாகிஸ்தானுக்கான அறைகூவலாக ஜின்னா மாற்றியிருந்தார். கான்அப்துல் கபார்கானை இந்து காங்கிரசோடு இணைந்த துரோகி என்று முத்திரை குத்தினார்கள். அத்தனையும் மீறி NWFP-ல் ஆட்சியைப் பிடித்தது கபார்கானின் காங்கிரஸ். ஐம்பது தொகுதிகளில் முப்பதை அள்ளியிருந்தார்கள். தேசப்பிரிவினை என்று முடிவானதும் ஆங்கிலேய அரசு அசாமின் சில்ஹவுட், NWFP மக்கள் எந்தப்பக்கம் சேருவது என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என்றது. நேருவும் இதர காங்கிரஸ் தலைவர்களும் வேறு மாதிரி பார்த்தார்கள். NWFP-க்கு நேரு கபார்கானோடு பயணம் போன பொழுது பல்வேறு இடங்களில் அவர் மீது கற்கள் வீசப்பட்டன. மக்கள் தங்களை ஏற்பார்களா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. NWFP-ஐ கிளறி விட்டால் பஞ்சாப், வங்கம் என்று ஜின்னா கிளம்புவார் என்று அஞ்சினார்கள். காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இந்தியாவோடு NWFP இணையச் சாத்தியமில்லை என்று கபார்கானை வைத்துக்கொண்டு சொன்னார்கள். படிக்கட்டுக்கு ஓடிப்போன அவர் தலையைச் சாய்த்துக்கொண்டு, "இறைவனே! இறைவனே! அவமானம். அவமானம்." என்று அரற்றினார்.
"உங்களோடு எல்லாக் காலத்திலும் நின்ற எங்களை ஓநாய்களுக்குத் தின்னக்கொடுத்து விட்டீர்களே." என்று வருந்தினார். என்றாலும் ஓட்டெடுப்பு உண்டு என்று சொல்லப்பட்ட பொழுது காங்கிரசுக்குத் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பமில்லை என்று புரிந்ததும் ,"நாங்கள் ஓட்டெடுப்பில் பங்கு பெற மாட்டோம். எங்கள் மண்ணில் ரத்தம் சிந்துவதைத் தவிர்க்க இதையாவது செய்கிறோம்." என்று அறிவித்தார். பெரும்பான்மை மக்கள் புறக்கணிப்பில் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தானில் NWFP இணைந்தது.
ஜின்னாவுடன் கபார்கான் பேசினார். "உங்களோடு தான் வாழ்க்கை. உங்களை எதிர்க்க மாட்டோம். பக்தூனிஸ்தான் என்கிற பகுதியை உருவாக்குங்கள். எங்களுக்குச் சுயாட்சி தாருங்கள். எங்கள் விஷயங்களில் தலையிடாதீர்கள்." என்று கேட்டார். ஜின்னா சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் ,"முஸ்லீம் லீக் கலைக்கப்பட்டு அவரவர் விரும்பும் கட்சிகள் வரட்டும்." என்று பேசினார். முஸ்லீம் லீகோடு இணையுங்கள் என்று ஜின்னா அழைத்த பொழுது, "இந்துக்கள், சீக்கியர்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்த இவர்களோடா இணைவது?" என்று நகைத்தார். பக்தூனிஸ்தான் எனும் மாநிலம் சுயாட்சியோடு தேவை எனப் பேசியதற்காகவும், ஜின்னாவுக்கு எதிராகச் சதி செய்ததாகவும் சொல்லப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அவரைச் சிறையில் அடைத்ததும் பல்வேறு பக்தூன்கள் சிறை புகுந்தார்கள். சிறை புகுந்தவர்களுக்குப்பிரார்த்தனை கூட்டத்தைக் கூட்டிய பாப்ரா பகுதி பக்தூன்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 150 நபர்கள் மண்ணில் விழுந்தார்கள். "அமைதி காத்திடுங்கள்" என்றார் கபார்கான். அவர்கள் கட்டுப்பட்டார்கள். பல வருடங்கள் கழித்து விடுவிக்கப்பட்டார். சொந்த அண்ணன் கான் சாகிபை மேற்கு பாகிஸ்தானின் முதல்வர் ஆக்கினார்கள். வீட்டுக்குள் நுழையாமல், கட்டி அணைக்காமல் "வாழ்த்துகள்" என்று வருத்தம் பொங்க வாழ்த்திவிட்டு விடை பெற்றார் கபார்கான்.
அண்ணனை ஒரு பஞ்சாபி குத்திக் கொன்ற பொழுது ,"பதான்கள், பஞ்சாபிகள் சகோதரர்கள். வீணாகச் சண்டையிட வேண்டாம். அன்போடு இருப்போம்." என்று பேசினார். வெளிநாட்டுக்கு மருத்துவச் சிகிச்சைக்குப் போன கபார்கான் ஆப்கானில் தஞ்சம் புகுந்தார். இந்தியாவிற்குப் பயணம் வந்த அவர், இந்து முஸ்லீம் கலவரங்கள் பெருகியிருப்பதைப் பார்த்து,"இஸ்லாமியர்களைத் தீண்டத்தகாதவர்கள் போல நடத்துகிறீர்கள். இது தவறு. வெறுப்பை விதைத்து அறுவடை செய்ய எண்ணாதீர்கள்." என்று அறிவுறுத்தினார். அதே சமயம் இந்திய இஸ்லாமியர்களை நோக்கி, "நீங்கள் வன்முறையில் ஈடுபடாதீர்கள். நீங்கள் குரானின் அன்பு வழியில் இயங்குங்கள். அப்படிச் செயல்படாவிட்டால் நீங்கள் தீயவர்கள் ஆகிறீர்கள்." அவருக்குப் பாரத ரத்னா விருதை இந்திய அரசு வழங்கி சிறப்பித்தது. இருபத்தி ஏழு வருடங்கள் சிறையிலேயே கழித்த அவரின் கனவான சுயாட்சி கொண்ட பக்தூனிஸ்தான் என்பதைக் காணாமலே அமைதியின், அன்பின் தூதுவர் மரணமடைந்தார்.
இந்துக்கள், சீக்கியர்கள் என்று அனைவரும் அவர் பகுதியில் இணைத்துக்கொள்ளப்பட்டே இருந்தார்கள். காட்டுமிராண்டிகள் என்று கருதப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் கருணை மிகுந்த பக்கம் இருக்க முடியும் என்பதை நிருபித்த 'எல்லை காந்தி'யின் நினைவுதினம் ஜனவரி 20.
நன்றி:விகடன்
- பூ.கொ.சரவணன்
- பூ.கொ.சரவணன்
No comments:
Post a Comment