Friday, July 7, 2017

"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை".



மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் தங்கிய முதல்வரின் அன்னை சிவகாமி அம்மாள்
ஒரு நாள் மதுரை ராணி மங்கம்மாள் சத்திரத்தில் ஒரு வயதான பெரியம்மாள் சாதாரண வெள்ளைச் சேலையைக் கட்டிக் கொண்டு சத்திரத்தின் குழாயைத் திறந்து முகம், கை,கால்களைக் கழுவிக் கொண்டிருந்தார். அந்த அம்மையார் கழுத்திலே தங்கச் சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை.காதில் மட்டும் ஏதோ ஒரு வகையான பழங்கால நகையொன்று தொங்கிக் கொண்டிருந்தது.அழுக்கடைந்த கோலத்தில் தம் மரியாதையைக் காக்க ஆடம்பரமில்லாமல் அடக்க ஒடுக்கமாகத் தென்பட்டார்கள் அந்த வயதான பெரியம்மாள்.
அப்போது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அந்த அம்மாளிடம் விரைந்து சென்று, "அம்மா, எப்போது வந்தீர்கள்? எங்கே தங்கி இருக்கின்றீர்கள்? எங்கே போகவேண்டும்?" என்ற கேள்விகளை மிக ஆர்வத்தோடு கேட்டார்.

இப்போது தான் விருதுநகரிலிருந்து வந்தோம்! சத்திரத்திலே தங்கி இருக்கிறோம்.மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகவேண்டும்" என்றார்கள் அந்த அம்மையார்.
"டாக்ஸிக்கு ஏற்பாடு செய்கிறேன் அம்மா" என்றார் அந்த எம். எல். ஏ
"வேண்டாம் தம்பி! நாங்கள் நாலைந்து பேர் வந்திருக்கிறோம்.நடந்தே கோவிலுக்கு போகிறோம்.நான் யாரென்று யாரிடமும் சொல்லாதீர்கள் தம்பி!" என்று மிகவும் நயமாக கேட்டுக் கொண்டார்கள்.
அங்கே கூடியிருந்த ஒரு சிலர் அந்த எம்.எல்.ஏ யிடம் அந்த பெரியம்மா யார் என்று வினவினர்.முதலில் சொல்ல மறுத்த அவர் , அழுத்திக் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தினால், காமராஜரின் தாயார் என்றார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் திகைத்து நின்றனர்.
"ஒரு மாகாணத்தின் முதன் மந்திரியின் தாயாரா இப்படி இருக்கிறார்? எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது!"
"ஒரு மாகாணத்தின் முதன்மந்திரியின் தாயாரா, சாதாரண நபரைப் போல சத்திரத்தில் தங்கி இருக்கின்றார்கள்?"
இதுவல்லவா ஜனநாயகத்தின் சிகரமான நாடு!" என்று அங்கு கூடியிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டனர்.
"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை".

No comments:

Post a Comment