காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.
பெரியார் அப்படிச் சொல்லும் அளவுக்கு காயிதே மில்லத் அப்படி என்ன செய்தார்?
காயிதேமில்லத்திற்கு மொழி உணர்வு இருந்தது; அதனால்தான் 1948 இல் அவர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தபோது இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும் என வாதம் புரிந்தார்.
காயிதேமில்லத்திற்கு பிற மொழியினர் மீதும் அன்பு இருந்தது. அதனால்தான் அவர் தொகுதிக்கே செல்லாமல் கேரளாவின் மஞ்சேரியிலிருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
காயிதேமில்லத்திற்கு இன உணர்வு இருந்தது; அதனால்தான் திராவிட இயக்கத் தலைவர்களுடன் அவர் தோழமை கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற அச்சாணியாகச் செயல்பட்டார்.
காயிதேமில்லத்திற்கு சமூக நீதிப் பார்வை இருந்தது; அதனால்தான் இட ஒதுக்கீடு, தனித்தொகுதி முறை ஆகிய உரிமைகளுக்காக சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் தொடர்ந்து முழங்கினார்.
காயிதேமில்லத்திற்கு தொலைநோக்கு இருந்தது; அதனால்தான் 1950 களிலேயே தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் உருவாக்க அவர் காரணமாக இருந்தார்.
காயிதேமில்லத்திற்கு ஊடகங்களைப் பற்றிய புரிதல் இருந்தது; அதனால்தான் வடமாநிலங்களில் இருப்பது போன்று சென்னையிலும் திரைப்பட பயிற்சிக் கல்லூரியை நிறுவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பொது ஊடகங்களுடன் நல்லுறவைக் கடைபிடித்தார். தம் சொந்த முயற்சியினால் 'முஸ்லிம்' என்ற நாளிதழையும், 'உரிமைக்குரல்' என்ற வார இதழையும் நடத்தினார்.
காயிதேமில்லத்திற்கு மனித உரிமையில் ஆர்வம் இருந்தது; அதனால்தான் ஏழைகள், அனாதைகள், உழைப்பாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் அவர் நின்றார்.
காயிதேமில்லத்திற்கு சமூகத் தீமைகள் மீது கோபம் இருந்தது; அதனால்தான் குதிரைப் பந்தயத்தை ஒழிக்க வேண்டும் என அவர் சட்டப்பேரவையில் பேசினார். அவ்வாறு ஒழித்தால் அதில் பணியாற்றும் முஸ்லிம்கள்தான் அதிகம் வேலையிழப்பார்கள் என ஒரு உறுப்பினர் குறிப்பிட்டபோது, மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து அதன்மூலம் வாழக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கெட்டுப்போகட்டும் என கொந்தளித்தார்.
காயிதேமில்லத்திற்கு நாட்டுப்பற்று இருந்தது; அதனால்தான் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பின்போது, இந்திய ராணுவத்தில் பணியாற்ற தமது ஒரே மகனைத் தியாகம் செய்தார்.
காயிதேமில்லத்திற்கு கலை, இலக்கியத்தின் மீது காதல் இருந்தது; அதனால்தான் அவர் பராசக்தி பட விழாவிலேயே பங்கேற்றார். நாகூர் ஹனீபாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்டார்.
காயிதேமில்லத்திற்குப் பிற தத்துவங்களைப் பற்றிய பரந்த பார்வை இருந்தது; அதனால்தான் அவர் படிக்கின்ற காலத்திலேயே பைபிள் போட்டியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
காயிதேமில்லத் தமது வாழ்நாளில் ஒருபோதும் இஸ்லாமிய மார்க்கத்தையும், இந்திய அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை. அவர், இஸ்லாமியக் கொள்கைகளை பிசகாமல் பின்பற்றிய நல்ல முஸ்லிமாகவும் வாழ்ந்தார். அதேசமயம் பன்முகத்தன்மை கொண்ட இந்தியச் சூழலில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட நல்ல அரசியல் தலைவராகவும் இருந்தார்.
No comments:
Post a Comment