அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தொழுகை ஒரு பெண்ணுக்கு எப்போது கடமையாகும்?
குழந்தைகள் ஏழு வயதானவுடன் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தொழும் படி ஏவுவதும் அதன் ஷர்த்துகளை செய்யும்படி ஏவுவதும் பிறகு பத்து வயதானவுடன் தொழா விட்டால் காயப்படாமல் அடிப்பதும் கடமையாகும். பருவமடைந்ததில் இருந்து ஒரு பெண்ணுக்கு தொழுகை கடமையாகும்.
தொழுகை யாருக்கு கடமை இல்லை?
புத்தி சுவாதீனமற்ற பெண்களுக்கும், பருவமடையாத பெண்களுக்கும் தொழுகை கடமை இல்லை. அதேபோல், மாதத் தீட்டு, பிரசவ தீட்டுள்ள பெண்களுக்கும் அவர்கள் சுத்தமாகும் வரை தொழுகை கடமை இல்லை. அதாவது, விடுப்பட்ட தொழுகைகளை பின்னர் தொழ வேண்டியதில்லை.
பெண்கள் தொழுகையில் தன் அவ்ரத்தை எவ்வாறு மறைக்க வேண்டும்?
பெண்கள் முகத்தையும் இரு மணிக்கட்டுகளையும் தவிர உள்ள முடியும், நகமும் உட்பட மேனி முழுவதையும் மறைப்பது வாஜிபாகும். மேனி தெரியாத கெட்டியான துணியினால் மறைத்திட வேண்டும்.
பெண்கள் மாதவிடாய், பிள்ளைபேறு காலத்தில் தொழலாமா?
இந்த இரண்டு காலங்களிலும் பெண்கள் தொழுவதும், நோன்பு நோற்பதும் கூடாது. ஆனால், இந்த காலங்களில் விடுப்பட்ட நோன்புகளை களா செய்து நோற்க வேண்டும். ஆனால் அக்காலங்களில் விடுப்பட்ட தொழுகைகளை களாவாக பின்னர் தொழ வேண்டியதில்லை.
பெண்கள் வுழு செய்யும் முறை என்ன?
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பின்வரும் முறையில்தான் வுழு செய்ய வேண்டும். இவற்றில் சிலது பர்ளாகும். சிலது சுன்னத்தாகும்.
♦ முடிந்தால் கிப்லாவை முன்னோக்கி இருக்கவேண்டும். (சுன்னத்)
♦ அஹூது, பிஸ்மி, ஸலவாத்து சொல்லுதல். (சுன்னத்)
♦ இரு கைகளையும் மணிக்கட்டுவரை கோதி மூன்று முறை கழுவுதல். (சுன்னத்)
♦ பல் துலக்குதல் (மிஸ்வாக்) செய்தல். (சுன்னத்)
♦ வாய்க்கும், நாசிக்கும் சேர்த்து மூன்று தடவைகள் தண்ணீர் செலுத்த வேண்டும். (சுன்னத்)
♦ வுளுவுடைய பர்லை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத்து செய்துக்கொள்ளல். (பர்ளு)
♦ இரு கைகளினால் தண்ணீரை எடுத்து முகத்தை மூன்று தடவைகள் கழுவுதல். (பர்ளு)
♦ வலது கையை முழங்கை வரை மூன்று முறை கழுவுதல். பின்னர் இடது கையை முழங்கை வரை மூன்று முறை கழுவுதல். (பர்ளு)
♦ இரு கைகளின் உட்புறத்தால் தண்ணீரை தொட்டு தலை முழுவதையும் அல்லது சிறிது பகுதியை மஸ்ஹு செய்தல் (தடவுதல்). (பர்ளு)
♦ இரு கைகளின் உட்புறத்தால் தண்ணீரை தொட்டு இரு காதுகளுக்கும் மஸ்ஹு செய்தல். (சுன்னத்)
♦ வலது காலின் விரல்களை கோதி கரண்டை கால் வரை மூன்று முறை கழுவுதல். பின்னர் இவ்வாறே இடது காலை மூன்று முறை கழுவுதல். (பர்ளு)
♦ மேலே சொன்ன ஒழுங்கில் வரிசையாக எல்லாவற்றையும் செய்து முடித்தல். (பர்ளு)
♦ எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் சொன்ன எண்ணிக்கையில் செய்தல். (அதாவது மூன்று முறை என்றால் மூன்று முறை செய்தல். மூன்றை விட குறைத்தோ கூட்டியோ செய்வது மக்ரூஃ (வெறுக்கத்தக்கது) ஆகும்.
