பெருநாள் தொழுகையை பள்ளிகளில் நிறைவேற்றுவது வழிகேடா??
-வஹ்ஹாபிச சலபிகளின் வாதங்கள் ஓர் அலசல்
**********************************************************
நோன்புப் பெருநாளுக்கு இன்னும் ஒரு சில தினங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் இடம் தொடர்பில்( முஸல்லா) வாதப்பிரதிவாதங்களும் கருத்து மோதல்களும் பல தளங்களிலும் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது.
பெருநாள் தொழுகையை திடலில் மட்டும்தான் தொழவேண்டும் என்றும் பள்ளிகளில் தொழுவது கூடாது, வழிகேடென்றும் கருத்துக்கள் அதிகளவில் வஹ்ஹாபிச,சலபிக்கூட்டத்தினரால் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.எனவே இது பற்றிய ஒரு தெளிவை வழங்கும் நோக்கில் இக்கட்டுரை வரையப்படுகிறது.
பெருநாள் தொழுகையை திடலில் மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும்,பள்ளிகளில் தொழுவது வழிகேடு என்று கூறுவோர் பின்வரும் ஹதீதை தம் வாதத்துக்கு ஆதாரமாகக் கொண்டுவருகின்றனர்.
“அபூ ஸயீத் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் முஸல்லாவுக்கு(தொழுமிடம்) செல்பவர்களாக இருந்தனர்.(புஹாரி 956)”
மேற்படி ஹதீதில் இருந்து நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பெருநாள் தொழுகைக்காக முஸல்லாவுக்கு (தொழுமிடம்) செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதையும் அது திறந்த மைதானாமாக இருந்தது என்பதையும் எடுத்து வைத்து பெருநாள் தொழுகை திடலில் மட்டும்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்து நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மைதானத்தில் தொழுதார்கள் என்று ஹதீஸ் அறிவிக்கிறதே தவிர (நபிகளார் மைதானம் சென்றதற்கான காரணங்கள் இக்கட்டுரையின் பின்பகுதியில் ஆதரபூர்வமாக அலசப்பட்டுள்ளது) திடலில் மட்டும் தான் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படவேண்டும் என்றோ பள்ளிகளில் தொழுவது வழிகேடு என்றோ நாம் புரிந்துகொள்ள இதில் எந்த முகாந்தரமும் இருப்பதாக பார்க்க முடியாது. நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ரொட்டி உண்டார்கள் என்ற செய்தியிலிருந்து சோறு சாப்பிடுவதை நாம் எவ்வாறு விலக்கிக்கொள்ளமாட்டோமோ அவ்வாறே இதனைப் புரிய வேண்டும்.
மேற்படிய அமைப்பில் வரும் ஹதீதுகளைத் தவிர நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பள்ளிவாசல்களை விட்டுவிட்டு பெருநாள் தொழுகைக்காக திடலின் பக்கம் வாருங்கள் என்று ஏவிய எந்தவிதமான நேரடியான செய்திகளோ அல்லது பெருநாள் தொழுகைக்காக மக்களை பள்ளிகளை விட்டும் தடுத்த செய்திகளோ ஒரு ஹதீதில் கூட வரவில்லை.
பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற நபிமொழிகளில் எந்த விதமான தடைகளும் விலக்கள்களும் இல்லாத நிலையில் திடலில் மட்டும்தான் தொழுதாக வேண்டுமென்று இன்று சிலர் அடம்பிடிப்பதும் பள்ளிகளில் தொழுவதை தடைசெய்ய முயற்சிப்பதும் நபிகள் பெருமானாருக்கே பாடம் கற்பிக்க முனையும் இழிசெயலாகும்.
பொதுவாக பள்ளிவாசல்களில் தொழுகையை நிறைவேற்றுவதன் சிறப்புக்கள் பற்றி ஏராளமான நபிமொழிகளில் நமக்கு ஆர்வமூட்டிய நபிகள் பெருமானார் அவற்றையெல்லாம் கடந்து பெருநாள் தொழுகைக்காக நபிகளாரே திடலை நோக்கி சென்றிருக்கிறார்கள் என்றால் பெருநாள் தொழுகை திடலில்தான் நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்கிற வாதத்தையும் வஹ்ஹாபி, சலபிக் கும்பல் தூக்கிக்கொண்டு திரிகின்றனர்.
ஆனால் முறையாக அணுகும் ஒருவர் மேற்படி புரிதல் சரியானதல்ல என்பதை இலகுவில் கண்டுகொள்வார். தொழுவதற்கு பள்ளிவாசல்கள் எவ்வளவு மகத்துவமிக்கது என்பதை பல ஹதீதுகள் மூலம் நமக்கு சொல்லித்தந்த ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பெருநாள் தொழுகைக்காக திடலை நாடிச் சென்றதன் பின்னணியில் குறித்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாசல்களில் தொழுகையை நிறைவேற்றுவதில் சில நெருக்கடிகளும் வேறு பிற காரணிகளும் உட்கார்ந்துகொண்டிருந்தது என்பதை இலகுவில் நாம் உணர முடியும்.
