Friday, November 28, 2014

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே ! உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டும் என்பது தான் எனது ஆவல். அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன்முதலில் ஆரத்தழுவி கட்டி அனைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்கள் . மனிதர்கள் அனைவரும் என்னை முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.
என்னை சுமப்பதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்பம் கட்ட சிரம்மத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய நமது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்தில்
என்னை மாட்டுத் தோலிலும்,மரக்கட்டைகளிலும் என்னை பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்து உள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ எனது சகவாசத்தை விரும்பாமல், சைத்தானின் சகவாசத்தை விரும்ப கூடியவர்களாக ஆகிவிட்டீர்கள்..
"கூடாய் நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழி " மறந்து விட்டதோ ?
என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வழியில் சொல்வதென்றால் "ஹுதன்னில் முத்தகீன்" இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்ட கூடியவனாக இருக்கிறேன். யார் என்ன நம்பி பின் பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர்களாக வாழச்செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.
இன்று யார் யாருக்கோ பின்னால் போய் கொண்டிருக்கும் மனிதர்களே !
அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.
டி.வி, என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடு தோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊது பத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே. அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வியில் தொடர் சீரியலை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளியாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ஜெயனும்பு பீவியே படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதப்போகிறாய்?

எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர்
[ஸல்] அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். "திருக்குர்ஆனிலிருந்து சிறதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார் "
என்னை ஓதினால், பிறர் ஓதக் கேட்டால், மனனம் செய்தல் என ஒவ்வொன்றுக்கும் இறைவனிடத்தில் நற்கூலி கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருட முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமளானில் மட்டுமே நினைக்க கூடியவர்களாக ஆகி விட்டீர்கள்.உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்து காட்டுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
அறிவுள்ளவர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாககிறார்களோ? அவர்களின் மரணத்திற்கு பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஐந்துகளின் தீங்கை விட்டும் நான் அவர்களை பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரைப்பேன்.
என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளிமயமாக இருக்கும். என்னைபற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந்தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல. உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !
குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி,
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..

No comments:

Post a Comment