Sunday, July 12, 2015

ரமழானில் செய்ய வேண்டிய நல்ல அமல்கள் (ஒரு தொகுப்பு)

ரமழான் மாதம் அல்லாஹ்வினால் அவனின் அடியார்களுக்கு வழங்கப்பட்ட மிக சிறந்த ஒரு அருட்கொடையாகும். அல்லாஹ் தன் அடியார்கள் மீது கொண்ட அளவில்லா அன்பின் காரணமாக இந்த மாதத்தில் பல சிறப்புகளை வைத்து அவைகளை தன் அடியான் பெற்று கொள்ள வேண்டும் என நாடுகிறான். 
இறைவன் வழங்கியுள்ள இந்த அருட்கொடைகளை பெற்று கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த மாதத்தை கொண்டு முழுமையாக பிரயோசனம் பெற்று அல்லாஹ்வினதும் கண்மணி நாயகம் ﷺ அவர்களினதும் அன்பையும் திருப்தியையும் பெற்றவர்கள் கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்து வைப்பானாக.

ரமழானில் என்ன என்ன நல்ல வணக்கங்கள், செயல்கள் புரியலாம் என இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை கொண்டு அனைவரும் பிரயோசனம் பெற அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம். நீங்களும் நடைமுறைப்படுத்தி உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை பகிர்ந்து அவர்கள் செய்யும் நன்மையை கொண்டு நீங்களும் நன்மை எய்துங்கள். 

♣ நோன்பு நோற்றல்
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
சுவர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. 
அறிவிப்பாளர் : ஹழ்ரத் ஸஹ்ல் பின் ஸஃது (ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள் : ஸஹிஹுல் புஹாரி, ஸஹிஹ் முஸ்லிம், திர்மிதீ

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு
நூல்: திர்மிதி

எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே செய்யப்படுகிறது. ஆனால், இந்த வணக்கம் முற்றிலும் இறையச்சத்தை (தக்வாவை) அடிப்படையாக கொண்டது. எனவே, இந்த வணக்கத்திற்கு அல்லாஹ் ஒவ்வொருவரினதும் நோன்பின் அடிப்படையை கொண்டு தான் நாடியவாறு எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்குகிறான். எனவே, எந்த பாவமும் கலக்காத பரிசுத்த நோன்பு நோற்றால், இன்ஷா அல்லாஹ் அதனால் எமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நிறைய நன்மைகள் எழுதப்படும். இன்னும் ரய்யான் வாசலினூடாக சுவர்க்கம் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

♣ பர்ளான தொழுகைகளை ஒழுங்காக தொழுதல்
ரமழான் மாதத்தில் செய்யப்படும் ஒரு பர்ளுக்கு ஏனைய மாதங்களில் செய்யப்படும் எழுபது பர்ளுவின் நன்மை கிடைப்பதாக ஹதீஸுகளில் வந்துள்ளது. 
நூல் : ஸஹிஹ் இப்ன் குஸைமா 1887

எனவே முடிந்த வரை பர்ளான தொழுகைகளை ஒழுங்காக இமாம் ஜமாஅத்துடன் தொழ முயற்சிக்க வேண்டும். இதனால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்.

♣ சுன்னத்தான நபிலான தொழுகைகளை நிறைய தொழுதல்

ரமழான் மாதத்தில் செய்யப்படும் ஒரு நபிலான வணக்கத்துக்கு ஏனைய மாதங்களில் செய்யப்படும் ஒரு பர்ளுவின் நன்மை கிடைப்பதாக ஹதீஸுகளில் வந்துள்ளது.
நூல் : ஸஹிஹ் இப்ன் குஸைமா 1887

எனவே இந்த மாதத்தில் நிறைய நபிலான சுன்னத்தான தொழுகைகளை தொழுது கொள்ள வேண்டும். பின்வரும் தொழுகைகளை அதிகம் தொழலாம்.

♦ ஐந்து நேர பர்ளு தொழுகைக்கு முன், பின் தொழப்படும் சுன்னத்து தொழுகைகள்
♦ தராவீஹ் தொழுகை
♦ வித்ர் தொழுகை
♦ தஹஜ்ஜுத் தொழுகை
♦ தஸ்பீஹ் தொழுகை
♦ அவ்வாபீன் தொழுகை
♦ ழுஹா தொழுகை
♦ இஷ்ராக் தொழுகை

♣ அதிகமாக அல் குர்ஆன் ஓதுதல்

அல்லாஹ் அல் குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:
"ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது"
அல் குர்ஆன் 2:185

