Wednesday, December 17, 2014

வக்பு வாரிய தலைவருக்கான் ஊதிய தீர்மானம் ரத்து : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் எழும்பூரைச் சேர்ந்த ஏ.கே.ரபீக் பெய்க் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் அவற்றின் சொத்துகள் மீதான நிர்வாகத்தை கண்காணிப்பதற்காகவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசால் தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப்பட்டது. இதில் 13 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த வாரியத்தின் தலைவராக 2012-ம் ஆண்டில் இருந்து தமிழ்மகன் உசேன் உள்ளார். தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் சம்பளம் கிடையாது. வக்பு வாரியத்துக்கான அதிகாரம் குறித்து வக்பு சட்டத்தின் 32ம் பிரிவில் தெளிவாக கூறப்பட்டது.

அதன்படி, பள்ளிவாசல்களின் நிதி எதுவும் வீணாகிவிடக் கூடாது என்பதையும், பள்ளிவாசலின் நோக்கத்துக்காக அதன் வருமானம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கவுமே வக்பு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

வக்பு வாரிய சட்டத்தின் 110(1)(டி) பிரிவு, அதன் தலைவரோ அல்லது உறுப்பினரோ சில வகைக்கான செலவுத்தொகை அல்லது கட்டணத்தை பெற வழிவகை செய்கிறது. வக்பு வாரியத்துக்கு தரப்படும் நன்கொடை நிதி, வக்பு நிதியாக சேர்க்கப்பட்டு, அதன் ஊழியர்களுக்கான சம்பளம் உள்பட வக்பு வாரியத்துக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்.

எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வாரியத்தின் தலைவரும், உறுப்பினர்களும், போக்குவரத்து செலவை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிலையில் கடந்த 24.10.13 அன்று வக்பு வாரியத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், மாதந்தோறும் தலைவருக்கு அவர் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து ரூ.50 ஆயிரத்தை தொகுப்பூதியமாக வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரானதாகும்.

அந்த கூட்டத்தை தன்னிச்சையாக வக்பு வாரிய தலைவரே கூட்டி, அந்த தீர்மானம் நிறைவேறும் வகையில் உறுப்பினர்களிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார். இந்த தீர்மானத்தால் வக்பு வாரியத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டு, அதன் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக உள்ள அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். வக்பு வாரிய தீர்மானத்தின் அடிப்படையில் அதன் தலைவர் தனக்காக முன்தேதியிட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment