ஒரு வருடத்தின் ரமளான் மாதத்தை அடைந்து, அதன் நோன்புகள் அனைத்தையும் நிறைவேற்றி, குர்ஆன் ஓதி, தொழுது இன்னும் பிற உபரியான வணக்கங்களையும் நிறைவேற்றி, அம்மாதத்தைச் சிறப்பிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கினால் அதுவே நாம் பெறற்கரிய பேராகும்.
இத்தகு பெரும் பேற்றினை அல்லாஹ் நமக்கு வழங்கியதற்கு நன்றி செலுத்தும் முகமாகவும், நம் வணக்கங்களில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பின் அவற்றை நிறைவு செய்யும் முகமாகவும் நாம் நோற்ற நோன்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவும் ஸதகத்துல் ஃபித்ரு கொடுப்பதை நம்மீது அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான்.
மேலும் முஸ்லிம்களெல்லாம் ஒன்று கூடிப் பெருநாளை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவ்வேளையில் வசதியற்ற, வரிய நிலையில் இருக்கின்ற ஏழை எளிய மக்களும் இந்நாளிலாவது அவர்கள் பட்டினி கிடக்காமல் வயிறார உண்ண வேண்டுமென்பற்காகவும் இந்த தருமம் கடமையாக்கப் பட்டிருக்கிறது. ஆக, கொடுப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் மன நிறைவை அளிக்கும் இந்த தருமத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும்?
காலம் : நோன்புப் பெருநாள் அன்று ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றிய பிறகு பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன்பாக இதனைக் கொடுப்பது கட்டாயமாகும். இதுதான் அதற்குரிய மிகச் சிறந்த நேரமாகும். எனவே, ஒருவர் அன்றைய ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு இறந்துவிட்டாலோ அல்லது ஃபஜ்ருக்கு முன்பாக ஒரு குழந்தை பிறந்தாலோ அவர்களுக்கும் சேர்த்துக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். இந்நேரத்தில் கொடுப்பதற்குரிய வாய்ப்பு இல்லாவிடின் இரண்டு நாளைக்கு முன்பிருந்தே கொடுக்கத் துவங்கிவிடலாம். இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி ரமளான் துவக்கத்திலிருந்தே இதனை நிறைவேற்றுவது கூடும்.
எவர் நிறைவேற்ற வேண்டும்? பெருநாள் செலவுகளுக்குத் தேவையான அளவு போக அதிகபட்சமாக எவரிடம் பொருளாதாரம் உள்ளதோ அவர்கள் அனைவரும் ஸதகத்துல் ஃபித்ரு கொடுப்பது கட்டாயமாகும். தனக்காகவும் தன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற தன் குழந்தைகள், பெற்றோர், மனைவி, தன்னிடம் பணிபுரிகின்ற பணியாளர்கள் ஆகியோருக்காகவும் கொடுக்க வேண்டும். எனினும் இவர்களில் எவரேனும் வசதி படைத்தவர்களாய் இருந்தால் அவர்களுக்காகக் கொடுப்பது இவர் மீது கடமையல்ல. அவர்கள் தாமாகவே தங்களின் பொருள்களிலிருந்து ஸதகத்துல் ஃபித்ரை நிறைவேற்ற வேண்டும்.
யாருக்குக் கொடுக்க வேண்டும்? குர்ஆனில் சொல்லப்பட்ட ஜகாத் பெறத் தகுதியானவர்களான ஏழைகள், மிஸ்கீன்கள், புதிததாக இஸ்லாத்தைத் தழுவியோர், அடிமைகளை உரிமைவிடுவதற்காக, அல்லாஹ்வின் பாதையில், கடனில் மூழ்கியவர்கள், வழிப்போக்கர்கள், ஜகாத் பணத்தை வசூலித்து சேகரித்து பாதுகாத் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகிய எட்டு வகையினரே ஸதகத்துல் ஃபித்ரை பெறத் தகுதியானவர்கள். எனவே, இவர்களைத் தவிர மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அது நிறைவேறாது. சாதாரணமாக தருமம் செய்த நன்மையையே அது பெற்றுத் தரும். இந்த எட்டு வகையினரில் நெருங்கிய உறவினர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். முக்கியமாக அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். காஃபிர்களுக்குக் கொடுக்கக் கூடாது. இறுதி நோன்பின் இஃப்தார் எங்கு நிறைவேற்றப்படுகிறதோ அங்குதான் இந்த ஸதகத்துல் ஃபித்ரு கொடுக்கப்பட வேண்டும் என்று இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே தங்களின் குடும்பங்களைப் பிரிந்து வெளி ஊர்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ வசிப்பவர்கள் தங்களுக்குரிய ஸதக்கத்துல் ஃபித்ரை தாங்கள் வசிக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கும், தங்களின் குடும்பத்தார்களுக்குரியதை அவர்கள் வசிக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும். தாங்கள் வசிக்கும் பகுதியில் ஸதகத்துல் ஃபித்ரு பெறத் தகுதியானவர்கள் இல்லை என்ற நிலை இருக்குமானால் தங்கள் சொந்த ஊரில் உள்ள ஏழைகளுக்குக் கொடுப்பதே சிறந்தது.
என்ன பொருள், எவ்வளவு கொடுக்க வேண்டும்? அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களிலிருந்து மூன்று கிலோ என்ற அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும். ஒரு ஊரில் உணவுக்காகப் பயன்படுத்தக் கூடிய பொருள்களையும் வழங்கலாம். எனினும் “பொருளாகத்தான் வழங்கப்பட வேண்டும் கிரயமாக அல்ல”என்பது இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள், “பொருள்களின் விலையைக் கணக்கிட்டு வழங்கலாம் என்பதோடு மட்டுமின்றி அதுவே சிறப்பானது. ஏனெனில் அதைக் கொண்டு அவர்களுக்குத் தேவையான பொருள்களை அவர்களே வாங்கிக் கொள்ளலாம்” என்பதாகக் குறிப்பிடுகின்றார்கள். சத்தியத்தை விளங்கி அதன்படி செயல்பட வல்ல இறைவன் அருள்புரிவானாக. ஆமீன்.
ஆக்கம் : மவ்லவி, ஹாபிள் நிஜாமுத்தீன் பாக்கவிய்.
No comments:
Post a Comment