Tuesday, February 18, 2020

**ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலியுல்லாஹ் அவர்களின் வரலாறு…*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                                     பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நத்ஹர் நகர் !
திருச்சியின் மறுபெயர்தான் இது…
இஸ்லாமியச் சுடரை தென்னிந்தியாவில் ஏற்றி வைப்பதற்காக, முதன் முதலாக இங்கே அடியெடுத்து வைத்த மகான் நத்ஹர்வலி அவர்களின் நினைவாக முஸ்லிம்களால் சூட்டப்பட்ட பெயர்தான் நத்ஹர்நகர்…
திருச்சி நகர் என்றதும் உடனடியாக நம் நினைவில் தோன்றுவது நத்ஹர்வலி அவர்களின் தர்காதான். இது தென்னாட்டிலுள்ள தர்ஹாக்களில் மிகவும் பழமையானது. ஹிஜ்ரி 116 ஆம் ஆண்டிலேயே இஸ்லாம் திருச்சியில் பரவியிருந்தது என்று கூறும் கல்வெட்டு இருக்கிறது. அப்போது கட்டப்பட்ட பள்ளிவாசலை இன்றும் திருச்சியில் காணலாம். திருச்சி மெயின் கார்ட் கேட்டிலிருந்து உறையூருக்குச் செல்லும் பாதையில், மேம்பாலத்திற்கு அருகில், கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில், ஹோலி கிராஸ் கல்லூரிக்குப் பின்பக்கத்தில் இடிபாடுகளுடன் காணப்படுகிறது அந்தப் புராதன பள்ளிவாசல். கல்மண்டபம் போல காட்சி தரும் அந்தப் பள்ளிவாசலைக் கட்டியவர் அப்துல்லா இப்னு முஹம்மது அன்வர் என்று குறிக்கப்பட்டுள்ளது…
பள்ளிவாசல் மிஹ்ராபுக்கு மேலே காணப்படும் கல்வெட்டில்…
” லாயிலாஹ இல்லல்லாஹு
முஹம்மது ரசூலில்லாஹி ”
என்ற மூலமந்திரமும், அதன் மேற்பகுதியில் வலப்பக்கமாக நான்கு கலீஸபாக்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பத்து நூற்றாண்டுகளுக்கு முன் சிரியா, ரோமாபுரி ஆகிய நாடுகளை ஆண்டுவந்த சையது அஹமது கபீர் என்ற பேரரசரின் மூத்த புதல்வராக ஹிஜ்ரி 347 துல்ஹஜ் மாதம் (கி.பி.1069), நத்ஹர்வலி பிறந்தார்கள். தந்தையார் சையது அஹமது கபீர், தாயாரின் பெயர் சையிதா பஃதஹுன்னிசா சாஹிபா. நத்ஹர்வலி அவர்கள் ஏழு வயது பாலகராக இருந்த சமயம் பேரரசர் சையது அஹமது கபீர் அவர்கள் காலமானார்கள். தந்தையின் மறைவைத் தொடர்ந்து நத்ஹர்வலி அவர்களே அரசராக முடிசூட்டப்பட்டார்கள்…
நத்ஹர்வலி அவர்கள் சிரியாவை ஆண்டு வரும்போது ஒருநாள் இரவு கனவு கண்டார்கள். இளைஞன் ஒருவன் நரக வேதனைகள் அனுபவிக்கிறான். சொல்ல முடியாத அவதிக்கு ஆட்பட்டு அழுகிறான். நத்ஹர்வலி அவர்கள் அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். தான் ஒரு பேரரசனாக விளங்கியதாகவும் அப்பொழுது உலக சுகங்களில் மூழ்கிக் களித்திருந்ததாகவும் இளைஞன் சொன்னான். தான் ஆட்சி செய்த காலத்தில் கொடுங்கோன்மை நிலவியதற்கு தண்டனையாகவே இந்த நரக வேதனைகளை அனுபவிப்பதாக அவன் கூறினான். இளைஞனின் பதிலைக் கேட்டு மற்றொரு பக்கம் பார்க்கிறார்கள் நத்ஹர்வலி. அங்கே முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சி ! மலர்களும் கனி வகைகளும் நிறைந்த சோலைவனத்தின் நடுவில் ஒரு மாளிகை…