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 
"நாளை மறுமையில் நோன்பும் அல்குர்ஆனும் அடியார்களுக்காக மன்றாடும். நோன்பு கூறும் : இறைவனே! நான் இந்த மனிதனை உண்ணுவதில் இருந்தும் குடிப்பதில் இருந்தும் ஏனைய இச்சைகளிலிருந்தும் தடுத்து வைத்திருந்தேன். எனவே இந்த மனிதனுக்காக எனது சிபாரிஷை ஏற்றுக்கொள்வாயாக என்று. அல் குர்ஆன் கூறும் : இறைவனே! நான் இந்த மனிதனை இரவில் உறங்குவதை விட்டும் தடுத்து வைத்திருந்தேன் (இபாததிற்காக). எனவே இந்த மனிதனுக்காக எனது சிபாரிஷை ஏற்றுக்கொள்வாயாக என்று. இரண்டு மன்றாட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்"
நூற்கள் : முஸ்னத் அஹ்மத், தபரானி

ரமழான் மாதம் அல் குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். எனவே இந்த மாதத்தில் முடிந்த வரை அதிகம் குர்ஆன் ஓத வேண்டும். பலர் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு ஜூஸ்வு வீதம் முப்பது நாட்களில் முப்பது ஜூஸ்வுவை தமாம் செய்வதுண்டு. இது மிக சிறந்த நடைமுறையாகும். இது செய்ய முடியாதவர்கள் முடிந்த அளவு ஓதலாம். ஓத தெரியாதவர்கள், தெரிந்த வரை திக்கி திக்கியாவது ஓத முயலுங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு திக்கி திக்கி ஒதுபவருக்கு இரட்டை கூலி வழங்கப்படும் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளனர். அதுவும் முடியாதவர்கள் பிறர் ஓதுவதையாவது கேட்கவேண்டும். ஏனெனில் குர்ஆனை கேட்பதற்கும் நன்மை உண்டு.

♣ அதிகமாக ஸதகா (தானதர்மம்) செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 
"ஸதகாவில் சிறந்தது ரமழானில் செய்யும் ஸதகாவே"
நூல் - திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மக்களுக்கு வாரி வழங்குவார்கள். ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் ரமழான் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை சந்திக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அதிகமதிகம் வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ரமழானின் ஒவ்வொரு இரவும் - ரமழான் முடியும்வரை - நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை சந்திப்பார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தம்மை சந்திக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மழைக்காற்றை விடவும் வாரி வழங்குவார்கள். 
நூல் : ஸஹிஹுல் புஹாரி

ரமழான் மாதம் ஏழைகளின் பசியை உணரும் மாதமாகும். எனவே, இந்த மாதத்தில் நிறைய தானதர்மங்கள் செய்து ஏழைகளை மகிழ்விக்க வேண்டும். அதேபோல் அனாதைகள், விதவைகளை நன்று கவனித்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இந்த நற்கருமங்கள் அல்லாஹ்வின் அன்பை பெற்று தரும்.

♣ ஸகாத் கடைமையானவர்கள் ரமழானில் ஸகாத் கொடுத்தல்

ஸகாத் கடைமையானவர்கள் இந்த ரமழான் மாதத்தில் அவற்றை ஒழுங்காக கணக்கிட்டு கொடுக்க முயற்சிக்க வேண்டும். ரமழானில் எல்லா அமல்களுக்கும் பல மடங்கு அதிகம் நன்மை கிடைப்பதால் ஸகாத்தையும் இம்மாதம் கொடுப்பதை பலர் விரும்புகின்றனர். உண்மையில் அது நல்ல விடயமாகும்.

♣ வசதி உள்ளவர்கள் உம்ரா செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"ரமழான் மாதம் வந்துவிட்டால் உம்ராவுக்கு செல்லுங்கள். ஏனெனில், ரமழானில் செய்யப்படும் உம்ரா என்னோடு சேர்ந்து செய்யப்படும் ஹஜ்ஜுக்கு சமமானதாகும்"
நூல் : ஸஹிஹுல் புஹாரி 

♣ நோன்பாளிகளை  நோன்பு திறக்கச் செய்தல்
“யாராவது நோன்பாளியை நோன்பு திறக்க வைப்பாராயின் அந்த நோன்பாளிக்கு கிடைத்த கூலியை போன்றே கிடைக்கும். இதனால் அந்நோன்பாளியின் கூலியில் எதுவும் குறைந்து விடாது என கண்மணி நாயகம் ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். 
நூல் : திர்மதி, அஹ்மத்

இது நிறைய நன்மைகளை சம்பாதிக்க மிக சிறந்த ஒரு நடைமுறையாகும். நோன்பாளிகளை - உங்கள் குடும்ப உறவினர்களையோ, நண்பர்களையோ, அயல் வீட்டார்களையோ, நோன்பு திறக்க வசதி இல்லாத ஏழைகளையோ அழைத்து உங்களால் முடிந்த உணவை அவர்களுக்கு வைத்து அவர்களை நோன்பு திறக்க செய்யுங்கள். இதனால் அந்த நோன்பாளி தன் நோன்பைக்கொண்டு  எவ்வளவு நன்மை சம்பாதிக்கிறாரோ,  அதே அளவு நன்மை நோன்பு திறக்க உதவி செய்தவருக்கும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, நீங்கள் இப்தாருக்கு உணவு சமைக்கும் போது கொஞ்சம் கூடுதலாக செய்து உங்கள் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பி வையுங்கள். இதுவும் மேலே சொன்ன நன்மையை பெற்றுக்கொள்ளும் முறையாகும்.   

