Saturday, July 4, 2015

அதிசய_வழக்கு‬

ஒருநாள் இரு சகோதரர்கள், செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் முன் வந்து "நபி அவர்களே, எங்களின் தந்தையார் எங்கள் இருவர் மீதும் ஒத்த அன்புடையவராக இருந்தார். ஆனால் அவர் இறப்பு படுக்கையில் கிடக்கும்போது எங்களை அருகில் அழைத்து எங்களுக்கு அறிவுரை பல வழங்கினார். இறுதியாக இறக்கும் முன் எங்களை பார்த்து "என் சொத்து அனைத்தும் உங்களில் ஒருவனுக்கே உரியதாகும்." என்று கூறினார்.
அது யார் என்று கூறவில்லை. எனவே அவரது சொத்து அனைத்தும் யாருக்கு உரியது என்று அறியாது விழிக்கிறோம்" என்று கூறினார்கள். எவ்வாறு இவ்வழக்கில் நீதி பகர்வது என்று செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள் யோசித்தார்கள். அப்போது அங்கிருந்த செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள், "தந்தையே! நீங்கள் ஆணை இடின் இதற்கான தீர்ப்பை நான் வழங்குகிறேன்" என்று கூறினர். "நல்லது செய்யும்" என்றனர் செய்யதுனா தாவூத் (அலைஹிஸலாம்) அவர்கள்.

உடனே செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, "நீங்கள் இருவரும் சென்று உங்களின் தந்தையின் அடக்கவிடத்தை தோண்டி அவருடைய உடலிலிருந்து ஓர் எலும்பை எடுத்து வந்தால் இதற்கான தீர்ப்பை நான் வழங்குகிறேன்" என்றனர்.
அதற்கு மூத்தவன் "என் உயிர் போகினும் நான் அச்செயலை செய்ய மாட்டேன். நான் அச்செயலை செய்து சொத்துரிமை பெற விரும்பவும் இல்லை" என்றான். ஆனால் இளையவனோ ஓடோடி சென்று அதை எடுத்து வந்தான்.
அப்போது செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி "நீங்கள் இருவரும் ஊசியால் உங்களின் விரலில் குத்தி இரத்தம் எடுத்து அந்த எலும்பின் மீது விடுங்கள்" என்றனர்.
அப்போது மூத்தவன் மிக்க கவலையோடு கண்ணீர் விட்டவனாக இரத்தம் எடுத்து விட்டான். அத்துடன் சேர்ந்து கண்ணீரும் அதன் மீது விழுந்தது. அடுத்த கணம், கண்ணீருடன் சேர்ந்த செந்நீரை, தணலிடை பதிக்கப்பட்ட இரும்பின் மீது கொட்டிய தண்ணீரை இரும்பு உண்பது போல் அவ்வெலும்பு உண்டது.
பின்னர் இளையவனும் அவ்வாறு செய்தான். அவனது இரத்தமோ அவ்வெலும்பின் மீது வழிந்தோடியது.
அப்போது செய்யதுனா சுலைமான் (அலைஹிஸலாம்) தீர்ப்பு வழங்கினார்கள். "இறந்த தந்தையின் உடலில் இருந்து எலும்பு ஒடித்து வர விரும்பாத மூத்தவனே அவருக்கு முறைப்படி பிறந்தவன். பின்னவன் அவர் மகன் அல்ல. எனவே மூத்தவனுக்கே சொத்து அனைத்தும் உரித்து"
தீர்ப்பை கேட்டு தன் தாயிடம் ஓடோடி சென்று நடந்ததை கூறினான் இளையவன். அப்போது தாய் தன் மகனை நோக்கி "உண்மை! ஓர் இரவு தீயோன் ஒருவன் நம் இல்லம் புகுந்து தகா முறையில் வன்முறையில் என்னை புணர்ந்தான். நீ பிறந்தாய்" என்று கண்ணீர் மல்க கூறினாள். "தந்தைக்கு தெரியுமா?" என்றான் இளையவன். "குறிப்பால் இதனை அறிந்துக்கொண்டார். எனினும் இதை பற்றி அவர் என்னிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை" என்று கூறி தேம்பி தேம்பி அழுதாள் அவள்

No comments:

Post a Comment