பெரியவர் ஒருவர் இறைவனை வணங்கியபடி அமர்ந்திருக்கிறார். நத்ஹர்வலி அந்தப் பெரியவரை அணுகி விசாரிக்கிறார்கள். உலக வாழ்வில் ஓர் ஏழை ஃபக்கீராக இருந்து வந்ததாகவும், ஆனால் வாழ்நாள் முழுதும் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் சொல்கிறார் அவர். அதன் பயனாகவே தனக்கு இந்தச் சொர்க்க வாழ்வு கிடைத்திருக்கிறது என்கிறார். இந்தக் கனவுக்குப் பிறகு நத்ஹர்வலி நித்திரை கலைந்தார்கள். கனவுக் காட்சிகளைப் பற்றிய சிந்தனை எந்நேரமும் அந்த அரசரை சூழ்ந்து கொண்டிருந்தது. முடிதுறக்க முடிவு செய்தார்கள். நம்முடைய தம்பி, சையது ஜலாலுக்கு முடிசூட்டிவிட்டு சற்குருவைத் தேடிப் புறப்பட்டார்கள். அப்பொழுது அவர்களின் வயது 22…
ஹுர்முஸ் எனும் நகரில் தங்கி பாபா சையது இபுராஹிம் என்ற மகானிடம் முரீது
(ஞான தீட்சை) பெற்றார்கள். பிறகு 900 கலந்தர் ஸபக்கீர்களுடன் நத்ஹர்வலி புனித மக்காவுக்குப் பயணமானார்கள். ஹஜ்ஜுக் கடமைகளை நிறைவேற்றி விட்டு மதீனா நகருக்கு வந்தார்கள். இங்கு ஒரு வருடம் தங்கியிருந்தார்கள். அப்பொழுது இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே கழித்தார்கள். ஒருநாள் நபிகள் நாயகம் (ஷல்..) அவர்கள் கனவில் தோன்றினார்கள். கலந்தர் ஃபக்கீர்கள் தொள்ளாயிரம் பேரையும் அழைத்துக்கொண்டு கீழ்த்திசை நோக்கிச் சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யுமாறு பெருமானார் நாயகம் (ஸல்..) அவர்கள் ஆணை பிறப்பித்தார்கள். இந்த சன்மார்க்கப் பணியில் எதிர்ப்புகள் நேரிட்டால் போராடி வெற்றி பெறும்படியும் இறைவனின் திருவருள் துணை அதற்குக் கிடைக்கும் என்றும் நத்ஹர்வலி அவர்களுக்கு பெருமானார் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்…
அதன்படி கலந்தர்களுடன் கிழக்குத் திசையை நோக்கிப் பயணமானார்கள். கடற்கரை வந்தது. கலந்தர்களுடன் ஒரு மரக்கலத்தில் ஏறி நாற்பது நாட்களுக்குப் பிறகு மறுகரைக்கு வந்து சேர்ந்தார்கள். ஓர் அரசனின் உபசரிப்பில் சில நாள் தங்கியிருந்து விட்டு, அங்கிருந்து தென்திசையை நோக்கி நத்ஹர்வலி வந்தார்கள். வழியில் ஒருநாள் பூதகணங்கள் இழைத்த துன்பங்களையெல்லாம் தூள் தூளாக்கிவிட்டு, திர்ச்சலா என்ற அவற்றின் தலைவனையும் அழித்துவிட்டு, நத்ஹர்வலி கலந்தர் தோழர்களுடன் திருச்சிராப்பள்ளிக்கு வந்தடைந்தார்கள்…
திருச்சி அப்பொழுது திரிசிரபுரம் என்று அழதிரிசிரபுரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. தாயுமான சுவாமி மலை எனப்பட்ட மலைக்கோட்டை உச்சியில் நத்ஹர்வலி தங்கியிருந்தார்கள். ராட்சச திர்ச்சலாவின் அழிவினால் துயரத்தில் மூழ்கியிருந்த பூதக்கூட்டம் பழிவாங்கத் திட்டமிட்டது. ஒருநாள் நத்ஹர்வலி காலைத் தொழுகைக்குப் பிறகு தனியே ஓரிடத்திற்கு வந்து அமர்ந்து இறை நாமத்தைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பழிவாங்க அதுவே தக்க தருணம் என்று நினைத்த ராட்சசக் கூட்டம் திரண்டது. நத்ஹர்வலி அமர்ந்திருந்த இடத்திற்குப் பின்பக்கத்தில் மலையையொட்டி ஒரு பெரிய பாறை சாய்ந்த நிலையில் இருந்தது. அந்தப் பாறையைத் தள்ளி விட்டால் நத்ஹர்வலி அதில் சிக்கி விடுவார்கள். தங்கள் திட்டம் நிறைவேறி விடும் என்று கூட்டம் நினைத்தது…