♦ உடல் உறுப்புக்களில் தண்ணீர்படும்போது அதிக இடத்தில் படும்படி நீட்டி கழுவுதல். (உதாரணமாக, கைகளை கழுவும்போது முழங்கை வரை கழுவுதல் கட்டாயம். ஆனால், அதைவிட எவ்வளவு நீட்டி கழுவுறோமோ, அவ்வளவுக்கு நல்லது. ஏனென்றால் வுழு தண்ணீர் பட்ட இந்த உறுப்புகள் எல்லாம் நாளை மறுமையில் பொன்னை போன்று பிரகாசிக்கும் என ஹதீஸில் வந்துள்ளது.
♦ வுழு செய்து முடித்த பின் கிப்லாவை நோக்கி கீழ் காணும் துஆவை ஓத வேண்டும்:
அஷ்ஹது அன்லாஹிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅஷ்அது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு அல்லாஹுமஜ்ஹல்னி மினத் தவ்வாபீன வஜ்அல்னி மினல் முததஹரீன வஜ்அல்னி மின் இபாதிகஸ் ஸாலிஹீன். ஸுப்ஹானகல்லாஹும்மா வபிஹம்திக அஷ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்.
மேற்கூறப்பட்ட துஆவை ஓதுபவருக்கு, அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவற்றில் எதில் அவர் புக விரும்புகிறாரோ, அதில் அவர் நுழைவார் என ஹதீஸில் வந்துள்ளது.
பெண்கள் தொழும் முறை என்ன?
♦ முதலில் நிய்யத் வைக்க வேண்டும்
தொழுகையின் நிய்யத்
நிய்யத் என்பது மனத்தால் எண்ணி வாயால் மொழிவதாகும். எந்த நேர தொழுகையை தொழுகிறோமோ, அந்த நேர தொழுகையை குறிப்பிடுவதும், பர்லான தொழுகைக்கு பர்லு என்றும் ஸுன்னத்தான தொழுகைக்கு ஸுன்னத் என்றும் குறிப்பிடுவது அவசியம்.
தமிழில் நிய்யத்து செய்தல்
அரபியில் நிய்யத் செய்ய தெரியாதவர்கள் தமிழில் நிய்யத் செய்துக்கொள்ளலாம்.
உதாரணம் - பர்லான ஸுப்ஹு தொழுகையின் இரண்டு ரக்அத்தை கஃபாவை முன்னோக்கியவளாக அல்லாஹ்வுக்காக தொழுகிறேன். அல்லாஹு அக்பர் என்று நிய்யத்து செய்து கொள்ள வேண்டும். மற்ற நேர தொழுகைகளுக்கும் அந்த அந்த நேரத் தொழுகையை குறிப்பிட்டு நான்கு ரக்அத், மூன்று ரக்அத் என்று சொல்லி நிய்யத்து செய்து கொள்ள வேண்டும்.
தொழுகையில் கண்ணோக்கும் இடம்
தொழுகையில் அங்கும் இங்கும் பார்க்காமல் எல்லா நிலையிலும் ஸஜ்தா செய்யும் இடத்தையே நோக்க வேண்டும். அப்பொழுது தான் உள்ளச்சத்துடன் தொழுகும் நிலை ஏற்படும்.
