அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!♥♥♥
♦♦♦ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
இது உமாமா பின்த் அல்ஹாரிஸ் என்ற பெண்மணி தனது மகளின் திருமண நாளின் போது கணவனது வீடு நோக்கிச் செல்லத் தயாராகும் மகளுக்கு வழங்கிய விலைமதிக்க முடியாத அறிவுரை.
எனது அன்பு மகளே! ஒரு பெண் வளர்க்கப்பட்ட விதத்தாலும் அவளுடைய சிறந்த பண்பாடுகளாலும் அவளுக்கு உபதேசம் தேவைப்படாது என்றிருந்தால் அது நிச்சயம் நீயாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் உபதேசம் மறந்தவர்களுக்கு ஞாபகமூட்டுகின்றது, அறிவுள்ளவர்களுக்கு வழிகாட்டுகின்றது.
அதே போன்றுதான் ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோரின் செல்வ நிலை காரணமாகவும் அவர்கள் அவள் மீது வைத்திருக்கின்ற அன்பின் காரணமாகவும் திருமணம் தேவைப்படாது என்றிருந்தால் அதுவும் நீயாகத்தான் இருக்க வேண்டும், ஆனால் ஆண்கள் பெண்களுக்காகவும் பெண்கள் ஆண்களுக்காகவும் படைக்கப்பட்டிருப்பது இறைநியதியாகும்.
எனதன்பு மகளே!
நீ இப்போது நீ வாழ்ந்த சூழலிருந்து வேறொரு சூழலை நோக்கிப் போகின்றாய், நீ வளர்ந்த கூட்டிலிருந்து சிறகு முளைத்துப் பறக்கின்றாய், உனக்கு அறிமுகமானவர்களை விட்டும் பிரிந்து அறிமுகமற்ற முகங்களை சந்திக்கப் போகின்றாய், உனது தந்தையின் பொறுப்பிலிருந்தும் விடுபட்டு உனது கணவனின் பொறுப்பின் கீழ் இடம்மாறுகின்றாய். இனி உனது கணவன் தான் உனது பொறுப்பாளனும் உனது நிர்வாகியும் ஆவான்.
எனவே நீ அவனுடன் மிகவும் பணிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள், அப்போது அவன் நிச்சயம் உனது பணியாளனாகவே மாறி விடுவான். அவனுக்கு கட்டுப்படும் விடயத்தில் நீ பூமியாக இருந்தால் உன்னைப் பாதுகாக்கும் வானமாகவே அவன் மாறி விடுவான்.
#அவனுக்காக பத்து பண்புகளை உன்னில் ஏற்படுத்திக் கொள், அவை உனது வாழ்வின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களாக இருக்கும்.
📛எப்போதும் அவனுக்கு கட்டுப்பட்டு பணிவுடன் நடந்து கொள், அவனது பேச்சுக்கு எப்போதும் நல்ல முறையில் செவி தாழ்த்தி மிக நல்ல முறையில் கட்டுப்படு.
📛அவனது கண் உனது உடம்பில் எதையெல்லாம் பார்க்குமோ அதையெல்லாம் மிகவும் சுத்தமாகவே வைத்துக் கொள், அப்போது அவன் நிச்சயமாக உன்னில் எந்த அசிங்கத்தையும் காண மாட்டான்.
📛அவன் உனது உடம்பில், உடையில் எதையெல்லாம் நுகருவானோ அவற்றையும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள், அவன் உன்னில் நறுமணத்தைத் தவிர வேறு எந்த வாசத்தையும் நுகராமல் இருக்கட்டும்.
📛அவனுடைய சாப்பாட்டு நேரத்தில் மிகவும் கரிசனையோடிரு, ஏனெனில் பசியின் தாக்கம் பயங்கரக் கோபத்தை உண்டுபன்னக் கூடியது.
📛அவனுடைய தூக்கம் உன்னால் கலையாமலிருக்கட்டும், ஏனென்றால் தூக்கத்துக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் எரிச்சலாகத் தான் வெளிப்படும்.
📛அவனது சொத்துக்கள் விடயத்தில் சிக்கனமாகவும் அமானிதமாகவும் நடந்து கொள்.
📛அவனது குழந்தைகளையும் அவனிடத்தில் வேலை பார்ப்பவர்களையும் சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகிக்கப் பழகிக் கொள்.
📛அவனது வேண்டுதல்கள் எதனையும் மறுக்காதே! அவனது கட்டளைகள் எதற்கும் மாறு செய்யாதே! நீ அப்படிச் செய்தால் அது உன்பற்றிய அதிருப்தியை அவனது உள்ளத்தில் ஏற்படுத்தி விடும்
📛அவனது இரகசியங்கள் எதனையும் பகிரங்கப்படுத்தி விடாதே! நீ அவ்வாறு செய்தால் நிச்சயம் அவனது பழிவாங்கலிலிருந்து நீ தப்ப மாட்டாய்.
📛அவன் மகிழ்ச்சியோடு இருக்கும் போது நீ கவலையை வெளிக் காட்டாதே! அவன் கவலையோடு இருக்கும் போது நீ மகிழ்ச்சியை வெளிக்காட்டாதே! ஏனெனில் நீ அவ்வாறு நடந்து கொண்டால் நீ வளர்க்கப்பட்ட விதம் குறித்து உன் கணவன் சந்தேகப்படுவான்.
எனதருமை மகளே! இதற்கும் மேலதிகமாக இன்னுமொன்றையும் ஞாபகத்தில் இருத்திக் கொள்!
நீ அவனை எந்தளவு மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றாயோ அந்தளவுக்கு அவன் உன்னை கண்ணியமாக வைத்திருப்பான்.
நன்றாக நினைவில் கொள்! நீ உனது ஆசைகளை விட உனது தேவைகளை விட உன் கணவனின் ஆசைகளையும் தேவைகளையும் முற்படுத்தாத வரையில் ஒரு போதும் உன்னால் உனது ஆசைகளையோ தேவைகளையோ அவன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது.
(அன்பின் பெற்றோர்களே! உங்களது மகளின் திருமணத்தின் போது நீங்கள் என்ன வகையான விடயங்களை அவளுக்கு சொல்லிக் கொடுக்கின்றீர்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் அன்றைய தினத்தில் பேசும் வார்த்தைகள் ஒரு நல்ல குடும்பத்துக்கு அத்திவாரமாகவும் அமையலாம், அல்லது உங்களது மகளின் வாழ்க்கைக்கு நீங்களே வைக்கும் ஆப்பாகவும் அமையலாம். தெரிவு உங்கள் கையில்.)
நன்றி :
Mohammed Sabry Sahwi - துஆக்களின் தொகுப்பு
No comments:
Post a Comment