அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !!!
அரஃபாவில் செய்ய வேண்டியவை
நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி) நூல்: நஸயீ 2961
அரஃபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார். அதில் சேர்ந்து தொழ வேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை - செவிமடுக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா - உரை - நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137
முஸ்தலிஃபாவுக்குச் செல்வது
அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கி விட்டு சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிஃபாவுக்குச் சென்றதும் மஃரிபையும், இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கி விட்டு சுப்ஹ் தொழ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிஃபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும், இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி) விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137
மீண்டும் மினாவுக்குச் செல்வது
முஸ்தலிஃபாவில் பஜ்ரைத் தொழுததும் மஷ்அருல் ஹராம்என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வரும் வரை அந்த இடத்திலேயே இருந்து விட்டு சூரியன் உதயமாவதற்கு முன் மினாவை நோக்கிப் புறப்பட வேண்டும்.
(பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏறி மஷ்அருல் ஹராம் என்ற இடத்துக்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹு கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும் வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137
பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும் பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்று விடலாம்.
ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1681, 1680
தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1678, 1677, 1856
மினாவில் செய்ய வேண்டியவை
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப் படி தமது மகனைப் பலியிட முன் வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபாஎன்ற இடத்தில் அவன் மீது ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.
அதன் பிறகு ஜம்ரதுல் உஸ்தாஎனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை கற்களால் எறிந்தார்கள்.
அதன் பிறகு ஜம்ரதுல் ஊலாஎனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழு தடவை சிறு கற்களால் எறிந்தார்கள்.
பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.
அதை நினைவு கூரும் விதமாகவும், இறைவனது கட்டளை நமது சிற்றறிவுக்குப் புரியாவிட்டாலும் அதை அப்படியே ஏற்போம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும் மினாவில் அமைந்துள்ளன.
ஜம்ரதுல் அகபா
முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும் போது இடப்புறமாக ஜம்ரதுல் அகபாஎனும் இடம் அமைந்துள்ளது.
துல் ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபாஎன்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும்.
(புகாரி 1753)
ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும்.
(புகாரி 1753)
ஏழு கற்களை எறிந்த பின் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.
(புகாரி 1753)
எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும்.
(முஸ்லிம் 2289)
நெருக்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை; விரட்டுதல் இல்லை; வழி விடு, வழி விடுஎன்பது போன்ற கூச்சல் இல்லை.
அறிவிப்பவர்: குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: நஸயீ 3011, திர்மிதீ 827, இப்னுமாஜா 3026.
இரவே மினாவுக்குச் சென்றவர்கள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியக் கூடாது. இதற்கான ஆதாரம் வருமாறு:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பிய போது, ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதீ 817.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர்என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) சற்று விரைவு படுத்தினார்கள். ஜம்ரதுல் அகபாவை அடையும் வழியில் புறப்பட்டார்கள். மரத்திற்கு அருகில் உள்ள ஜம்ரதுல் அகபாவை அடைந்ததும் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறினார்கள். சுண்டி எறியும் சிறு கற்களையே எறிந்தார்கள். பதனுல் வாதிஎன்ற இடத்திலிருந்து எறிந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2137
முன்னரே புறப்பட்டுச் சென்றவர்களும் சூரியன் உதயமான பிறகே கல்லெறிய வேண்டும் என்றாலும் பெண்கள் மட்டும் மக்கள் கூடுவதற்கு முன்பே கல்லெறிந்து கொள்ளலாம்.
அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் இல்லைஎன்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் ஆம்என்றேன். அப்போது அவர்கள், புறப்படுங்கள்என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களேஎன்று கேட்டேன். அதற்கவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் நூல்: புகாரி 1679
தலை மழித்தல்
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலை முடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் இவ்வாறு செய்ததும் இஹ்ராமிலிருந்து ஓரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுவார்.
தலை மயிரைச் சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு; என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1727
பெண்கள் தலை மழித்தல்
தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 1694
கல்லெறிந்த பின்
நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 1708
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், பத்தாம் நாளில் கஃபாவை தவாஃப் செய்வதற்கு முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணத்தைப் பூசி விட்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 1754, 5922 முஸ்லிம் 2040
(பத்தாம் நாளில் குர்பானி கொடுப்பது சம்பந்தமான விவரங்களைத் தனியாக பிறகு விளக்குவோம்.)
