Tuesday, February 10, 2015

உதவித்தொகையுடனான படிப்பு

இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் (Indian Statistical Institute) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு மத்திய அரசுக் கல்வி நிறுவனம் ஆகும். புள்ளியியல் பயன்பாடு தொடர்பான ஆராய்ச்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு, டெல்லி உள்பட நான்கு இடங்களில் இதன் வளாகங்கள் (Campus) செயல்படுகின்றன. சென்னை வளாகம் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ளது.
படிப்புகள்
இந்தியப் புள்ளியியல் நிறுவனம் கணிதம், புள்ளியியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் உள்படப் பல்வேறு விதமான படிப்புகளை வழங்குகிறது. இங்கு படிக்கும் இளங்கலை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர புத்தகம் மற்றும் எதிர்பாராத செலவினங்களுக்காக இதே அளவு தொகையை ஆண்டுக்கு ஒருமுறை பெறலாம்.
தேர்வு முறை
அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வுசெய்கிறார்கள். இந்திய தேசிய கணித ஒலிம்பியாட் (Indian National Mathematical Olympiad-INMO) விருது மாணவர்களுக்கு மட்டும் எழுத்துத்தேர்வு கிடையாது.
அவர்கள் நேரடியாக நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசு கல்வி நிறுவனம் என்பதால், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், ஓபிசி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு உண்டு. இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு 100 சதவீதம் உறுதி.
மாணவர் சேர்க்கை
மூன்று ஆண்டுகள் கொண்ட இளங்கலைப் புள்ளியியல் படிப்பு (B.Stat Hons) கொல்கத்தாவிலும், இளங்கலைக் கணிதப் படிப்பு (B.Math Hons) பெங்களூரு வளாகத்திலும் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 கணிதப் பிரிவு மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேரலாம்.
இரண்டு ஆண்டுகள் காலம் கொண்ட முதுகலைப் புள்ளியியல் படிப்பானது (M.Stat) சென்னை, டெல்லி வளாகங்களில் உள்ளது. இதில், B.Stat., B.Math. பட்டதாரிகள் சேரத் தகுதியுடையவர் ஆவர். அதேபோல், முதுகலைக் கணிதப் படிப்பை (M.Math) பெங்களூரு வளாகத்தில் படிக்கலாம். இதில், பிஇ, பிடெக் பட்டதாரிகள், பி.ஸ்டாட், பி.மேத் பட்டதாரிகள் சேரலாம்.
புள்ளியியல் நிறுவனம் வழங்கும் முதுகலைப் பொருளாதாரப் படிப்பு (M.S. Quantitative Economics) புகழ்பெற்றது. இதில், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், இயற்பியல் பட்டதாரிகளும், பிஇ, பி.டெக் பட்டதாரிகளும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது, இந்தியப் புள்ளியியல் நிறுவனம் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு ஆன்லைனில் (www.isical.ac.in) மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மே மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்கள் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment