Saturday, September 29, 2018

அல்குர்ஆனை ஓதியபோது, வந்திறங்கிய மலக்குகள்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குர்ஆனை ஓதுவது என்றால் உஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மிகவும் ஆசை!
தனியாக உட்கார்ந்து ஓதிக்கொண்டே இருப்பார்.
அதுவும் இரவு நேரத்தில், மக்கள் எல்லாம் தூங்கிய பிறகு, நட்சத்திரங்கள் மட்டும் விழித்திருக்கும் நேரத்தில் தனியாக உட்கார்ந்து ஓதுவார்.
ஒருநாள் அதேபோல இரவுநேரம் ஊரெல்லாம் இருட்டு கவிந்திருந்தது. தூங்க மனம் வரவில்லை உஸைதுக்கு! இரவு நேரத்தில் இறை அடியார்கள் தூங்க நினைக்க மாட்டார்கள். இறைவனை வணங்க வேண்டும்: குர்ஆனை ஓதவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.
வீட்டின் கொல்லைப் புறத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். பக்கத்தில் தன்னுடைய மகனையும் படுக்கவைத்துக் கொண்டார்.
கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய குதிரை கட்டிப் போடப்பட்டிருந்தது. ஜிஹாதில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஆசையோடு வாங்கிய குதிரை அது!!
நிலவில்லாத வானம் அமைதியாக காணப்பட்டது.
விண்மீன்களும் மௌனமாக உட்கார்ந்தன.
முதல் அத்தியாயம் அல்பகராவை ஓதத் தொடங்கினார்.
குர்ஆனை ஓதுவதாக இருந்தால் இனிமையாக ஓதவேண்டும். என்று அல்லாஹவின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம் சொல்லி உள்ளார்கள் அல்லவா?
அலிஃப், லாம், மீம்----- என்று ஓதிக் கொண்டே போனார்.
திடீரென்று அவருடைய குதிரை கனைத்தது..
துள்ளிக் குதித்தது!
கட்டியுள்ள கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிடும் போலத் தோன்றியது.
உஸைத் அதைப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ஓதுவதை நிறுத்திவிட்டார்.குதிரையும் அமைதியாகிவிட்டது.
சத்தம் போடாமல் நின்று கொண்டது.
மீண்டும் உஸைத் குர்ஆனை ஓதத் தொடங்கினார்.
உலாயிக்க அலா ஹூதம் மிர்ரப்பிஹிம் வ உலாயிக்க ஹுமுல் முஃப்லிஹூன்....
குதிரை மீண்டும் கனைத்தது..
திமிறியது:
கால்களை உதைத்துக் கொண்டது.
உஸைத் பயந்து போனார்.
குதிரை பிய்த்துக் கொண்டுவந்து பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டுள்ள குழந்தையை உதைத்துவிட்டால் என்ன செய்வது என்று பயப்பட்டார்.
குர்ஆன் ஓதுவதை நிறுத்திவிட்டார்.
குதிரையும் அமைதியாகிவிட்டது.
குழந்தையை எடுப்பதற்காக குழந்தையின் பக்கத்தில் சென்றார்.
எழுந்துநின்று வானத்தைப் பார்த்தவர் திகைப்படைந்து நின்றுவிட்டார். வானத்தில் எங்கும் மேகங்கள் நிறைந்து இருந்தன.
ஏதோ! ஒளியால் நிரம்பிய தொட்டியில் முக்கி எடுத்தவை போல அவை காணப்பட்டன.
என்னவென்று உற்றுப்பார்ப்பதற்குள் அவை மறைந்துவிட்டன.
காலையில் நடந்த விஷயங்களை எல்லாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கூறினார்.
எல்லாவற்றையும் கேட்டபிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
நீங்கள் ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?
நீங்கள் ஓதுவதைக் கேட்க மலக்குகள் வந்து இருந்தார்கள்.
காலைவரை நீங்கள் ஓதி இருந்தால் மக்களும் அவர்களைப் பார்த்திருப்பார்கள்!!
எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் ஈடுபாட்டோடு செய்யவேண்டும்.
குர்ஆனை ஓதுவதாக இருந்தால் இறை அச்சத்தோடும் இக்லாஸோடும் ஓதவேண்டும்
இறைவனின் வேதமான குர்ஆனை அதிகம் அதிகம் ஓதகூடிய நற்பாக்கியத்தை எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானக

No comments:

Post a Comment