♦ தொழுகைக்காக தக்பீர் கட்ட ஆயத்தமாகி நிய்யத்தை மனதில் நினைத்தவாறு வாயால் கூறி ஆடாமல், அசையாமல் கஃபாவின் திசையை நோக்கி நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். உள்ளச்சத்துடனும், பயபக்தியுடனும் உலக ஆசாபாசங்களை உள்ளத்தை விட்டு நீக்கி படைத்தவனை தொழுவதற்காக நிற்க வேண்டும்.
♦ அதன் பிறகு இரு காதுகளுக்கும் நேராக இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் கீழே கொண்டு வந்து மார்புக்கும் தொப்புளுக்கும் மத்தியில் இடது கையை வைத்து அதன் மணிக்கட்டை வலது கையினால் பிடித்து தக்பீர் கட்டிக்கொள்ள வேண்டும்.
♦ தக்பீர் கட்டி முடிந்தவுடன் வஜ்ஜஹ்து ஒதுவது சுன்னத்தாகும். (முதல் ரக்அத்தில் மட்டும்தான் வஜ்ஜஹ்து ஒதுவது சுன்னத். மற்ற ரக்அத்களில் ஓத கூடாது)
“வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ பதரஸ்ஸமாவாத்தி வல் அர்ழ ஹனீபம் முஸ்லிமன் வமா அனமினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தி வனுஷ்கி வமஹ்யாய வமமாத்தி லில்லாஹி ரப்பில் ஆலமீன் லாஷரீகலஹு வபிதாலிக்க உமிர்த்து வஅன மினல் முஸ்லிமீன்”
♦ பின்பு ஸுரத்துல் பாத்திஹா (அல்ஹம்து சூரா) ஓத வேண்டும். இது பர்ளாகும். பின்னர் குர்ஆனில் உள்ள ஏதேனும் ஓர் சூரத்தை ஓத வேண்டும். இது முதல் ரக்அத்திலும் இரண்டாவது ரக்அத்திலும் மட்டும்தான். மற்றைய ரக்அத்துகளில் சூரா பாத்திஹா மட்டும் ஓதினால் போதும்.
♦ அனைத்தையும் ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் எனக் கூறி ருகூஃ (குனிதல்) க்கு வரவேண்டும். அந்த ருகூஃ இல், “ஸுப்ஹான ரப்பியல் அலீம் வபிஹம்திஹி” என்று மூன்று முறை கூற வேண்டும்.
♦ பிறகு “ஸமிஅல்லாஹு லிமன் ஹமீதஹ்” என்று கூறிய வண்ணம் இஃதிதால் என்னும் நிலைக்கு வந்து நிமிர்ந்து நிற்க வேண்டும். இவ்வாறு நிற்கும் போது, “ரப்பனா லகல் ஹம்து மில்அஸ்ஸமாவாத்தி வமில் அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷைஇன் பஃது” என்று கூறிவிட்டு
♦ அல்லாஹு அக்பர் என கூறி ஸுஜூது செய்வதற்காக பூமியில் பணியவேண்டும். இவ்வாறு ஸுஜூதில் இருக்கும் சமயத்தில், “ஸுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி” என்று மூன்று முறை கூற வேண்டும்.
♦ பின் அல்லாஹு அக்பர் என கூறியவாறு கஃதா எனப்படும் சிறு இருப்பில் அமர வேண்டும். இவ்வாறு சிறு இருப்பில் இருக்கும் போது பின்வருமாறு கூற வேண்டும். “ரப்பிஃ பிர்லி வர்ஹம்னி வஜ்புர்னி வரபஃனி வர்ஸுக்னி வஹ்தினி வஆபினீ வஃபுஅன்னி” என்று கூறிவிட்டு
♦ மறுபடியும் அல்லாஹு அக்பர் எனக் கூறியவண்ணம் ஸுஜூதுக்கு பணிய வேண்டும். அதிலும் மேலே கூறப்பட்ட ஸுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி என்று மூன்று முறை கூறிவிட்டு,
♦ அல்லாஹு அக்பர் எனக் கூறியவண்ணம் சிறு இருப்புக்கு வந்து அதில் தாமதிக்காமல் இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்து நிற்க வேண்டும்.