பாறை தங்கள் மீது சாயப் போகிறது என்பதை தங்களின் ரகசிய சக்தியின் மூலம் நத்ஹர்வலி உணர்ந்து கொண்டார்கள். ராட்சசக் கூட்டம் அந்தப் பாறையை உருட்டிவிட்ட சமயத்தில் நத்ஹர்வலி எழுந்து நின்று, வலுவாக மலையில் காலை ஊன்றியபடி தங்களின் ஒரு கை பலத்தைக்கொண்டு பாறையைத் தாங்கிப பிடித்தார்கள். அந்தப் பாறை அதே நிலையில் நின்று விட்டது. இன்றுவரை அந்தப் பாறை முட்டுக்கால் இல்லாமல் அப்படியே இருப்பதைக் காணலாம். நத்ஹர்வலி அவர்களின் பாதங்கள் ஊன்றிய அடையாளமும் கையின் பதிவு அடையாளமும் மலையிலும் பாறையிலும் இன்றும் காணப்படுகின்றன. ராட்சசக் கூட்டம் இழிசெயலில் ஈடுபட்டதால் சினங்கொண்ட நத்ஹர்வலி தங்கள் சினப் பார்வையினால் அவற்றை அழித்து விட்டார்கள்…
திருச்சியையும் சுற்றுப்புறங்களையும் ஆட்சி புரிந்துவந்த அரசனுக்கும் ஹஜ்ரத் நத்ஹர்வலி அவர்களுக்குமிடையே சந்திப்பு நிகழ்ந்தது. நத்ஹர்வலி அவர்களின் ஆற்றலையும் மேன்மையையும் உணர்ந்த அரசன், அவர்கள் தங்கள் குழுவுடன் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிக்கே கேட்டுக்கொண்டான். நத்ஹர்வலி அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஓர் இரும்பு வளையத்தை எறிய வேண்டும் என்றும் அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தை அவர்கள் நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஓர் ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறே அவர்கள் வீசி எறிந்த வளையம் ராட்சசத் தலைவன் திரிசிராவின் சிலை மீது விழுந்தது. அந்த இடத்திற்கு கலந்தர் தோழர்களுடன் வந்து நத்ஹர்வலி குடியேறினார்கள். அதுவே அவர்களின் தர்காவாக இப்பொழுது விளங்கிக் கொண்டிருக்கிறது…
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், , ’DADA NATHAR VALI THAHASAK PHOTOGRAPHY’ எனச்சொல்லும் உரை















படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு
ஹஜ்ரத் சையது பாபா பஹ்ருத்தீன்,
ஈரானின் ஒரு பகுதியான சீஸ்தான் நாட்டின் மன்னராக விளங்கியவர். அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. அரச போகத்தை வெறுத்து, ஆன்மிக தாகம் கொண்டார். ஆகவே முடிதுறந்து, துறவறம் ஏற்று இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு இந்தியாவுக்கு வந்தார். கைபர் கணவாயைக் கடந்து, காஷ்மீர், பஞ்சாப், குஜராத் முதலான பகுதிகளில் சன்மார்க்க தீபம் ஏற்றி வைத்துவிட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தார். ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி அவர்களைச் சந்தித்தார். சோதனைகளுக்குப் பிறகு சையது பாபா பஹ்ருத்தீனுக்கு நத்ஹர்வலி அவர்கள் ஞானதீட்சை (முரீது) அளித்தார்கள். அவருக்கு நத்ஹர்வலி ஒரு கோப்பை அமுதத்தை ஆசீர்வதித்து அருந்தக் கொடுத்தார்கள்…
