17ம் நூற்றாண்டின் முஜத்தித் - செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா)
பாடசாலையில் படிக்கும் நாட்களில் எம்மை குர்ஆன் மத்ரஸாவுக்கு அனுப்புவார்கள். வெள்ளிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் பின்னேரம் 2.30 முதல் மாலை வரை குர்ஆன் மத்ரஸா நடைபெறும். எமது ஊரில் பொதுவாக இதனை பள்ளிக்கூடம் என்று அழைப்பார்கள். பள்ளிக்கூடும் ஆரம்பிக்க முன்னர் எமது அறிவை விசாலமாக்கும் படி இறைவனை பிரார்த்திப்போம்.
அதில் இறுதி அடி இவ்வாறு அமைந்திருக்கிறது. 'ஜீலானி முஹியத்தீன் யெமன் தேச அப்துல்லாஹ் ஆலிம் ஸதகதுல்லாஹ் பொருட்டாலும் ற{ஹமானே' (எங்கள் அறிவை விசலமாக்கி வைப்பாயாக) என்று முடிவடையும். தமிழ் பேசும் முஸ்லிம்கள் மறக்காத மறக்கவும் கூடாத என்றும் நன்றிவைக்க வேண்டிய விரல் விட்டு எண்ணக்கூடிய அறிஞர்களின் முதல்வரிசையில் செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் இடம்பெறுகிறார்கள். இஸ்லாமிய சிந்தனையின் மறுமலர்சியின் முன்னோடியாகவும், தமிழ்பேசும் முஸ்லிம்களின் சமூகப்புனர் நிர்மாணித்தியின் சிற்பியாகவும்; வரலாற்றில் பேசப்படுகிறார்கள். கி.பி 1505ம் ஆண்டு போர்த்துக்கீயரின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பைப் போலவே இந்தியாவின் தமிழ்நாடும், கேரளாவும் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இலங்கையிலும் வெளிப்படையாகவே காட்ட ஆரம்பித்தார்கள். அதிகளவிலான முஸ்லிம்கள் கொலைசெய்யபட்டார்கள் அவர்களுக்குச் சொந்தமான கப்பல்கள் தீ வைக்கப்பட்டன. சொத்துக்கள் அழிக்கப்பட்டன.மதம் மாறவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதோடு, சலுகைகளையும் இழந்தார்கள். தாம் முஸ்லிம்கள் என்பதை போர்த்துக்கீயர் அறிந்துகொள்வார்கள் என்பதற்காக அரபுப் பெயர்களுக்குப் பதிலாக உள்ளுர் பெயர்களை தத்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். (உதாரணமாக வெள்ளைத் தம்பி, சின்னத் தம்பி போன்ற பெயர்கள் இன்றும் புழக்கத்தில் இருப்பதைக் அவதானிக்கலாம்). போர்த்துக்கீயரின் வருகையினால் ஏற்பட்ட மோசமான தாக்கங்களினால் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் இஸ்லாம் படிப்படியாக மங்ங்கிக்கொண்டிருந்த காலத்தில் அதற்கு உயிரூட்டிய முஜத்திதாக இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் அவர்களை வரலாறு நன்றியோடு நினைவுகூர்கிறது. இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் கி.பி 1632ம் ஆண்டு தமிழ்நாட்டின் காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். யெமன் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவரது முப்பாட்டனார் முல்லாஹ் அஹமது ஹபீஸ் செய்யிதினா அபூபக்ர் சித்தீக் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமிய சட்டத்துறையில் அதிகம் நாட்டம் காட்டிய மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் அவர்கள், செய்ஹ் ஷம்சுத்தீன் அவர்களின் நெருங்கிய மாணவராக இருந்தார்கள். பிக்ஹ் துறையின் மீது அவர்கள் அதிக ஆர்வம் காட்டியதோடு,அர்வி என அழைக்கப்படும் தமிழ் முஸ்லிம்களுக்கு உரித்தான அரபுத் தமிழை பேணிப்பாதுகாத்து, அதனை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். போர்த்துக்கேயரின் வருகையினால் மங்கியிருந்த தீனியாத்தை மீண்டும் ஒளியூட்டவேண்டிய பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதே காலப்பகுதியில் கி.