♦ இவ்வாறே இரண்டாம் ரக்அத்தையும் தொழுது முடித்துவிட்டு, இரண்டாம் ரக்அத்தின் இரண்டாம் ஸுஜூதுக்கு பின் அமர்ந்து அதாவது வலது கால் விரல்களை நட்டி வைத்து சவணத்தின் மீது அமர்ந்து அத்தஹியாத்தை ஓத வேண்டும்.
“அத்தஹியாத்து முபாரகாத்துஸ் ஸலவாத்து தய்யிபாத்து லில்லாஹி அஸ்ஸலாமு அழைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹி ஸாலிஹீன் அஷ்ஹது அன்லாஇலாஹா இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மத் ரஸுலுல்லாஹி அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்.”
அத்தஹியாத்து ஓதும் போது அஷ்ஹது அன்லா இலாஹா இல்லல்லாஹு என்று ஓதுகின்ற நேரம் வலது கையின் கலிமா விரலுடன் அதன் பக்கத்து விரலை (பெருவிரலை) துணையாக சேர்த்து வைத்துக்கொண்டு கலிமா விரலை மட்டும் உயர்த்தி நீட்டிய வண்ணம் பிடித்திருக்க வேண்டும். விரலை ஆட்டவோ அசைத்துக்கொண்டோ இருக்ககூடாது.
♦ மேற்கூறியவாறு முஹம்மதின் வரை அத்தஹியாத்து ஓதி முடிந்த பிறகு மூன்றாம் ரக்அத்துக்காக அல்லாஹு அக்பர் என்று கூறிய வண்ணம் எழுந்து நிலைக்கு வரவேண்டும்.
♦ மூன்று அல்லது நான்கு ரக்அத் தொழுகையாயின் பிந்திய இரண்டு ரக்அத்துக்களையும் முந்திய இரண்டு ரக்அத்துக்கள் போன்றே தொழ வேண்டும். ஆனால் பிந்திய இரு ரக்அத்துக்களில் அல்ஹம்து சூரா (ஸுரத்துல் பாத்திஹா) மட்டும் ஓத வேண்டும். அத்துடன் வேறு சூராக்கள் ஓத வேண்டிய அவசியமில்லை.
♦ இவ்வாறு நிறைவேற்றிய தொழுகையின் கடைசி ரக்அத்தில் (அதாவது நான்காவது, மூன்றாவது அல்லது இரண்டாவது ரக்அத்தில்) இரண்டு ஸுஜூதுகள் முடிந்த பின் கஃதா என்னும் சிறு இருப்பில் அமர வேண்டும். அதாவது சவணத்தை தரையில் வைத்து இடது காலை வலது காலின் கீழே வெளியில் பாதம் தெரியுமாறு படுக்கவைத்து வலது காலின் விரல்களை நட்டிவைத்து அமர்வதாகும்.
♦ முன் கூறப்பட்ட அத்தஹியாத்துடன் கீழ் வருகின்ற ஸலவாதத்தையும் சேர்த்து ஓத வேண்டும். “வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.”
♦ மேற்கூறியவாறு அத்தஹியாத்தை கடைசி வரை ஓதி முடித்த பிறகு வலது பக்கம் முகத்தை திருப்பி, “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று ஸலாம் கூறவேண்டும். இவ்வாறே இடது பக்கமும் முகத்தை திருப்பி, “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்.
குறிப்பு: மேலும் விளக்கங்களுக்கு அறிஞர்களை அணுகி நபி(ஸல்) அவர்களின் தொழுகை முறையை அறிந்து கொள்ளவும்.
நன்றி சிறப்பு அன்பு குட்டி-
to
No comments:
Post a Comment