அதை அருந்திய பாபா பஹ்ருத்தீன் ஞான ஆனந்தக் களிப்பெய்தி கற்பாறையின் மேல் நின்றபடி துள்ளிக் குதித்து ஆடினார். அதனால் அந்தக் கற்பாறையே இளகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. திருச்சி, மதுரை சாலை வள்ளுவத் தெருவின் பின்பக்கத்தில் ஒரு மண்டபத்தின் கீழேயுள்ள பாறையில் காணப்படும் பாதச் சின்னங்கள் அவருடையது என்று கூறப்படுகிறது. பாபா பஹ்ருத்தீன் அவர்களின் மெய்ஞ்ஞான ஆனந்தக் களிப்பு ஆட்டத்தின் நினைவாக ரமலான் 14 ஆம் நாள் இரவு
” தூத்மலிதாமஸ்த் கலந்தர் ” என்று உச்சரித்தபடி தர்கா ஃபக்கீர்கள் துள்ளிக் குதித்து ஆரவாரிப்பது ஒரு சடங்காகி விட்டது. ஹஜ்ரத் நத்ஹர்வலியின் காலத்தில் தஞ்சை, திருச்சியை ஆண்டு வந்த சோழ மன்னனுக்குப் பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்தது. நத்ஹர்வலி அவர்களின் மகாத்மியத்தை அறிந்து மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த அரச தம்பதிகளுக்குப் பிள்ளைச் செல்வம் கிடைக்க ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்…
அவர்களின் கவலை தீரும் என்று கூறி ஒரு நிபந்தனையும் விதித்தார்கள் நத்ஹர்வலி. அரச தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இறைவன் அருளால் பிறக்கும் என்றும், முதல் குழந்தையை தங்களிடம் அவர்கள் ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறினார்கள். அரசனும் அரசியும் ஒப்புக்கொண்டார்கள். அதன்படி முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. நிபந்தனையின்படி அதை நத்ஹர்வலியிடம் ஒப்படைக்க அரச தம்பதி தயங்கினர். அதனால் அந்தக் குழந்தையின் கை, கால் மற்றும் உறுப்புகள் உள்ளுக்கு இழுக்கப்பட்டு தசைப்பிண்டமாக மாறி விட்டது. அதிர்ச்சி அடைந்த அரசனும் அரசியும் குழந்தையை ஹஜ்ரத் நத்ஹர்வலியிடம் கொண்டு வந்தனர். அவர்கள் இறைவனிடம் இறைஞ்சி குழந்தையை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார்கள்…
அந்தக் குழந்தைக்கு மாமாஜிக்னி என்று நத்ஹர்வலி பெயர் சூட்டி வளர்ப்பு மகளாக்கிக் கொண்டார்கள். சோழ அரசனுக்கு இரண்டாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கரிகாலன் என்று பெயரிடப்பட்டது. கரிகாலன் வாலிபனானதும் முடிசூட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது மாமாஜிக்னி கலந்துகொண்டார். அந்தப்பெண்மணியே முடியைச் சூட்டினார். ஹஜ்ரத் நத்ஹர்வலி ஹிஜ்ரி 417 ஆம் ஆண்டு (கி.பி.1039) ரமலான் மாதம் 14 ஆம் நாள் இஷா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது சஜ்தா நிலையிலேயே இறையடி சேர்ந்தார்கள். மறைவுக்கு முன்