பி 1660ம் ஆண்டளவில் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் அவர்கள் வட இந்தியாவிற்கு விஜயம் செய்தார்கள். சமகாலத்தில் டெல்லியின் மன்னர் அவுரங்கஸிபின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இமாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் டெல்லி செங்கோட்டையில் (Red fort) உள்ள ஜாமிஆ பள்ளிவாசலில் அமல்களில் ஈடுபட்டிருந்தார்கள். மாறுவேடத்தில் உலாவந்துகொண்டிருந்த மன்னர் அவுரங்கஸிப் அவர்கள் இமாம் அவர்களின் அருகில் சென்று உரையாடினார். அவுரங்கஸிப் அவர்கள் ஹனபி சட்டவாகத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள். அதனால் சட்டவாக்கங்கள் பற்றி மாதிஹூர்ரஸூலோடு நீண்டநேரம் அமர்ந்து உரையாடினார்கள். மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் அவர்களுக்கும் அவுரங்கஸீபிற்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டது. ஆனால் இமாம் அவர்கள் ஒருபோதும் அரசமாளிகைக்கு விஜயம் செய்யவில்லை.ஆனால் மன்னர் அவுரங்கஸீப் இமாம் அவர்களை சந்திக்க பள்ளிவாசலுக்கு விஜயம் செய்வதை வழக்கபடுத்திக்கொண்டிருந்தார்கள். இந்த காலத்தில் தான் ஹனபி சட்டவாக்கத் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. புகழ்பெற்ற ஹனபி சட்டவாக்க நூலான பத்வா ஏ ஆலம்கிரி அல்லது பத்வா ஏ ஹிந்திய்யாவை தொகுக்கும் பணிகளை மன்னர் அவுரங்கஸீப் ஆரம்பித்தார்;. மக்கா, மதீனா, ஈராக் இந்தியத்துணைக் கண்டம் என்பனவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி 500 சட்டவாக்க நிபுணர்கள் டெல்லியில் ஒன்று சேர்ந்து ஹனபி சட்டவாக்க நூலான பத்வா ஏ ஆலம்கிரி யை தொகுக்கும் பணிகளை ஆரம்பித்தார்கள். இதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பு செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இமாம்; சதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் அவுரங்கஸீப் மறைவதற்கு 3 வருடங்களுக்கு முன்னரே வபாத்தானார்கள். இமாம் அவர்களுக்கு மரியாதை வழங்குவதற்காக மன்னர் அவுரங்கஸீப் அவர்கள் தனது பிரதான படைத்தளபதியான ராவோ டல்பத் புண்டெல்லா அவர்களை கீழக்கரைக்கு அனுப்பி அடக்கஸ்தலத்தை நிர்மாணித்தார்கள். இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியிலும் தனது பணிகளை மேற்கொண்டார்கள். மக்கா மதீனா நகரங்களிலும் சட்டகல்வியை அவர்கள் போதித்தார்கள்.குறிப்பாக புகழ்பெற்ற ஷாபிஈ சட்டவாக்க நிபுணரும், முஹத்திஸூமான இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி அவர்களின் மாணவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்களிடம் ஷாபிஈ சட்டக்கல்வியைப் கற்றுக்கொண்டார்கள். உஸ்மானிய கிலாபத்தின் கீழ் மக்கா மதீனாவின் நிர்வாகம் இருந்தது. இரண்டு நகரங்களிலும் அதிகளவிலானோர் புகைப்பதை கண்ணுற்ற இமாம் அவர்கள், ஹரம்களின் எல்லைக்குள் புகைப்பது ஹராம் என்ற பத்வாவை வழங்கினார்கள். பின்னர் அன்றை உஸ்மானிய கிலாபத்தின் கலீபா சுல்தான் 4ம் முராத்(முராத் ராபிஃ) அவர்களை சந்தித்து புகைப்பததன் விளைவுகள் பற்றி எடுத்துக்கூறினாhர். பின்னர் உஸ்மானிய கிலாபத்தின் கீழ் உள்ள