நபிகளாருடைய காலகட்டத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு மஸ்ஜிதுகள் விசாலமாக இருக்கவில்லை என்பதும் காபிர்களின் மத்தியில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்டி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கிலுமே நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் திடலை நாடிச் சென்றார்களே தவிர பள்ளிகளை விட திடல் தான் பெருநாள் தொழுகையை நிறைவேற்றச் சிறந்த இடம் என்ற கருத்தில் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறும் ஊகமாக அல்லாது தெளிவான சான்றுகளின் அடிப்படையிலேயே நாம் முன்வைக்கிறோம்.
பெருநாள் தொழுகைக்காக மாதவிடாய்ப்பெண்களையும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் திடலுக்கு அழைத்திருந்தமையை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம். பெண்கள் தாம் மாதவிடாயிலிருந்து சுத்தமாகும் வரை எவ்விதமான தொழுகைகளிலும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்திய நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மாதவிடாய்ப்பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக திடலுக்கு அழைத்து துஆவில் பங்கெடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள் என்றால் இதன் பின்னணி குறித்து அலச வேண்டும். நிச்சயம் இது காபிர்கள் மத்தியில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட நபிகளார் செய்த ஏற்பாடு என்பதே நம்முடைய இமாம்களின் முடிவாகும். .பர்ழான ஐவேளைத் தொழுகையே மாதவிடாய்ப்பெண்களுக்கு விலக்களிக்கப்பட்டிருக்க, மேலும் பெண்களுக்கு தொழுகை நிறைவேற்ற மிகச் சிறந்த இடம் வீடு என்று அடையாளப்படுத்திய நபிகளார் மாதவிடாய்ப் பெண்களையும் துஆவில் பங்கெடுக்க தொழுகை நடைபெறும் இடத்துக்கு வருகை தரவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார்கள் என்றால் மேற்படிய காரணத்தை நிரூபிக்க இச்சான்று வலுவானதாகும்.
நபிகளார் திடலை நாடியதற்கு நாம் முன்வைக்கிற இரண்டாவது காரணம் பள்ளிகளில் காணப்பட்ட இடப்பாற்றாக்குறையும் நெருக்கடியுமாகும் என்ற நமது நிலைப்பாட்டுக்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
“உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களுடைய ஆட்சி காலத்தில் பெருநாளுடைய தினத்தில் கடும் மழை பெய்துகொண்டிருந்தது.ஆகவே மக்கள் திடலுக்கு செல்லாமல் பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அப்துல்லாஹ் இபுனு ஆமிர் இபுனு ராபியா அவர்களிடம் நீங்கள் எதை என்னிடம் சொன்னீர்களோ அதை மக்களுக்கு அறிவிக்கும் படி கட்டளையிட்டார்கள்.
அப்துல்லாஹ் இபுனு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அறிவித்தார்கள்.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களுடைய ஆட்சிக்காலத்தில் பெருநாளுடைய தினத்தில் கடும் மழை பெய்துகொண்டிருந்தது. மக்கள் திடலை விட்டு ஒதுங்கினார்கள்.உமர் ரழியல்லாஹு அன்னவர்கள் மக்களை பள்ளிவாசலில் ஒன்றுதிரட்டி பெருநாள் தொழுகையை நடத்தி முடித்தார்கள்.பிறகு உமர் ரழியல்லாஹு அன்னவர்கள் மிம்பரில் ஏறி
“நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பெருநாள் தொழுகையை திடலில் நிறைவேற்றுவார்கள்,காரணம் என்னவெனில் அது அவர்களுக்கு இலகுவாகவும் போதுமானதாகவும் இருந்தது. மேலும் அவர்களுக்கு பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்ற போதுமானதாக இருக்கவில்லை.”
(இமாம் பைஹக்கி ரஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் அஸ்ஸூனன் அல் குப்ரா 3/310)
இந்த ஹதீதில் இருந்து நபிகளார் பள்ளிவாசலில் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் நெருக்கடிகளை தவிர்க்கவுமே பெருநாள் தொழுகைக்காக திடலை தெரிவு செய்தார்கள் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
ஸஹாபாக்களின் கூற்றுக்கள் இந்த வஹ்ஹாபிச சலபி முல்லாக்களுக்கு ஆதாரமாகக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் நபிகளார் செய்த ஒரு செயலுக்கான காரணத்தைச் சொல்லவுமா ஸஹாபாக்கள் தகுதியற்றவர்கள்? நபிகளார் செய்த ஒரு காரியத்துக்கான பின்னணியை தெளிவுபடுத்த ஸஹாபாபாக்களை விட வேறு யார்தான் உரித்துடையவர்கள்?
எனவே நபிகளார் திடலில் மட்டும்தான் தொழ வேண்டும் என்று ஏவாத ஒன்றை ஏவவும் பள்ளிகளில் தொழுவது ஹராம் என்று தடுக்காத ஒன்றை தடுக்கவும் இந்த வஹ்ஹாபிச,சலபிச முல்லாக்களுக்கு அனுமதியளித்தது யார்????