27 வருட காலம் கலந்தரியா தரீக்காவில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்…
தப்லே ஆலம் பாதுஷா அவர்களின் திருக்கரத்தால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் திருக்குர்ஆன் கையெழுத்துப் பிரதியை அவர்களின் கருவறை தலைமாட்டுப் பக்கத்தில் பார்க்கிறோம். கறுப்பு மையினால் எழுதப்பட்டுள்ள இந்தத் திருக்குர்ஆன் கண்ணாடிப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரதியின் நீளம் இரண்டரை அடி. அகலம் ஒன்றரை அடி. 4 அங்குல பருமன் உள்ளது. நத்ஹர்வலி அவர்கள் கையடக்கமான திருக்குர்ஆன் பிரதியை மட்டுமே வைத்திருந்தார்கள் என்றும் இந்தப் பெரிய பிரதி அவர்களால் எழுதப்பட்டதுதானா என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது…
தர்கா ஷரிஃப் கருவறையிலே தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி அவர்களின் திருச்சமாதியைத் தரிசிக்கிறோம். தர்காஷரீப் சுவரில் உருது மொழியில் அவர்களின் வம்சாவழி விவரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. நத்ஹர்வலி அவர்களின் தலைமை அமைச்சர் ஹஜ்ரத் ஷம்ஸ் கோயா அவர்களின் சமாதி கருவறை சிராதிக்குள்ளேயே அமைந்திருக்கிறது. கால்மாட்டின் இடதுபுறத்தில் கலீபாஷா பாபா அப்துல் ரஹ்மான் ஆலே நூரி கலந்தரின் சமாதியும் அவர்களின் துணைவியார் சையிதா கல்தானுன்னிஸாவின் சமாதியும் இடம் பெற்றுள்ளன…
ஹஜ்ரத் நத்ஹர்வலி கருவறை நுழைவு வாசலுக்கு இடதுபக்கம் ஆற்காடு நவாப் முகம்மது அலி வாலாஜாவின் சமாதி உள்ளது. நவாப் முகம்மது அலியின் புதல்வர்கள் மஸ்ஹர் திலாவர் ஜங்கின் சமாதி தர்கா வெளி முற்றத்திலும் ஷாபாபா சையிது காயாகத்தீன் சுஹரவர்த்தியின் சமாதி தர்கா ஷரீப் முற்றத்தில் நான்கு சுவர்களுக்குள்ளும் இடம் பெற்றிருக்கின்றன. தப்லே ஆலம் பாதுஷா அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் விழா நடத்தப்பட்டு வருகிறது. ரமலான் பிறை பார்க்கப்பட்டதும் பான்வா, மலங், தப்காதி, ஜவாலி, ரியாயி ஆகிய ஐந்து பக்கீர் குழுவினரும் தர்காஷரீபுக்கு வந்து சேர்கின்றனர். டிரஸ்டிகளும் மற்றவர்களும் சூழ கொடி கம்பத்திற்குச் சென்று பரம்பரை டிரஸ்டியால் கொடியேற்றி வைக்கப்படுகிறது. பெணுகுண்டாவிலிருந்து வருகை தரும் பான்வா குழுவின் சற்குருவை பீடத்தில் அமர்த்தி வைக்கிறார்கள்…


ரமலான் பிறை 13, 14, 15 ஆகிய நாட்களில் விழா நடைபெறுகிறது. ரமலான் பிறை 16 அன்று பீர் சற்குரு பீடத்திலிருந்து எழுப்பப்படுகிறார். இது தப்லே ஆலம் பாதுஷா அவர்களின் மூன்றாம் நாள் ஜியாரத் அடையாளமாகக் கருதப்படுகிறது. தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி அவர்கள் தென்னாட்டில் மேற்கொண்ட சன்மார்க்கப் பணி சரித்திரமாக நிலைத்து விட்டது.
தகவல் : மைதீன் பாட்ஷா - 18/02/2020 மாலை 05:30  ஏர்வாடி பாதுஷா நாயகம்

No comments:

Post a Comment