நாடுகளில் புகையிலை உற்பத்தியையும், அதன் பாவனையையும் சுல்தான் 4ம் முராத் அவர்கள் தடைசெய்தார்கள். இமாம்; சதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேராளவில் உள்ள கரையோர பள்ளிவாசல் வளாகத்தில் அரபுக்கல்லூரியை நிர்மாணித்தார்கள். இமாம் இமாம்; சதகதுல்லாஹ் காஹிரி அவர்களின் நெருங்கிய மாணவராக வள்ளல் சீதக்காதியவர்கள் வழங்கி தனிப்பட்ட எந்த உதவியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அனைத்தையும் சமூகபுணர்நிர்மானப் பணிகளுக்காகவே பயன்படுத்தினார்கள். பள்ளிவாசலுடன் தெடர்புபடுவதன் மூலமே சமய புணர்நிர்மானம் சாத்தியமானது என உணர்ந்த அவர்கள் அன்றாட செயற்பாடுகளை பள்ளிவாசலுடன் நெருக்கி செய்யுமாறு உத்தரவிட்டார்கள். அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸா, வழக்குத் தீர்ப்பு, திருமணம் போன்றவைகளை பள்ளிவாசலுடன் இணைந்துமேற்கொள்ள அவர்கள் ஊக்கமளித்தார்கள். இமாம்; சதகதுல்லாஹ் காஹிரி அவர்கள் புகழ்பெற்ற Architectureஆகவும் விளங்கினார்கள்.வெளிப் பள்ளி என்ற பகுதியை அவர்களே அறிமுகம் செய்தார்கள். இமாம் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஜன்னல், கூரை, கதவு வடிமைப்புக்களுமே இன்றளவிலும் பின்பற்றப்படுகின்றன. வுழு செய்;வதற்கான ஹவுழ் தடாகத்தை அறிமுகம் செய்ய பெருமையும் அவர்களை சாரும். சமகாலத்தில் ஹவுழ் முறைமை வட இந்தியாவிலோ, அரபுலகிலோ காணப்படவில்லை என்பது முக்கிய அம்சமாகும். இமாம் ஸதகதுல்லாஹ் காஹிரி அவர்களின் பள்ளிவாசல் கட்டடக்லை துபாய்,அபுதாபி, அல் ஐய்ன் போன்ற பகுதிகளில் 1990ம் ஆண்டின் முதல் பகுதியில் அறிமுகமானதாக கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் ; “Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu — A study of the Contributions of Sri Lanka and Tamil Nadu to Arabic, Arwi, Persian and Urdu Languages, Literature and Education” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள். கிழக்காசிய நாடுகளும் இந்த முறையையே பின்பற்றுகின்றன. கவிதைத் துறைக்கு அவர்கள் வழங்கழய பங்களிப்பே வித்திரியா என்று அழைக்கப்படுகிறது. அரபு கவிதை இலக்கியத்தின் முத்தாக வித்திரியா கருதப்படுகிறது. 29 எழுத்துக்களும் இரண்டு அடிகள் என்ற ரீதியில் எழுதப்பட்டு பின்னர் ஐந்து அடிகளைக் கொண்டவையாக விரிவுபடுத்தப்பட்டன. வித்திரியா என்ற கவிதையி; நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்புக்கள் அற்புதங்கள், தனித்துவங்கள்.ஸஹாபாக்களின் பெருமைகள், அவர்களின் வீரம் என்பனவற்றை வித்திரியா உள்ளடக்கியிருக்கிறது.வித்திரியாவை போன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்புக்களை கூறும் அரபு கவிதை இலக்கியத்தை காண்பது அரிது என்பது இலக்கிய அறிஞர்களின் வாதாகும். ; நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் புகழைப் பரப்பியதால் இமாம் அவர்களுக்கு மாதிஹூர் ரஸூல் என்ற நாமம் வழங்கப்படுகிறது. செய்ஹூல் இஸ்லாம் மாதிஹூர் ரஸுல் சதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூமுல்லாஹ் அவர்கள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
(படம் : இமாம் அவர்களின் மக்பராவும், மன்னர் அவுரங்கஸீப் பத்வா ஏ ஆலம்கீரியோடும் )
No comments:
Post a Comment