Sunday, June 4, 2017

அகழ் தோண்டுகையில் வெளிப்பட்ட நபித்துவத்தின் அத்தாட்சிகள்


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப்போரின் போது அகழ் வெட்டும் பணி நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்கள். அன்ஸாரி என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். மக்காவிலிருந்து மதீனா வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி(ஸல்) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். மக்களோடு சேர்ந்து நபிகளாரும் அகழ் தோண்டலானார்கள். 
அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. அதை யாராலும் உடைக்க முடியவில்லை. அது பற்றி நபிகளாருக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள், 'நான் இறங்கிப் பார்க்கிறேன்' என்று கூறிவிட்டு எழுந்தார்கள். மூன்று நாள்கள் எதையும் அவர்கள் உண்ணாமலிருந்ததால், ஒட்டிய வயிற்றில் நபிகளார் ஒரு கல்லைக் கட்டியிருந்தார்கள். அப்படியே வந்து நபி(ஸல்) அவர்கள் குந்தாலி ஒன்றை எடுத்துப் பாறை மீது ‘அல்லாஹ் மிகப்பெரியவன்! பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லியவாறே அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. 

இதைக் கண்ட ஜாபிர்(ரலி), நபிகளாரிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! நான் வீடு வரை செல்ல அனுமதியுங்கள்' என்று கேட்டுச் சென்றார். ஜாபிர்(ரலி) தன் வீட்டிற்குச் சென்று தன் மனைவி சுஹைலா பின்த் மஸ்ஊத்திடம், 'நபி(ஸல்) அவர்கள் பசியோடிருப்பதைப் பார்த்தேன். அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் உணவு இருக்கிறதா?' என்று கேட்டார். அதற்கு அவர், 'என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது' என்று கூறினார். 

உடனே ஜாபிர்(ரலி) அந்த ஆட்டுக் குட்டியை அறுத்து, தன் மனைவியைக் கோதுமையை அரைக்கப் பணித்து, மூன்று கற்களாலான அடுப்புக்கு மேல் சட்டியை வைத்து, பிறகு இறைச்சியைச் சட்டியிலிட்டு, குழைத்த மாவு இளம் பக்குவ நிலைக்கு வந்ததும், அது முழுமையாக வெந்து விடும் நிலையிலிருக்கும்போது, நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, 'என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. 


இறைத்தூதர் அவர்களே! நீங்களும் உங்களுடன் இன்னும் ஒருவர்... அல்லது இருவர் வாருங்கள்' என்று ஜாபிர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உன்னிடம் எவ்வளவு உணவு இருக்கிறது?' என்று கேட்டார்கள். ஜாபிரும் அதன் அளவைக் கூறினார். 'இதுவே அதிகம், சிறந்ததும் கூட' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள், 'நான் வரும் வரையில் அடுப்பிலிருந்து சட்டியை இறக்க வேண்டாம்; சட்டியிலிருந்து ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீ உன் மனைவியிடம் சொல்' என்று கூறினார்கள். அங்கிருந்த தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் விருந்து சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள்' என்று உரத்த குரலில் அழைத்தார்கள். 

ஜாபிர் தன் மனைவியிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு அவரது மனைவி “இறைவன் பார்த்துக் கொள்வான்” என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் வந்து சேர்ந்து, 'வீட்டிற்குள் முண்டியடிக்காமல் நுழையுங்கள்' என்று கூறினார்கள். அந்த உணவில் பரக்கத் - பெருக்கம் ஏற்பட நபிகளார் பிரார்த்தித்தார்கள். 

நபி(ஸல்) அவர்கள், ஜாபிரின் மனைவியிடம், 'ரொட்டி சுடுபவள் ஒருத்தியை உதவிக்கு அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்துத் தம் தோழர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியைப் பிய்த்தபடியும் பாத்திரத்திலிருந்து இறைச்சியை எடுத்து ரொட்டியின் மீது வைத்துக் கொடுத்தபடியும் இருந்தார்கள். 

வந்தவர்கள் அனைவரும் வயிறு நிரம்ப உண்டனர். இறுதியில் சிறிது எஞ்சியது. பிறகு நபி(ஸல்) அவர்கள் ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி, 'இதை நீயும் சாப்பிடு; அன்பளிப்பும் செய். ஏனெனில், மக்கள் பசியோடுள்ளனர்' என்று கூறினார்கள். 

நபித்துவத்தின் பல அத்தாட்சிகள் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்டன. 

ஸஹீஹ் புகாரி 3:56:2834, 3070, 4:64:4101

நன்றி - ஜெஸிலா பானு - மாலை மலர் - பதிவு: ஜூன் 03, 2017 12:08

No comments:

Post a Comment