பெருநாள் தொழுகையை திடலில் நிறைவேற்றுவது கூடாது என்றோ அது தடுக்கப்பட்டது என்றோ நாம் சொல்லவில்லை. பெருநாள் தொழுகையை பள்ளிகளிலும் நிறைவேற்றலாம்.திடலிலும் நிறைவேற்ற முடியும். அனால் திடலை விட பள்ளிகளை முற்படுத்துவதே நபிகளாரின் அழகிய வழிமுறை என்பதை ஆணித்தரமாக நிறுவ முடியும். இதனையே இமாம் ஷாபீஈ ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்
”ஊரிலுள்ள பள்ளிவாசல் பெருநாள் தொழுகைக்காக மக்களை உள்ளடக்கக்கூடிய போதிய இடவசதியை கொண்டிருப்பின் மக்களை திடலுக்கு செல்லும்படி நான் வலியுறுத்தமாட்டேன்.திடலுக்கு சென்றாலும் தவறில்லை.தொழுகை கூடும்.
(இமாம் ஷாபியி ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களுடைய கிதாபுல் உம்மு (1/207))””
உங்கள் பகுதிகளில் உள்ள திடல்களில்தான் நீங்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்ற நபிகளாரின் எந்தவிதமான நேரடி செய்திகளும் இல்லாத நிலையில் நபிகளார் முஸல்லா என்ற இடத்துக்கு சென்றார்கள் என்ற ஹதீதை வைத்து பள்ளிவாசல்களில் தொழுவது கூடாது என்ற முடிவுக்கு நீங்கள் வருவதாக இருந்தால் நபிகளார் தொழுத அதே மைதானத்தில் தொழுகையை நிறைவேற்றினால் மட்டுமே உங்கள் வாதப்படி நபிவழியைப்பின்பற்றியதாக ஆகும்.
பெருநாள் தொழுகை திடலில் தான் தொழப்படவேண்டும் என சொல்வோர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உங்கள் பகுதிகளிலுள்ள கடற்கரைகளிலும் மைதானங்களிலும் தொழுதுகொள்ளுங்கள் என கட்டளையிட்டதாக ஒரு சான்றையேனும் கொண்டுவரமுடியுமா????
அல்லது பள்ளியில் தொழுவது கூடாத ஒரு காரியம் என கட்டளையிட்ட ஒரு செய்தியையேனும் கொண்டுவருவார்களா??
நபி சொன்னால் அப்படியே பின்பற்றுவோம் என சொல்வோர் மதினாவில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தொழுத அதே திடலுக்கு போய் தொழ முன்வருவார்களா????
போன்ற கேள்விகளுக்கான பதில்களின்றி திடல் தொழுகைவாதிகள் தவிக்கின்றனர்.
ஆகமொத்தத்தில் திடலில் மட்டும் தான் பெருநாள் தொழுகை என்ற வாதம் பின்வரும் அடிப்படைகளில் முட்டால்தனமானதாகும்.
01) பெருநாள் தொழுகையை திடலில் மட்டும்தான் தொழவேண்டும் என்ற ஏவலோ பள்ளிவாசலில் தொழுவது ஹராம் என்ற விலக்களோ எந்த ஹதீதிலும் இல்லை.
02) பெருநாள் தொழுகைக்காக நபிகளார் முஸல்லாவை நாடுவார்கள் என்று செய்தி இருக்கிறது. ஆனால் பள்ளிவாசல்கள் பெருநாள் தொழுகைக்கான முஸல்லாக்கள் அல்ல என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை!
03) நபிகளார் திடலில் தொழுதார்கள்.ஆனால் அவரவர்கள் தங்கள்பகுதிகளிலுள்ள திடலில் தொழுதுகொள்ளுங்கள் என்ற கருத்தில் எந்த ஏவலையும் ஹதீதுகளில் காணமுடியவில்லை!
04) நபி எப்படி செஞ்சாங்களோ அப்படியேதான் செய்வோம் என்றால் நபிகளார் தொழுத மதினாவிலுள்ல முஸல்லாவிற்குத்தானே செல்லவேண்டும் என்ற கேள்விக்கு பதில் இவர்களிடத்தில் இல்லை!
05) எல்லாவற்றிற்கும் மேலாக நபிகளார் திடலை நாடியதற்கான காரணமும் அவர்கள் பெருநாள் தொழுகைக்காக பள்ளியையே முதன்மைப்படுத்தினார்கள் என்ற உண்மையும் ஹதீதின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது.
எனவே நமது ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில் போதிய இடவசதிகள் இருக்கும்பட்சத்தில் பெருநாள் தொழுகைக்கான இடமாக பள்ளிகளை ஆக்கிக்கொண்டு பெருநாள் தொழுகையின் நன்மைகளோடு இறையில்லங்களில் தொழுத நன்மைகளையும் சேர்த்து அடைந்திட முயற்சிப்போமாக! மேலும் திடல் தொழுகை என்ற பெயரில் அசுத்தமான இடங்களில் நடைபெறும் வழிபாடுகளையும் ஆண் பெண் கலப்பு என அங்கு அரங்கேறும் பித்னாக்களை விட்டும் தவிர்ந்து நடப்போமாக!
No comments:
Post a Comment