தமிழக முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னையில் ஒரு வழிப்பாதை ஒன்றில் அவர் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. அதைப் பார்த்த காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார். “ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறாய்? காரைத் திருப்பு” எனச் சாரதியிடம் அன்புடன் சொன்னார்.
“அய்யா, இந்த இரவு நேரத்தில் போக்குவரத்து மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இந்தப் பாதை வழியே போனால் நாம் சீக்கிரம் வீட்டுக்குப் போய் விடலாம்” என்றான் சாரதி. “இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்பதற்காக நாம் இப்படிப் போவது தவறு.
இது உனக்கு எப்போதும் பழக்கமாகி விடும். சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என சாரதியிடம் கூறி ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.
சாரதி வேறு வழியில்லாமல் திரும்பி வந்து சரியான பாதையில் சென்றார். சட்டம் என்று இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும் என்பது காமராஜரின் எண்ணமாகும்
No comments:
Post a Comment