பத்தாம் நாள் கிரியைகளை மேலே நாம் கூறிய வரிசைப்படி செய்வது நபிவழி என்றாலும் அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும் போது ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லைஎன்றார்கள். இன்னொருவர் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாஃப் செய்து விட்டேன்என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லைஎன்றார்கள். முன் பின்னாகச் செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் செய்து கொள்! தவறேதும் இல்லைஎன்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்: புகாரி 124, 1738, 83, 1736, 6665
மினாவில் பத்தாம் நாள் செய்ய வேண்டிய காரியங்களை முன் பின்னாகச் செய்வதில் தவறேதும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
தவாஃப் அல் இஃபாளா
பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும்.
இது தவாஃப் ஸியாராஎனவும் கூறப்படுகிறது.
இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று தவாஃப் அல் இஃபாளாசெய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2307
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.
தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.
தவாஃப் அல் இஃபாளா செய்யும் முறை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் குதூம்செய்யும் போது மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாஃபின் போது ஏழு சுற்றிலும் நடந்தே தான் செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓடியதாக வரும் ஹதீஸ்களில் ஆரம்ப தவாஃபின் போதுஎன்ற வாசகம் காணப்படுகின்றது. இதிலிருந்து இதை நாம் அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051
பெயர் குறிப்பிடப்பட்ட தவாஃபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாஃபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாஃபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)
அது போல் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.
இந்தத் தவாஃபை முடித்த பிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமிலிருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது.
கடைசி ஹஜ் வருடத்தின் போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ், உம்ரா இரண்டுக்கும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் தவாஃபுல் குதூம் செய்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவரும், ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டியவரும் பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 319, 1562, 4408
பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. பத்தாம் நாளில் கல்லெறிந்து, தலையை மழித்து, அறுத்துப் பலியிட்டவுடன் பெண்களிடம் கூடுவது தவிர மற்ற விஷயங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதை முன்னர் கண்டோம். தவாஃப் அல் இஃபாளா செய்தவுடன் முழுமையாக ஒருவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார்.
பெருநாள் தொழுகை கிடையாது
பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் சொற்பொழிவு நிகழ்த்தியதாகப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது அள்பாஎனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ரலி) நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669
பத்தாம் நாளன்று மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உரையை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி) நூல்: அபூதாவூத் 1670
அனேகமாக மினாவில் அவர்கள் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நிகழ்த்தியிருக்கக் கூடும்.
கல்லெறியும் நாட்களும், இடங்களும்
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபா எனும் இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிவது பற்றி முன்னர் அறிந்தோம். அதைத் தவிர கல்லெறிய வேண்டிய மற்ற இடங்களும் நாட்களும் உள்ளன. அவற்றையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
துல்ஹஜ் பதினொன்று, பனிரெண்டு, பதிமூன்று ஆகிய மூன்று நாட்கள் கல்
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.
(அல்குர்ஆன் 2:203)
அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய இரவுகளில் மினாவிலேயே தங்கிட வேண்டும். தினமும் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறியும் மூன்று இடங்களிலும் தலா ஏழு கற்களை எறிய வேண்டும்.
மினாவுக்குள் நுழையும் போது இடது புறம் ஜம்ரதுல் அகபா அமைந்துள்ளதை நாம் முன்னர் அறிந்தோம்.
அங்கிருந்து 116.77 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் உஸ்தா எனும் இடம் அமைந்துள்ளது.
ஜம்ரதுல் உஸ்தாவிலிருந்து 156.4 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் ஊலா (அல்லது ஜம்ரதுல் ஸுக்ரா) அமைந்துள்ளது.
இம்மூன்றும் கல்லெறிய வேண்டிய இடங்களாகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஊலாஎனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறினார்கள். பிறகு சற்று முன்னேறி, சம தரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். பிறகு ஜம்ரதுல் உஸ்தாவில் கல்லெறிந்தார்கள். பிறகு இடது புறமாக நடந்து சென்று சம தரையில் கிப்லாவை நோக்கி நின்றார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு பதனுல் வாதிஎன்ற இடத்திலிருந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்தார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்பினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன்எனவும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாலிம் நூல்: புகாரி 1751, 1753
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதைக் கவனித்து உடனே கல்லெறிய வேண்டும்.
நாங்கள் நேரத்தைக் கணித்துக் கொண்டே இருப்போம். சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிவோம்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1746
இவ்வாறு மூன்று நாட்களும் கல்லெறிய வேண்டும். கல்லெறிவதற்காக மினாவில் இரவு தங்குவது நபிவழி என்றாலும் அது கட்டாயமானதல்ல. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவிலேயே தங்கிக் கொண்டு கல்லெறிவதற்காக மினாவுக்குப் புறப்பட்டு வரலாம்.
மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1634, 1745
நன்றி : அபு சையது - துஆக்களின் தொகுப்பு
No comments:
Post a Comment