♣ அதிகமாக பாவமன்னிப்பு தேடுதல், துஆ பிரார்த்தனைகள் செய்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
"ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து யார் புனித ரமழான் மாதத்தை அடைந்தும் அதில் பாவ மன்னிப்பு பெறவில்லையோ, அவர் நாசமடையட்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் கூறினேன்"
நூற்கள் : ஸஹிஹுல் புஹாரி, தபரானி 

ரமழான் மாதம் பாவ மன்னிப்புக்குரிய மாதமாகும். இதில் பல சந்தர்ப்பங்களிலும் பல நேரங்களிலும் அல்லாஹ் லட்சக்கணக்கான மக்களை மன்னிக்கிறான். உதாரணமாக - ஒவ்வொரு நாளும் இப்தாரின்போது, லைலதுல் கத்ர் இரவில்.  எனவே மாதம் முழுவதும் எல்லா நேரங்களிலும் நிறைய பாவ மன்னிப்பு தேட வேண்டும். 

அதேப்போல், ரமழானில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஓத வேண்டிய துஆக்களை கண்மணி நாயகம் ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கற்று தந்துள்ளார்கள். 

ரமழான் மாத இறுதி பத்தில் நிறைய வணக்கம் செய்தலும் பள்ளிவாசலில் இஃதிகாப் இருத்தலும்
“ரமழானில் கடைசி பத்து வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கச்சை கட்டிக்கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள்"
நூல் : ஸஹிஹுல் புஹாரி

"நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ரமலானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள்"
நூல் : ஸஹிஹுல் புஹாரி

ரமழானின் இறுதி பத்து நாட்கள் மிக முக்கியமானவை. கடைசி பத்தின் ஒற்றை படை நாட்களில் தான் அதாவது 21, 23, 25, 27, 29 ஆகிய நாட்களின் ஒரு இரவில்தான் புனித லைலதுல் கத்ர் இரவு அமைந்துள்ளது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலான ஒரு இரவாகும். எனவே, இந்த இரவை தேடும்படியும் இதில் நின்று வணங்கி பாவமன்னிப்பு பெறும்படியும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.

வசதி வாய்ப்புள்ளவர்கள் ரமலானின் கடைசி பத்தில் பள்ளிவாசலில் தங்கி இஃதிகாப் இருக்க முயலுங்கள். இஃதிகாப் என்பது பள்ளிவாசலில் தங்கி இருத்தலாகும். பள்ளிவாசலில் தங்கி இருக்கும் காலமெல்லாம் நன்மைகள் கிடைத்த வண்ணமே இருக்கும். ஏதேனும் வணக்கம் செய்தால் இரட்டை நன்மை கிடைக்கும். இஃதிகாபிற்கு ஒரு வகை நன்மை, வணக்கத்திற்கு ஒரு வகை நன்மை.

♣ ஸதகத்துல் பித்ரா (ஸகாதுல் பித்ரா) கொடுத்தல்
நோன்பாளி தன் நோன்பின்போது அர்த்தமற்ற மோசமான வார்த்தைகளைப் பேசி தன் நோன்பை அழுக்குப்படுதி இருந்தால் அதிலிருந்து தூய்மை பெறவும், ஏழை எளியவர்கள் (மிஸ்கீன்கள்) பெருநாள் தினமன்று உணவு உண்டு சந்தோசமாக வாழவும் உதவும் வகையில் ஸகாதுல் பித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடைமையாக்கப்பட்டுள்ளது. இதனை ஏழை பணக்காரன் என்று பாகுப்பாடு இன்றி அனைவரும் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் தனக்கும் குடும்பத்துக்கும் உணவுண்ண தேவையான அளவு உணவு போக அதிகம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் இதனை கொடுத்தே ஆகவேண்டும்.

பொதுவாக அந்தந்த ஊரில் எந்த உணவு தானியம் பிரதானமாக உள்ளதோ அதனை கொடுக்கலாம். நமது ஊர்களில் அரிசி சோறு எமது பிரதான உணவு என்பதால் அரிசி தானியம் பித்ராவாக வழங்கப்படுகின்றது. இதனை ரமலானின் கடைசி பகுதியில் கொடுக்கலாம். அதிலும் பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் கொடுப்பது மிக உசிதமானது. 


மூலம் :http://www.mailofislam.com/tam-ramadanil_seyya_wendiya_amalgal.html

No comments:

Post a Comment